*
திருநெல்வேலி மாவட்டம், கோயில்பட்டி பேருந்து நிலையம். அதிகாலை நேரம். நண்பர்கள் பாரதிமுருகனும் பீட்டரும் வாங்கிக் கொடுத்த கடலை மிட்டாயை கொரித்துக்கொண்டே நடந்தோம். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இணைப்புச் சாலைக்குள் நுழைகிறோம். மலையடிவாரம் அது. இருபுறமும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சமவெளி புதர்க் காடுகள். பால்வண்டி ஒன்று வந்தது. நிறுத்திப் பின்னால் ஏற்றிக்கொண்டார்கள். காற்றில் கலந்து வருகிறது சுப்ரபாதம். சற்று நேரத்தில் ஏதோ ஒரு கிறிஸ்துவப் பாடல். சத்தம் அதிகரிக்கிறது... ஏதோ அறிவிக்கிறார்கள். என்னது அது? உற்றுக் கேட்கிறோம். “பால் வண்டியில் வந்துகொண்டிருக்கும் ‘தி இந்து’ பத்திரிகையாளர் அவர்களை… வருக வருக என வரவேற்கிறோம்…” என்கிறது ஒலிபெருக்கி. திடுக்கிட்டு ஓட்டுநரிடம் கேட்கி றேன். “அதான் மூலைக்கு மூலை கேமரா வெச்சிருக்கமுல்லா. தப்பான நோக்கத் துல புதுசா ஒரு பய உள்ளே நுழைய முடியாது” என்கிறார். நம்மை வித்தியாசமாக வரவேற்கிறது ஜமீன் தேவர்குளம்!
இப்போ அப்படியில்லை…
ஊர் மையத்தில் பெரிய கட்டிடம். அதன் உச்சியில் ஒலிபெருக்கிகள். கூடவே தெருவுக்குத் தெரு ஒலிபெருக்கிகள் வைக்கப் பட்டிருக்கின்றன. கூர்ந்து கவனிக்கிறோம்... ஆம், ஆங்காங்கே நம்மை உற்று நோக்கு கின்றன கேமரா கண்கள்.
“வாங்க சார், நாங்க ஊர் எல்லையிலேயே உங்களைப் பார்த்துட்டோம்” என்றபடி வரவேற்கிறார் பஞ்சாயத்துத் தலைவி கமலா. “ஏன் இந்த கண்காணிப்பு?” என்றேன் அவரிடம். “அதெல்லாம் பெரிய கதை. அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் எங்க ஊருப் பேரைக் கேட்டாலே சுத்துவட்டாரத்துல அலறுவாங்க. ஒரே வெட்டுக் குத்துதான். குற்றப் பரம்பரை கேள்விப்பட்டிருக்கீங்களா? மொத்தமும் இங்கேதான் குவிஞ்சிருந்தாங்க.
கூடவே கட்சி அரசியலும் சேர்ந்துக்கிச்சு. அடி தடிக்குக் கேட்கவா வேணும். ரத்தம் பாக்காம ஒருநாளும் கழியாது. ஊருக்குள்ள போலீஸ் வராத நாளே கிடையாது. தினமும் நாலு பேரை ஸ்டேஷனுக்கு அள்ளிட்டுப் போயிடுவாங்க. பொம்பளைங்க பாடுதான் ரொம்ப கஷ்டம். ஒருமுறை கட்சி போஸ்டர் ஒட்டுன தகராறுல அடுத்தடுத்து மூணு பேரை கொலை பண்ணிட்டாங்க. ஊருக்குள்ள பயங்கர பதற்றம். ஊருல பாதி ஆம்பளைங்க தலைமறைவாகிட்டாங்க. ஊருல பாதி பேரு வீடுகளை காலி பண்ணிட்டு வெளியூருக்குப் போயிட்டாங்க. வெள்ளாமை பண்ண ஆளில் லாம பூரா நெலமும் தரிசாப் போச்சு. ஊருக்கு பெரிய கெட்ட பேரு ஆகிடுச்சு. போலீஸ் ஸ்டேஷன்ல கருப்புப் புள்ளி வெச்சிட்டாங்க. இங்கிருந்து போனாலே பாஸ்போர்ட் கிடைக்காது. வேலை கிடைக்காது. ஆம்பளப் பசங்களுக்குப் பொண்ணு கிடைக்காது. ஊரே மயானங்கணக்கா கெடக்கு. 2011 உள்ளாட்சித் தேர்தல் வந்துச்சு. ஊர் பொம்பளைங்க திரண்டு என்னை நிக்க வெச்சு, தலைவராக்கினாங்க.
முதல் வேலையா ஊருக்குள்ள இருக்கிற சில பெரிய மனுஷங்களைக் கூப்பிட்டு பொறுமையா பேசினேன். ‘நாமளும் எல்லாரும் மாதிரி நல்லா வாழணும். என்ன பண்ணலாம்?’னு கேட்டேன். அவங்களும் நொடிச்சுப் போயிருந்தாங்க. ‘நீங்க பார்த்து என்ன சொன்னாலும் ஏத்துக்கிறோம்’ன்னு சம்மதிச்சாங்க. உடனே கிராம சபையைக் கூட்டி ஊருக்குள்ள கட்சி பெயரை சொல்லிட்டு யாரும் வரக் கூடாது. ஊருக்குள்ள இருக்கிற அத்தனை அரசியல் கட்சி கொடிகளையும் அப்புறப்படுத்தணும். கட்சி சின்னங்களை வரையக் கூடாது. சாதிச் சங்க சின்னம், போஸ்டர் எதுவும் வைக்கக் கூடாது. தடை உத்தரவு போட்டோம். எல்லோரும் ஏத்துக்கிட்டாங்க.
அப்பவும் சின்னச் சின்ன சண்டை சச்சர வுகள் வந்துக்கிட்டேதான் இருந்துச்சு. ஒரு விஷயம் புரிஞ்சுது. அவங்ககிட்டே பேசிக்கிட்டே இருக்கணும். பேசிப் பேசிதான் வழிக்குக் கொண்டுவரணும். என்ன செய்யலாம்னு யோசிச்சேன். அப்பதான் நான் படிச்ச ஸ்கூல்ல ஒலிபெருக்கியில் அறிவிப்பு செஞ்சது நினைவுக்கு வந்துச்சு. அதை ஏன் நம்ம கிராமத்துக்கு செய்யக் கூடாதுன்னு நினைச்சேன். ஆனால், பஞ்சாயத் துல பைசா கிடையாது. எங்க ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் கொஞ்சம் பேரு வெளியூர்கள்லேயும் வெளிநாடுகளிலேயும் இருக்காங்க. அவங்ககிட்ட உதவி கேட்டோம். தாராளமா செஞ்சாங்க. அதை வெச்சி ஊருக்குள்ள 24 இடங்களில் ஒலிபெருக்கி அமைச்சோம்.
உட்கார்ந்து பேசினோம்
பஞ்சாயத்து அலுவலகத்துல உட்கார்ந்து தினமும் ஒலிபெருக்கியில் பேசினேன். கூடவே பக்திப் பாடல்கள், வாரியார் சொற்பொழிவுகள், பொன்மொழிகள், நாட்டுப்புறப் பாடல்களை ஒலிபரப்பினோம். ஆறு மாசத்துல சண்டை சச்சரவு சுத்தமா நின்னுப் போச்சு. எல்லோரும் ஒத்துமையாகிட்டாங்க. இதோ இப்பவும் டைம்மர் செட் பண்ணி வெச்சிருக்கோம். காலையிலும் மாலையிலும் சரியா 5.30 மணிக்கு பக்திப் பாடல்கள் ஒலிப்பரப்பாகும். அதுதான் எங்களுக்கு அலாரமும்கூட. இது தவிர கிராம சபைக் கூட்ட அறிவிப்பு, அரசு நலத் திட்ட உதவிகள், நூறு நாள் வேலை நடக்கிற இடங்கள், மருத்துவ முகாம்கள், ரேஷன் விநியோகம், குப்பை சேகரிக்கிற விவரம் எல்லாமும் அறிவிப்போம்.
கிடைச்சது நல்ல பலன்
அப்பவும் ஊருக்குள்ள கொஞ்சம் திருட்டு பயம் இருந்துச்சு. இதைவெச்சு திரும்பவும் வெட்டு குத்து வந்துடக்கூடாது இல்லையா? என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பதான் கண் காணிப்பு கேமரா வைக்கலாம்னு தோணுச்சு. அதுக்கும் அரசு பணத்தை பயன்படுத்தலை. விஷயத்தைச் சொன்னதும் வெளியே இருக்கிற இளைஞர்களே செலவுகளை ஏத்துக் கிட்டாங்க. மூணு லட்சம் ரூபாய் செலவுல 16 கண்காணிப்பு கேமராக்களை வாங்கி ஊரின் முக்கிய இடங்கள்ல பொருத்தினோம். அதுக்கான கம்ப்யூட்டர் சமாச்சாரங்களையும் பஞ்சாயத்து ஆபீஸிலேயே பொருத்தி கண் காணிக்கிறோம். எங்க பஞ்சாயத்துச் செயலாளர் மாரிக்கண்ணுதான் இதுக் கெல்லாம் பொறுப்பு.
கேமரா வெச்சதால் நல்ல பலன் கிடைச் சது. ஒருமுறை வெளியே இருந்து வந்த புது ஆளு ஒருத்தன் ஆட்டுக் குட்டியை கள வாண்டுட்டுப் போனான். கேமராவுல பார்த்துட்டு ஊர் எல்லையைத் தாண்டுறதுக்குள்ள மடக்கினோம். ஒருமுறை 22 ஆயிரம் ரூபா இருந்த பர்ஸ், ரெண்டு பவுன் சங்கிலி எல்லாம் காணாமப் போச்சு. கேமராவை செக் பண்ணப்ப அதை எடுத்தது யாருன்னு தெரிஞ்சுப் போச்சு.
ஆனாலும் விஷயத்தை உடைக்காம, மைக்கில், ‘பொருளை எடுத்தது யாருன்னு கேமராவில் கண்டுபிடிச்சிட்டோம். பிரச்சி னையைப் பெருசாக்க விரும்பலை. குறிப் பிட்ட இடத்தில் ரகசியமா போட்டுட்டா தப்பிச் சிக்கலாம். இல்லைன்னா போலீஸுல புகார் கொடுத்திடுவோம்’னு அறிவிப்பு செஞ்சோம். அதே மாதிரி பொருள் கிடைச்சிடுச்சு. சம்பந்தப்பட்ட ஆட்களை ரகசியமாக கூப்பிட்டு எச்சரிக்கை செஞ்சு அனுப்பினோம். சமீபத்துல ஊர் எல்லைக்கு வெளியே ஒரு அம்மாகிட்ட பைக்குல வந்த ரெண்டு பேரு சங்கிலியை அத்துட்டாங்க. அங்கேயும் கேமரா வெச்சிருக்கோம். அதில் அந்தத் திருடங்க பதிவாகியிருந்தாங்க. நாலாட்டின் புதூர் போலீஸ் ஸ்டேஷன்ல சி.டி போட்டு அதைக் கொடுத்திருக்கோம். இப்ப ஊருக் குள்ள எந்த திருட்டுப் பயமும் கிடையாது” என்கிறார் பெருமிதத்துடன்!
‘தீண்டாமை இல்லாத கிராமம்’
நூற்றுக்கணக்கான வழக்குகளுடன் குற்றப் பின்னணி கொண்ட கிராமத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு வழக்குக்கூட பதிவாக வில்லை. இதை பாராட்டும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ‘தீண்டாமை இல்லாத கிராமம்’ என்று விருது வழங்கியதுடன், சிறு வழக்குகள் அத்தனையும் திரும்பப் பெறப் பட்டுள்ளன.
இதுமட்டுமல்ல... ஊரின் குடிநீர் தாகத்தை போக்க ஊருக்கு வெளியே ஒரு மலையடிவாரத்தில் கிணறு வெட்டி மோட்டார் போட்டிருக்கிறார்கள். ஊருக்குள் இருந்தே கைப்பேசியைக் கொண்டே அதை இயக்குகிறார்கள். கைப்பேசியில் 7-ஐ அழுத்தினால் மோட்டார் இயங்கத் தொடங் கும். 8-ஐ அழுத்தினால் நின்றுவிடும். கேமரா, ஒலிபெருக்கி, மோட்டார் மற்றும் தெருவிளக்குகளுக்கு இன்வெர்ட்டரும் உண்டு. மின் தடை இங்கு ஒரு பிரச்சினை இல்லை. ஊருக்குள் பொதுகுளியல் அறை இருக்கிறது. வெந்நீர் வசதியும் செய்யப் பட்டிருக்கிறது.
விஜயா வங்கி நிர்வாகத்திடம் பேசி ஊருக் குள் ஏ.டி.எம். உள்ளிட்ட வசதிகளுடன் வங்கியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். கட்டிடத்துடன் கூடிய சொந்த இடத்தை வங்கிக்காக கொடுத்துவிட்டார் பஞ்சாயத்து தலைவர் கமலா. வங்கி சார்பில் சனி, ஞாயிறு தவிர்த்து மற்ற நாட்களில் மாலை 4-6 மணி வரை மருத்துவர், செவிலியர் வருகிறார்கள். மருத்துவம் இலவசம். செவிலியருக்கு பஞ்சாயத்தில் இருந்து சம்பளம் கொடுக்கிறார்கள். ஆம்புலன்ஸ் வாங்குவதற்காக ரூ.90 ஆயிரம் திரட்டி விட்டார்கள். நூறு நாள் வேலைத் திட்டத்தில் சுமார் ஆயிரம் மரங்களை நட்டிருக்கிறார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்... ஒருமுறை நேரில் சென்றுப் பாருங்கள், உள்ளாட்சி என்கிற நல்லாட்சியின் மகிமை உங்களுக்குப் புரியும்.
படங்கள்: மு.லட்சுமி அருண்
- பயணம் தொடரும்...
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago