அந்தக் காலனியில் நுழையும்போது மதியமாகிவிட்டது. சிமெண்ட் மற்றும் இரும்புக் கூரைகளால் வேயப்பட்ட வீடுகளின் தலையில் டிஷ் ஆண்டெனாக்கள் முளைத்திருக்கின்றன. வீட்டைச் சுற்றிப் பழ மரங்கள் செழித்து வளர்ந்திருக்கின்றன. மரத் தடியில் கனஜோராக நடக்கிறது அசைவ சமை யல். கலகலப்பான பேச்சும் சிரிப்புமாக அந்த இடம் திருவிழாபோல களைகட்டியிருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் பஞ்சாயத்துத் தலைவர் சுமதியிடம், ‘‘ஏதாவது விசேஷமாங்க?’’ என்றேன்.
‘‘இங்கே தினமும் விசேஷம்தான். எப்போதும் சந்தோஷமா இருக்கிற இந்த மக்களைப் பார்த்தாலே எனக்கு உற்சாகம் தொத்திக்கும்!’’ என்கிறார். நம்மையும் தொற்றிக்கொண்டது உற்சாகம்.
அதிகத்தூரில் இருக்கும் நரிக்குறவர் காலனி இது. பெண்கள் கும்பலாக அமர்ந்து பிளாஸ்டிக் அலங்கார மாலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் பேசினோம். சுந்தரத் தெலுங்கு வீசுகிறது. “எங்கப் பூர்விகம் எதுன்னு தெரியாது. முன்னாடி ஆந்திரா பக்கம் திரிஞ்சிட்டிருந்தோம். ரோட்டோரம்தான் சாப்பிடுறது, தூங்குறது, குடும்பம் நடத்துறது எல்லாமே. நாலு நாளைக்கு மேல ஒரு இடத்துல தங்க முடியாது. விரட்டிடுவாங்க. வயசுப் பொண்ணுங்க நிம்மதியாக குளிக்க முடியாது. ஒருநாள் இங்க வந்து முகாம் போட்டோம். எங்க வாழ்க்கையே மாறிப்போச்சு. இந்த ஆறு வருஷமா நாங்க நிம்மதியா சாப்பிடுறோம். நிம்மதியாக் தூங்குறோம். இதெல்லாம் எங்களுக்கு சொந்த வீடுன்னு சொல்றாங்க சுமதி அம்மா. எங்களால நம்ப முடியலை...” என்று சொல்லும்போதே குரல் உடைந்து ஆனந்தக் கண்ணீர் பொங்குகிறது அந்தப் பெண்களுக்கு.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் பத்து நரிக்குறவர் குடும்பங்கள் இங்கே வந்து முகாம் அமைத்திருக்கின்றன. ஒருநாள் ஆண்கள் அனைவரும் வியாபாரத்துக்காக வெளியூர் சென்றுவிட கடும் மழை பெய்திருக்கிறது. வெள்ளத்தில் உடைமைகள் எல்லாம் அடித்துச் சென்றுவிட வயதான பெண்களும், குழந்தைகளும் உயிர் பிழைத்து நடுங்கிக்கொண்டிருந்தார்கள். அங்கே வந்த பஞ்சாயத்துத் தலைவி சுமதியிடம் அவர்கள் கேட்டது கொஞ்சம் உணவும் மாற்றுத் துணிகளும்தான். வாங்கிக்கொண்டு அவர்கள் வேறு ஊருக்குக் கிளம்பத் தயாரானார்கள். தடுத்து நிறுத்தினார் சுமதி.
“குழந்தைகளைப் பார்த்ததும் கண்ணுல தண்ணி வந்துடுச்சுப்பா. இங்கேயே வீடு தர்றோம், தங்கிடறீங்களான்னு கேட்டேன். தயங்கினாங்க. அவங்க கூட்டத்துல 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கு. அவங்களை விட்டுட்டு நாங்க மட்டும் தனியா இருக்க முடியாதுன்னு சொன்னாங்க. எல்லாருக்கும் இடம் தர்றோம்னு சொன்னதும் சந்தோஷமாக சம்மதிச்சிட்டாங்க. திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் சுத்துவட்டாரத்துல இருந்த குறவர்கள் குடும்பங்களை இங்க அனுப்பி வெச்சது. இப்ப இங்க சுமார் 60 குடும்பங்கள் வசிக்கிறாங்க” என்கிறார் சுமதி.
இவர்களின் வசிப்பிடத்துக்காக சுமதி செய் ததுதான் ஒரு பஞ்சாயத்து தலைவருக்கே உரிய நிர்வாக திறன். அதிகத்தூரில் மேய்க்கால் அரசு புறம்போக்கு நிலம் இருக்கிறது. கிராம மக்களிடம் பேசி சம்மதம் பெற்றவர், கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி, அதில் இரண்டு ஏக்கரை பஞ்சாயத்தின் பெயருக்கு மாற்றினார். அந்த இடத்தில் நரிக்குறவர் குடும்பங்களுக்கு பட்டா பிரித்து வீடு கட்டிக் கொடுத்தார். கூடவே, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, நரிக்குறவர் நல வாரியப் பயனாளிகள் அட்டை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
தாங்கள் தயாரித்த கைவினைப் பொருட்களுடன் அதிகத்தூர் குறவர் இனப் பெண்கள்.
அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் முதல் ஆறு மாதங்களுக்கு தன்னார்வலர்களை இங்கேயே அழைத்துவந்து குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியை வழங்கினார். பின்பு அவர்கள் அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதி ரூ.14 லட்சம் பெற்று இவர்களுக்கு என சமூக நலக்கூடத்தை அமைத்து கொடுத்திருக்கிறார். தற்போது குறவர் சமூகத்தின் 96 குழந்தைகள் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கின்றனர். ரம்யா என்கிற மாணவி 12-ம் வகுப்பு முடித்துவிட்டு ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் செவிலியர் படிப்பு படிக்கிறார். இவர்கள் பெறும் முதல் தலைமுறைக் கல்வி இது!
அடுத்து சென்ற இடம் இருளர் காலனி. கிட்டத்தட்ட குறவர் மக்களைப் போன்றதுதான் இவர்கள் இங்கு வந்த கதையும். சில ஆண்டு களுக்கு முன்பு மலைகளில் வசித்து வந்த இருளர்களை வனத்துறை ‘செட்டில்மென்ட்’ என்கிற பெயரில் வெளியேற்றியது. ஆனாலும் அவர்களுக்கு உரிய இடம் வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டனர். பலர் வாழ்வாதாரம் இல்லாமல் குப்பை பொறுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஏதேச்சையாக திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இவர்களைப் பார்த்தவர், தனது கிராமத்துக்கு அழைத்து வந்துவிட்டார்.
தற்போது 90 இருளர் குடும்பங்கள் இங்கே வசிக்கின்றன. அனைவருக்கும் கழிப்பறை மற்றும் தோட்டத்துடன் கூடிய சொந்த வீடு கட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறது. சேலையில் பிரிண்ட் போடுவது, பூ வேலைப்பாடுகள் செய்வது என்று தொழில் பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறையிடம் பேசி, இல வசமாக 25 கறவை மாடுகளை வாங்கிக் கொடுத் தார். அதிகத்தூர் இருளர் காலனி மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் தொடங் கப்பட்டு அருகில் இருக்கும் காக்கலூர் பால் பண்ணைக்கு பால் விற்பனை செய்கிறார்கள். இதேபோல இங்கு நிரந்தர வீடுகள் இல்லாமல் குடிசைகளில் வசித்த ஆதி திராவிடர் குடும்பங்களுக்காக ஆதி திராவிடர் காலனி உருவாக்கப்பட்டது. அனைத்து சமூகத்து மக்களும் படிக்க பள்ளிகள் இருக்கின்றன.
100% சுகாதார கிராமம் இது. யாரும் திறந்த வெளியில் மலம் கழிப்பதில்லை. இதற்காக பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் சென்ற சுமதி, திரவக் கழிவு மேலாண்மை பயிற்சி பெற்று வந்தார். அந்தத் தொழில்நுட்பம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. கழிப்பறைகளின் அடியில் இருவேறு கான்கிரிட் தொட்டிகளில் சேகரமாகும் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு நிலத்தடியில் அனுப்பப்படுகிறது. ஆந்திர மாநிலம் நந்தியால் நகராட்சிக்குச் சென்றவர், அங்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சி பெற் றார். இதுதொடர்பாக ‘ஏசியன் பெயிண்ட்ஸ்’ நிறு வனத்திடம் பேசியவர், ரூ.40 லட்சத்தை சமூக பொறுப்பு நிதியாகப் பெற்றார். அந்த நிதியில் உரம் தயாரிக்கும் மையம் அமைக்கப் பட்டுள்ளது. பேட்டரி வாகனம் வாங்கப்பட்டது. குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரித்து, விவசாயிகளுக்கு விற்கிறார்கள்.
அதிகத்தூர் இருளர் காலனிப் பெண்கள்.
“உணவு, உடை, இருப்பிடம். மக்களுக் கான அடிப்படை தேவை இவைதான். குறிப் பாக, சொந்தமாக ஒரு வீடு. இதை நிறை வேற்றுவதுதான் ஆள்கிறவங்களோட அதிக பட்ச லட்சியமாக இருக்கணும். என் பஞ்சாயத்து அளவுல அதை நிறைவேத்திட்டேன். அந்த மனநிறைவுடன் இந்த பொறுப்பில் இருந்து விடைபெறுகிறேன். மக்களுக்கு அதிகாரம்னா என்னன்னு நான் சொல்லிக் கொடுத்துட்டேன். இனிமே, மக்கள் பார்த்துக்குவாங்க” என்கிறார் சுமதி புன்சிரிப்புடன்.
மக்கள் அதிகாரம் வீறுநடை போடுகிறது அங்கே!
- பயணம் தொடரும்...
முக்கிய செய்திகள்
தமிழகம்
53 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago