சென்னை: கும்பகோணம் கோயிலில் இருந்து 60 ஆண்டுகளுக்கு முன்புதிருடுபோன 4 சிலைகள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அந்தச் சிலைகளை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் சவுந்தரராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் செயல் அலுவலராக உள்ள ராஜா என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு, சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையில் புகார் மனு ஒன்று அளித்தார்.
அதில், சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலையை 1957 முதல் 1967-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்று விட்டதாகவும், சிலை இருந்த இடத்தில் போலி சிலையை வைத்துவிட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த புகாரின் பேரில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை நடத்த டிஎஸ்பி. டி.பி.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.
போலி சிலைகள்
அவர் நடத்திய விசாரணையில், 60 முதல் 65 ஆண்டுகளுக்கு முன்பு சில மர்ம நபர்கள், திருமங்கை ஆழ்வார் சிலையை திருடிவிட்டு, பக்தர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க போலி சிலையை வைத்திருந்தது தெரியவந்தது. இந்தக் கோயிலில் திருடுபோன சிலையின் உருவப்படம், புதுச்சேரியில் உள்ள இந்தோ-பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் மூலம் பெறப்பட்டு, போலி சிலை யுடன் ஒப்பிடப்பட்டது.
அப்போது, கோயிலில் உள்ள சிலை போலியானது என்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து, திருடுபோன திருமங்கை ஆழ்வார் சிலை வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகத்தில் இருக்கிறதா? என்பது குறித்து ஆராயப்பட்டது.
லண்டன் அருங்காட்சியகம்
இந்நிலையில், லண்டனில் உள்ள அஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் திருடுபோன சிலை இருப்பது தெரியவந்தது. அந்தச் சிலையை 1967-ம் ஆண்டு ஜே.ஆர்.பெல்மாண்ட் என்ற சிலை சேகரிப்பாளரிடம் இருந்து 850 டாலர் பணம் கொடுத்து, அந்த அருங்காட்சியகம் ஏலத்தில் எடுத்துள்ளது. எனவே, திருமங்கை ஆழ்வார் சிலை திருடு போனதற்கான ஆதாரத்தைக் காண்பித்து, அந்த சிலையை மீட்டுக் கொண்டுவரும் நடவடிக்கையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கும்பகோணம் கோயிலில் திருடுபோனது ஒரு சிலைமட்டும்தானா? அல்லது வேறுசிலைகளும் அப்போது திருடப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்ஆராய்ந்தனர். அதில், அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. அதாவது, சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் இருந்து திருமங்கை ஆழ்வார் சிலை திருடப்பட்டபோதே, காளிங்கனார்த்தன கிருஷ்ணன், விஷ்ணு, ஸ்ரீதேவி ஆகிய மேலும் 3 சிலைகளும் திருடப்பட்டு, அதற்கு பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே, அந்தச் சிலைகள் குறித்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் தேடியபோது,அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஆசிய கலை அருங்காட்சியகத்தில் காளிங்கனார்த்தன கிருஷ்ணன் சிலையும், டெக்சாசில் உள்ள கிம்பெல் கலை அருங்காட்சியகத்தில் விஷ்ணு சிலையும், புளோரிடாவில் உள்ள ஹில்ஸ் ஏல தொகுப்பு மையத்தில் ஸ்ரீதேவி சிலையும் இருப்பது தெரியவந்தது. எனவே, அந்தச் சிலைகளையும் மீட்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago