மாணவியரின் இடைநிற்றலை ‘புதுமைப்பெண்’ திட்டம் முழுமையாக தடுக்கும்: அன்பில் மகேஸ் நம்பிக்கை

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: புதுமைப்பெண் நிதியுதவி திட்டம், மாணவியர் இடைநிற்றலை முழுமையாக தடுக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் இன்று (7-ம் தேதி) தருமபுரியில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடந்தது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கான இந்த ஆய்வுக் கூட்டத்தில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சாந்தி வரவேற்புரை ஆற்றினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ், செய்தியாளர்களிடம் கூறியது: ''கல்வியில் பின் தங்கிய நிலையில் உள்ளதாகக் கருதப்படும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆலோசனைகளும், கருத்துகளும் பெறப்பட்டன. அரசுப் பள்ளிகள் தன்னிறைவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி, கடந்த ஆண்டு முதற் கட்ட ஆய்வுக் கூட்டங்கள் நடந்து முடிந்தது. தற்போது இரண்டாம் கட்ட ஆய்வுக் கூட்டங்கள் நடந்து வருகிறது.

இம்மாவட்டங்களில் பெண் குழந்தைகள் இடைநிற்றல் இருப்பதை அறிய முடிகிறது. குறிப்பாக, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இதுபோன்ற நிலை அதிகம் இருப்பதை அறிய முடிகிறது. இக்குறையை களைய தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக அண்மையில் அறிவிக்கப்பட்ட புதுமைப்பெண் நிதியுதவி திட்டம் தமிழகம் முழுக்க பள்ளி மாணவியர் இடைநிற்றலை தடுக்கும். இதுதவிர, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிக் கல்வி தொடர்பாக உள்ள சில பிரச்சினைகளையும் இந்தத் திட்டம் களையும்.

ஆய்வுக் கூட்டங்கள் மூலம் பெறப்படும் கருத்துக்கள் அனைத்தையும் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இத்தகைய கள ஆய்வின் மூலமாக ஏராளமான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெற முடிகிறது. எனவேதான், நாங்கள் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். மாணவ, மாணவியரின் பாதுகாப்பு கருதி சிதிலமடைந்த வகுப்பறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறோம். சிதிலமடைந்த, ஆபத்தான நிலையில் இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அந்த இடங்களில் தேவைக்கேற்ப புதிய கட்டிடங்கள் கட்டுவது குறித்து பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பள்ளிக்கும், வகுப்பறையைப் போலவே கழிப்பறை கட்டிடங்களும் முக்கியம். அவை, வகுப்பறைகளைப் போலவே தூய்மையாக இருப்பதும் அவசியம். அதனால்தான் நாங்கள் ஆய்வுக் கூட்டங்களின்போது, முன்னறிவிப்பின்றி திடீரென நேரடியாக பள்ளிகளுக்கு சென்று கழிப்பறையின் சுத்தம், பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்துகிறோம். அதேபோன்று, அரசுப் பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். எதிர்வரும் 4 ஆண்டுகளில் பள்ளிகளில் கழிப்பறைகளை ஏற்படுத்தி பராமரிக்கவும், வகுப்பறைகள் கட்டவும் 7,000 கோடி ஒதுக்கப்படும். அதில், நடப்பு ஆண்டுக்கு 1,300 கோடி ஒதுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கிடவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்றைக்கு நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இந்தத் தேர்வை ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்களும் எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் எப்படியிருந்தாலும் மாணவ, மாணவியர் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வரும் தொடர்ந்து மாணவ, மாணவியருக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசி வருகிறார். மேலும், தன்னம்பிக்கை வழிகாட்டி நிகழ்ச்சிகளையும் அரசு நடத்தி வருகிறது. எனவே, மாணவர்கள் எதையும் எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்று அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஜி.கே.மணி(பென்னாகரம்), வெங்கடேஸ்வரன்(தருமபுரி), சதாசிவம்(மேட்டூர்) உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்