சென்னை: நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 80% தோல்வி அடைந்ததற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்திருப்பது வருத்தமளிக்கிறது. குறிப்பாக இத்தேர்வில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்களில் 80 விழுக்காட்டினர் தோல்வியடைந்திருப்பது வேதனையளிக்கிறது. மருத்துவப் படிப்பில் சேரும் அளவுக்கு இல்லாவிட்டாலும், நீட்டில் வெல்லும் அளவுக்கு கூட அரசு பள்ளி மாணவர்கள் தயார்படுத்தப்படாதது கண்டிக்கத்தக்கது.
2022-ஆம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 51.20% மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இது தேசிய சராசரியான 56.30 விழுக்காட்டை விட 5.10% குறைவு ஆகும். 2020-ஆம் ஆண்டில் 57.40% ஆகவும், 2021-ஆம் ஆண்டில் 54.40% ஆகவும் இருந்த நீட் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடப்பாண்டிலும் குறைந்து இருப்பது வருத்தமளிக்கிறது. மாணவர்களின் மதிப்பெண் விகிதமும் பெருமளவில் குறைந்திருக்கிறது.
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தான் மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. தமிழகத்திலிருந்து நடப்பாண்டில் நீட் தேர்வு எழுதிய 1,32,167 பேரில், 12.86% மாணவர்கள் தான் அரசு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். இதுவே மிகக்குறைந்த விகிதம் ஆகும். அவர்களிலும் கூட சுமார் 80%, அதாவது 3400 மாணவர்கள் மட்டும் தான் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் 720-க்கு 450 முதல் 471 மதிப்பெண் பெற்றவர்கள் வெறும் மூவர் மட்டும் தான். நடப்பாண்டில் பட்டியலினம், பழங்குடியினர் தவிர மற்ற பிரிவுகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 515-க்கும் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5% ஒதுக்கீடு மட்டும் இல்லாவிட்டால், அரசு பள்ளி மாணவர்களில் ஒருவருக்குக் கூட இடம் கிடைக்க வாய்ப்பில்லை.
» கோவை அருகே 120 அடி ஆழ கிணற்றில் கார் பாய்ந்து விபத்து: 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவது ஒருபுறம் இருக்கட்டும், நீட் தேர்வில் வெற்றி பெறும் அளவுக்குக் கூட அவர்கள் மேம்படுத்தப்படவில்லை என்பது தான் வெட்கப்பட வேண்டியதாகும். அரசு கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் சேர குறைந்தது 75% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஆனால், நடப்பாண்டில் நீட் தேர்வில் வெற்றி பெற பொதுப்பிரிவினர் 117 (16.25%) மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 93 (12.91%) மதிப்பெண்களும் எடுத்தால் போதுமானது. வெற்றிக்குத் தேவையான 12.91% மதிப்பெண்களைக் கூட எடுக்க முடியாத நிலையில் தான் அரசு பள்ளிகளின் மாணவர்கள் இருக்கிறார்கள் என்றால், இந்த அவல நிலைக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது; பயிற்சி பெறாவிட்டால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாது; பயிற்சி பெறுவதற்கு வாய்ப்பில்லாத கிராமப்புற, ஏழை மாணவர்களால் நீட் தேர்வை கடந்து மருத்துவப் படிப்புகளில் சேருவது சாத்தியமற்றது என்பதை பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. அதனால் தான் நீட் தேர்வை கடுமையாக எதிர்க்கிறது. ஆனால், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 35%க்கும் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று 85% அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறும் போது, அதில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு 12.91% மதிப்பெண் பெற்று அவர்களை நீட் தேர்வில் வெற்றி பெறச் செய்ய பள்ளிக்கல்வித் துறையால் முடியாதா? இதற்கு விளக்கம் தேவை.
நடப்பாண்டில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹைடெக் ஆய்வகங்களிலும், 15 மாதிரி பள்ளிகளில் எலைட் பயிற்சியும் அளிக்கப்பட்டதாக தமிழக அரசின் சார்பில் கூறப்படுகிறது. ஆனால், ஹைடெக் ஆய்வகங்கள் எனப்படுபவை நவீனமானவை அல்ல. கணினி வசதி கொண்ட ஆய்வகங்கள் தான். அவற்றில் மாணவர்கள் தாங்களாகவே தான் இணையத்தில் உள்ள தகவல்களை படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். மாதிரி பள்ளிகளில் வழங்கப்படும் பயிற்சியும் கூட சிறப்பு வல்லுனர்களைக் கொண்டு நடத்தப்படவில்லை. மாறாக அரசு பள்ளிகளின் ஆசிரியர்களைக் கொண்டு தான் நடத்தப்படுகிறது. வழக்கமான பணிச்சுமையுடன் கூடுதலாக இந்தப் பயிற்சியையும் வழங்குவது அவர்களுக்கு சாத்தியமில்லை என்பதால் பள்ளிக்கல்வித்துறை வழங்கிய பயிற்சிகள் பயனளிக்கவில்லை.
நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும் என்பது தான் நமது இலக்கு. அதேநேரத்தில் நீட் தேர்வு நடத்தப்படும் வரை அரசு பள்ளி மாணவர்கள் அதில் பங்கேற்காமல் ஒதுங்கியிருக்க முடியாது. அவர்களை நீட் தேர்வுக்கு தயார்படுத்த வேண்டுமானால் அதற்கு தனியார் பயிற்சி நிறுவனங்களில் வழங்கப்படுவதற்கு இணையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மற்றொருபுறம் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago