சுத்துது... சுத்துது... சுத்திக்கிட்டே இருக்கு - பத்திரப்பதிவு துறையில் தொடரும் சர்வர் பிரச்சினை

By கி.மகாராஜன்

தமிழகம் முழுவதும் தொடரும் சர்வர் பிரச்சினையால் பத்திரப்பதிவு தாமதமாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் மாநில அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் முக்கிய துறை பத்திரப்பதிவு துறையாகும். இத்துறையில் வீட்டுமனை விற்பனை பதிவு, விவசாய நிலம் விற்பனை பதிவு, திருமண பதிவு, வில்லங்க சான்றிதழ் விண்ணப்பம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆன்லைன் வழியாக நடைபெறுகின்றன.

பத்திரப்பதிவு துறையில் பதிவுக்காக பயன்படுத்தப்படும் சர்வரின் வேகம் கடந்த சில நாட்களாக குறைந்துள்ளது. பதிவுத்துறை சர்வருக்குள் நுழைந்தால் அடுத்தடுத்து பக்கங்களுக்குள் செல்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது. இணையதள பக்கம் திறந்தால் அதில் பதிவேற்றம் செய்ய முடிவதில்லை.

இதனால் 5 நிமிடத்தில் முடிய வேண்டிய பதிவுக்கு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டியதுள்ளது. பப்ளிக் போர்டலின் (பொதுமக்கள், ஆவண எழுத்தர் பதிவுக்கானது) வேகமும் குறைந்துள்ளது. இதனால்பத்திரப்பதிவுக்கான ஆவணங்களை பப்ளிக் போர்டலில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்ய முடியாத நிலை உள்ளது.

சர்வர் பிரச்சினையால் உரிய நேரத்தில் பதிவு செய்ய முடியாமல், பத்திரப்பதிவுக்கு வந்தவர்கள், திருமண பதிவுக்கு வந்தவர்கள் தவித்து வருகின்றனர்.

பொதுமக்கள் பாதிப்பு: மதுரை ஒத்தக்கடை ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு பத்திரப்பதிவுக்காக வந்த சிலர் கூறுகையில், ‘பத்திரப்பதிவுக்கான கட்டணத்தை முன்கூட்டியே மின்னணு பரிமாற்ற முறையில் செலுத்திவிட்டோம்.

எங்கள் கணக்கிலிருந்து கட்டணம் எடுக்கப்பட்ட நிலையில் சர்வர் பிரச்சினையால் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதும் வரவில்லை, பதிவும் நடைபெறவில்லை. நல்ல நேரத்தில் பத்திரம் பதிவு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர் என்றனர்.

பத்திரப்பதிவு எழுத்தர்கள் கூறுகையில், பதிவுத்துறையில் சர்வர் பிரச்சினை ஒரு மாதத்துக்கு மேலாக உள்ளது. சர்வர் வேகத்தை அதிகரிக்குமாறு அதிகாரிகளை சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். இதையடுத்து சர்வர் பிரச்சினை சரி செய்யப்பட்டதாக தெரிவித்தனர். மொபைல் போனில் வில்லங்கச் சான்றிதழ் சரிபார்ப்பது மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் சர்வர் பிரச்சினை தொடர்கிறது. வில்லங்கச் சான்றிதழ்கூட விண்ணப்பிக்க முடியவில்லை என்றனர்.

ஊழியர்களும் அவதி: பத்திரப்பதிவு ஆவணங்களை பதிவு நடைபெற்ற அன்றே ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவுவேற்றம் செய்ய வேண்டும். பத்திரப்பதிவு கட்டணங்களை கருவூலத்தில் செலுத்த வேண்டும். பதிவுப்பணி முடிந்ததும் ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் பணியை மேற்கொள்வது வழக்கம்.

பத்திரப் பதிவுபணிகள் மாலை 6 மணிக்குமுடிந்தாலும், சர்வர் பிரச்சினையால் சார்பதிவாளர்களும், ஊழியர்களும் இரவு 9 மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE