விவேகானந்தர் நினைவிடம், திருவள்ளுவர் சிலையை பார்வையிட்ட ராகுல் காந்தி

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி: ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்ளும் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவிடம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டார்.

காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்கிறார்.இதற்காக விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து, கன்னியாகுமரி வந்தடைந்தார்.

நடைபயணத்தை தொடங்குவதற்கு முன்னர், பூம்புகார் படகுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான படகில் சென்ற ராகுல், விவேகானந்தர் நினைவு மண்டபம், ராமகிருஷ்ண பரமஹம்சர் சிலை மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டார்.

குமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கி வைக்கிறார். மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த நடைபயணம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீரைச் சென்றடைகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE