ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது - ஜாக்டோ - ஜியோ மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: என் மீதும், அரசு மீதும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் வைத்துள்ள நம்பிக்கை வீண்போகாது. என்றைக்கும் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பேன் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் ‘வாழ்வாதார நம்பிக்கை மாநாடு’ சென்னை தீவுத்திடலில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டுப் பேருரை நிகழ்த்தி பேசியதாவது:

நீங்கள் அரசு ஊழியர்கள். நான் மக்கள் ஊழியன். அரசும், அரசியலும் இரண்டற கலந்தது. இதை யாராலும் பிரிக்க முடியாது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று, 6-வது முறை ஆட்சியை பிடித்தது. இதற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களுமே காரணம். அந்த நன்றிஉணர்ச்சியுடன் இங்கு வந்துள்ளேன்.

கடந்த ஓராண்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், சலுகைகள், உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக அனைத்து வகையான தற்காலிக பகுதிநேர பணியில் இருக்கும் சுமார் 16 ஆயிரம் ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் 60 வயது வரை தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறது. இந்த பணியாளர்களின் சுய விருப்பத்துக்கு ஏற்ப, இணைய வழியிலான இடமாறுதல் கலந்தாய்வு அக்டோபர் 15-ம் தேதி முதல் நடத்தப்படும்.

அதேபோல, ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக மறுசீரமைப்புக்காக ஏற்படுத்தப்பட்ட அரசாணைகள் 101, 108 ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. இதன்வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தொடக்க கல்விக்கு என்று அலுவலர் பணியிடம் புதிதாக கிடைக்கப் பெறுவதுடன் தனியார் பள்ளிகளை நிர்வகிக்க மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் புதிதாக உருவாக்கப்படவுள்ளது.

மேலும் ஆங்கிலோ - இந்தியன் பள்ளிகளின் நீண்ட நாள் கோரிக்கைப்படி, அந்த பள்ளிகளை ஒரேகுடையின் கீழ் கொண்டு வருவதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிதி நிலைமை சீரான பிறகு மேலும் அறிவிப்பு வரும்.

உங்கள் குறைகள் எதுவாக இருந்தாலும், உங்கள் துறை அமைச்சரிடம் முறையிடலாம். அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் நிச்சயம் எடுக்கப்படும். உங்கள் நம்பிக்கைக்கு என்றைக்கும் பாத்திரமாக இருப்பேன். அதில் யாருக்கும் எள்அளவும் சந்தேகம் வேண்டாம். உங்கள் நம்பிக்கை நிச்சயம் வீண்போகாது. இவ்வாறு முதல்வர் கூறினார்.

அமைச்சர்கள் பேசியதாவது:

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி: அரசு ஊழியர்கள் ஆட்சியின் ஒரு அங்கம் என்று தெரிவித்ததுடன் அவர்களுக்கு தேவையான, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை மறைந்தமுதல்வர் கருணாநிதி நிறைவேற்றினார். அதேபோல, தற்போதையமுதல்வர் ஸ்டாலின் உங்கள்கோரிக்கைகளை நிறைவேற்றுவார். புதிய கல்விக் கொள்கை எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்து மாணவர்களிடம் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி: ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என இந்தியாவுக்கே வழிகாட்டியாக முதல்வர் ஸ்டாலின் உள்ளார். தன்னை முதல்வர் என்று சொல்வதைவிட, உங்களில் ஒருவன் என்றே சொல்லக்கூடியவர்.

அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு: முதல்வர் ஸ்டாலின் உழைக்கக் கூடியவர். சலிப்பு அடையாதவர். அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களையும், கருணாநிதியையும் பிரித்துப் பார்க்க முடியாது. திமுக ஆட்சியில் இல்லாதபோது, உங்களோடு போராட்டத்துக்கு வரும். ஆட்சியில் இருக்கும்போது உங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை முழுவதுமாக ரத்து செய்யும். இது திராவிட மாடல் ஆட்சி. உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் முதல்வர் நம்மிடம் உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாநாட்டுக்கு ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஆ.செல்வம், ப.குமார், இரா.தாஸ், ஜெ.காந்திராஜ், எஸ்.சங்கர பெருமாள், கு.வெங்கடேசன், ஆ.ஆறுமுகம், செ.முத்துசாமி, அ.வின்சென்ட் பால்ராஜ், கி.மகேந்திரன், வி.எஸ்.முத்துராமசாமி, மு.அன்பரசு, அ.மாயவன், ச.மயில், ஆர்.பெருமாள்சாமி, சி.சேகர், பொன்.செல்வராஜ், இலா. தியோடர் ராபின்சன், நா.சண்முகநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில ஒருங்கிணைப்பாளர் கு.தியாகராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாநாட்டில் புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஒய்வூதியத்தை அமல் செய்தல், தேசிய கல்விக் கொள்கை, ஜிஎஸ்டி வரி ஆகியவற்றை மத்திய அரசு திரும்ப பெறுதல், பள்ளிக்கல்வியில் ஆணையர் பணியிடத்தை ரத்துசெய்தல், ஆசிரியர்களின் ஊதியமுரண்பாடுகளை களைந்து சமவேலைக்கு சம ஊதியம் வழங்குதல், அகவிலைப்படி உயர்வை முன்தேதியிட்டு வழங்குதல், பள்ளிக்கல்வியில் எமிஸ் நிர்வாக பணிகளை குறைத்தல், அரசாணைகள் 101, 108 ஆகியவற்றை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்