சென்னை: “ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமைப் பயணம்’ கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தேசியக் கொடியைப் பெற்றுக்கொள்ளும் ராகுல் காந்தி மாபெரும் பொதுக்கூட்டத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க உரையை நிகழ்த்துவார்” கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் தலைவர் ராகுல் காந்தி வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3500 கி.மீ., 150 நாட்கள் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இத்தகைய பயணம் ஏன் தேவைப்படுகிறது, எதற்காக நடத்தப்படுகிறது என்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. இந்த பயணத்தை மேற்கொள்ளும் போது கிராமங்கள், சிறு நகரங்கள், பெருநகரங்கள் வழியே நடந்து சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் துயரங்களைப் புரிந்து கொண்டு, அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கிற முயற்சியில் தான் தலைவர் ராகுல் காந்தி பயணம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவை கண்டுணருகிற முயற்சியே இந்திய ஒற்றுமைப் பயணம்.
பொருளாதார ரீதியாக பார்க்கிறபோது பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி வருகிறார்கள். ஏழைகள் மேன்மேலும் ஏழைகளாகிக் கொண்டிருக்கிறார்கள். வானத்தைத் தொடும் அளவிற்கு விலைவாசி உயர்வு. விவசாயிகளும், கூலித் தொழிலாளர்களும் கடனில் மூழ்கிப் போகியிருக்கிறார்கள். சலுகைகளைப் பெற்று வரும் பெரும் முதலாளிகளிடம் நம் நாட்டின் சொத்துகள் பெருத்த நஷ்டத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றன. சாதி, மதம், மொழி, உணவு, உடை ஆகியவற்றின் அடிப்படையில் சமூகரீதியாக மக்கள் பிளவுபடுத்தப்படுகிறார்கள். ஓர் இந்தியன் தன்னுடைய சக இந்தியனுடன் சண்டையிட்டுக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே புதுப்புது சதித் திட்டங்கள் தினந்தோறும் உருவாக்கப்படுகின்றன. பெண்கள் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வு அதிகரித்துள்ளது. பிளவுபடுத்தப்பட்ட சமூகத்தால் வலிமையுடன் இருக்க முடியுமா?
அரசியல் ரீதியாக மக்களின் குரல் இன்றைக்கு ஒடுக்கப்படுகிறது. நமது அரசியல் சாசன உரிமைகள் நசுக்கப்படுகின்றன. உயர் அமைப்புகளைச் சிதைப்பதற்கும், ஜனநாயகத்தை கேலிக்குறியாக்குவதற்கும் நமது ஒற்றுமையை, சகோதரத்துவத்தை அழிப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வழங்கிய உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அரசமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியல் என்பது ஒன்றிய, மாநில அரசுகளுக்கு பொதுவானது.
» வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு
» வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
ஆனால், ஒன்றிய அரசு பொதுப் பட்டியலை கபளீகரம் செய்து மாநில உரிமைகளைப் பறிக்கிறது. மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு தர வேண்டிய ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரி பங்கீட்டுத் தொகை முறையாக வழங்குவதில்லை. தலித்துகள், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினரிடமிருந்து அவர்களின் அடிப்படை உரிமைகளான நீர், நிலம், காடு போன்றவை பறிக்கப்படுகின்றன. அரசு வேலை வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறைக்கப்பட்டு வருகின்றன. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மூடப்பட்டுள்ளன.
45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகின்றது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். 20 வயது முதல் 24 வயது வரையிலான 42 சதவிகித இளைஞர்கள் எந்த வேலையுமின்றி இப்போது வீட்டில் முடங்கியிருக்கிறார்கள். விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை மறுக்கப்பட்டு வருகிறது. வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டாலும் விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. ஒவ்வொரு இந்தியனின் சராசரி ஆண்டு வருமானம் ரூபாய் 1500 ஆகக் குறைந்துள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் பெரும் தொழிலதிபர்களுக்கு ரூபாய் 11 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பெரு நிறுவனங்களுக்கு ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி அளவிற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் அதானியின் வருமானம் ஒருநாளைக்கு ரூபாய் 1002 கோடி அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இத்தகைய தொழில் அதிபர்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலமாக வழங்கப்பட்ட மொத்த நன்கொடையில் 85 சதவிகிதம் பாஜகவுக்கு மட்டும் சென்றுள்ளது. இதைவிட ஒரு அப்பட்டமான ஊழல் வேறு என்ன இருக்க முடியும் ?
அதே சமயத்தில் சாதாரண மக்களிடமிருந்து எரிபொருள் வரியாக ரூபாய் 27 லட்சத்து 50 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டிருக்கிறது. சில தொழிலதிபர்களின் வருமானம் ஒரே வருடத்தில் ரூபாய் 30 லட்சம் கோடி அதிகரித்திருக்கிறது. அதேசமயத்தில் 85 சதவிகித குடும்பங்களின் வருமானம் கடுமையாகக் குறைந்திருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 27 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டனர். ஆனால், பாஜக ஆட்சியில் 23 கோடி பேர் வறுமைக் குழியில் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தியாவை ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின்படி பிளவுபடுத்துகிற முயற்சியில் பாஜக ஈடுபட்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவுக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளது. பிளவுபட்ட இந்தியாவை வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இணைக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. தலைவர் ராகுல்காந்தி மேற்கொள்கிற இந்திய ஒற்றுமை பயணத்தில் அனைத்து இந்தியர்களும் கைகோர்த்து இணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இந்தியாவின் சுதந்திரம், இறையாண்மை, அரசமைப்புச் சட்டம், ஜனநாயக அமைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இந்திய ஒற்றுமை பயணத்தில் அனைவரும் இணைய வேண்டுமென்று அரைகூவல் விடுத்து அழைக்கிறோம். இந்திய ஒற்றுமை பயணத்தில் அரசியல் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள், அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், வல்லுநர்கள் இவர்களோடு நாடு முடிவதிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
இந்திய ஒற்றுமைப் பயணம் கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7 ஆம் தேதி மாலை 4.00 மணியளவில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, காமராஜ் மண்டபத்திற்கு சென்ற பிறகு காந்தி மண்டபத்தில் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை வழங்குகிறார். இதைத் தொடர்ந்து 600 மீட்டர் பயணத்தை மேற்கொண்டு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று வரலாற்றுப் புகழ்மிக்க உரையை நிகழ்த்துகிறார்.
இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் அனைவரும் இணைய கன்னியாகுமரிக்கு அணி அணியாக வாருங்கள், அலை அலையாக வாருங்கள் என தமிழ் கூறும் நல்லுலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் அன்போடு அழைக்கிறோம்.'' இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago