மக்களை மதுவுக்கு அடிமையாக்க வேண்டாம்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக அரசு மாநிலம் முழுவதும் புதுப்புது பெயர்களில் மதுக்கடைகளை திறப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "சென்னையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் எலைட் மதுக்கடைகளையும், தனி பீர் கடைகளையும் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துவிட்ட தமிழக அரசு மாநிலம் முழுவதும் புதுப்புது பெயர்களில் மதுக்கடைகளை திறப்பது கண்டிக்கத் தக்கது.

ஒரு காலத்தில் கலாச்சாரம், கல்வி, மொழிச் செழுமை, நாகரீகம் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்த தமிழகம் இப்போது மது மற்றும் குடிப்பழக்கத்தின் அடையாளமாக மாறிவிட்டது.

மதுக்கடைகளை மூடி மாணவர்களைக் காக்க வேண்டும் என்ற சமூக அக்கறை இல்லாத தமிழக அரசு, பள்ளிகளுக்கு அருகிலேயே மதுக்கடைகளை திறந்து மது விற்பனை செய்கிறது.

தமிழ்நாடு முழுவதும் வறுமையும், வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் தலைவிரித்தாடும் நிலையில் அதை போக்குவதில் அக்கறை காட்டாத அரசு மது விற்பனையை பெருக்குவதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறது.

தொடக்கத்தில் சென்னையில் சில இடங்களில் மட்டும் எலைட் மதுக்கடைகளை திறந்த தமிழக அரசு, அடுத்தகட்டமாக மாவட்டத் தலைநகரங்கள், வட்டத் தலைநகரங்கள், சிறு நகரங்கள் ஆகியவற்றிலும் எலைட் மதுக்கடைகள், தனி பீர் கடைகள் ஆகியவற்றை திறக்கத் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தானியங்கி பீர் வழங்கும் எந்திரங்களை அமைக்கவும் அரசு தீர்மானித்துள்ளது. இவையெல்லாம் போதாது என உணவகங்களின் ஒரு பகுதியில் பீர், ஒயின் ஆகிய மதுவகைகளை பரிமாற அனுமதி வழங்கியுள்ளது.

மது அத்தியாவசிய பொருளும் அல்ல; அதை தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அவ்வாறு இருக்கும்போது, நியாயவிலைக் கடைகளை திறப்பதில் அலட்சியம் காட்டும் தமிழக அரசு, ஏற்கனவே மதுக்கடைகள் இருக்கும் பகுதிகளிலும் எலைட் மதுக்கடைகள், தனி பீர்கடைகளை திறப்பதற்கு வணிக நோக்கத்தைத் தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது.

ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் அரசு, அதில் நான்கில் ஒரு பங்குக்கும் கூடுதலான தொகையை மது விற்பனை மூலம் தான் ஈட்ட வேண்டும் என்ற நிலையில் இருப்பது அவலமா? அற்புதமா? என்பதை ஆட்சியாளர்களின் மனசாட்சியே தீர்மானிக்கட்டும்.

மது விற்பனை தொடர்பான தமிழக அரசின் புதிய திட்டங்கள் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். பீர் விற்னைக்காக தனிக் கடைகளை திறப்பதும், உணவகங்களில் பீர் மற்றும் ஒயினை பரிமாறுவதும் இதுவரை மதுவுக்கு மயங்காதவர்களைக் கூட, குறைந்த போதை தருபவை தானே என்ற எண்ணத்தில், இந்த வகை மதுக்களை சுவைக்கத் தோன்றும்; நாளடைவில் இவற்றை அருந்துபவர்கள் மற்ற மது வகைகளையும் குடிக்கத் தொடங்கி முழுமையான குடிகாரர்களாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

ஒருவேளை மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டுவதில் உச்சத்தை தொடும் நோக்குடன் புதிய குடிகாரர்களை உருவாக்குவதற்கான உத்தியாகத் தான் இந்தக் கடைகளை அரசு திறக்கிறதோ? என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

மதுவின் தீமைகளையும், அதை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தையும் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் உலக சுகாதார நிறுவனம் விளக்கியிருக்கிறது. குடியால் சீரழிந்த குடும்பங்கள் அனுபவிக்கும் கொடுமைகளை நாமே நேரில் பார்க்கிறோம்.

இதன்பிறகும் வருவாயை பெருக்குவதற்காக மக்களை மதுவுக்கும் அடிமையாக்கும் அரசு மக்கள் நலன் விரும்பும் அரசாக இருக்க முடியாது. எனவே, புதிதாக மது மற்றும் பீர் கடைகளை திறக்கும் திட்டத்தை கைவிட்டு, அண்ணல் காந்தியும், தந்தை பெரியாரும் விரும்பிய சமுதாயத்தை உருவாக்குவதற்காக தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்