நடைபயணத்தில் பிரிவினைவாதிகளை சந்திக்கிறார் ராகுல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

இந்திய மகளிர் கூடைப்பந்து அணியின் கேப்டனாக இருந்த அனிதா பால்துரைக்கு தமிழக பாஜக சார்பில் கார் பரிசளிக்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, கார் சாவியை அனிதா பால்துரைக்கு வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து, அர்ஜூனா விருதுபெற்ற ஆணழகன் பாஸ்கரன், மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

அதேபோல, முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே தலைமையில் 200 பேர் பாஜகவில் இணைந்தனர். அவர்களுக்கு அண்ணாமலை கட்சி உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.

மேலும், நீட் தேர்வில் தேர்ச்சிபெற்ற அரசுப் பள்ளி மாணவிஅகிலாண்டேஸ்வரி, அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர், அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெங்களூருவில் பணிபுரிந்து வந்தாலும், தூத்தூக்குடி, நெல்லை பகுதிகளுக்குச் சென்று, ஏழைக் குழந்தைகளுக்கு கூடைப்பந்து பயிற்சி அளித்து வருகிறார் அனிதா பால்துரை. அவரது பயணத்தை எளிமையாக்கும் வகையில் தமிழக பாஜக சார்பில் கார் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வை வைத்து அரசியல்செய்ய வேண்டும் என்பது எங்கள்நோக்கமல்ல. 2016-ம் ஆண்டிலிருந்தே நீட் தேர்வால் பிரச்சினை இருந்தது உண்மைதான்.

தமிழகத்தில் பாடத் திட்டங்கள் மாறிய பிறகு, மாணவர்கள் நீட்தேர்வை தைரியமாக எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால், அத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்துகூட சொல்வதில்லை.

நீட் தேர்வு வேண்டாம் என்று திமுக கூறினாலும், நிச்சயம் நீட் தேர்வு நடைபெறும். தமிழகத்தைத் தவிர, வேறு மாநில முதல்வரும் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்கிறது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் பேச்சும், மாணவர்களை ஊக்கப்படுத்துவதாக இல்லை.

நடைபயணத்தின்போது பிரிவினைவாதிகளை மட்டும்தான் சந்திக்கிறார் ராகுல் காந்தி. அவரது நடைபயணம் இந்தியாவை இணைக்கவா அல்லது இந்தியாவைப் பிரிக்கவா என்ற கேள்வி எழுகிறது.

தமிழகம் கல்வியில் முன்னேறிய மாநிலமாக உள்ளது. ஆனால்,அர்விந்த் கேஜ்ரிவாலை அழைத்துவந்து, டெல்லி மாடலைப் பின்பற்றுகிறோம் என்று கூறுவது தமிழகத்துக்குப் பெருமை அல்ல.

இத்தகைய நிகழ்வுகள், காங்கிரஸை விலக்கிவிட்டு அர்விந்த் கேஜ்ரிவாலை சேர்த்து புதியஅணியை உருவாக்க வேண்டுமானால் முதல்வர் ஸ்டாலினுக்குப் பயன்படலாம்.

பள்ளி ஆசிரியர்களையும் அரசியலுக்குப் பயன்படுத்துகின்றனர். நான் தேர்தலில் போட்டியிட்டபோது, எனக்கு எதிராக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பிரச்சாரம் செய்தனர். அரசுப்பள்ளிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE