“அமைச்சர்கள், அதிகாரிகளை திமுக அரசு நம்பவில்லை” - இபிஎஸ் முன்வைக்கும் ‘குழு’ விமர்சனம்

By செய்திப்பிரிவு

கோவை: "திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் 38 அறிவிப்புகள் கொண்டுவந்து 38 குழுக்கள் அமைத்துவிட்டார். இந்த அரசங்கத்துக்கு குழு அரசாங்கம் என்று பெயர் வைத்துவிடலாம்" என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

கோவையில் அதிமுக தொண்டர்கள் மத்தியில், அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியது: “திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் 38 அறிவிப்புகள் கொண்டுவந்து 38 குழு அமைத்து விட்டார். இந்த அரசங்கத்துக்கு குழு அரசாங்கம் என்று பெயர் வைத்துவிடலாம். ஒவ்வொரு துறைக்கும் ஓர் அமைச்சர்கள், செயலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு கீழ் அதிகாரிகள் உள்ளனர். ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு, இவர்களை எல்லாம் நம்பாமல், அமைச்சர்களை நம்பவில்லை, அதிகாரிகளை நம்பாமல், ஒவ்வொன்றுக்கும் ஒரு குழு அமைத்து அந்தக் குழு அறிக்கை கொடுக்கும். அதன்படிதான் செயல்படுவார்களாம்.

என்றைக்கு குழு அறிக்கை அளிப்பது, என்றைக்கு அரசாங்கம் செயல்படுவது. ஆட்சிப் பொறுப்பேற்று 15 மாதங்கள் ஓடிவிட்டன. 5 வருடத்தில் 60 அமாவாசை, 15 அமாவாசை போய்விட்டது. இன்னும் 45 அமாவாசை இருக்கிறது. குழு அமைப்பதற்கே 15 மாதங்களாகிவிட்டது. குழு எப்போது அறிக்கை அளித்து, அதிகாரிகள் அதனை பரிசீலிப்பது. எனவே, எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றக்கூடாது என்பதற்காக ஒரு குழுவை அமைத்து, மக்களை ஏமாற்றுகின்ற அரசாங்கம், தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற அரசாங்கம்" என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE