பொதுவாக ராமநாதபுரத்தை ‘தண்ணி யில்லாக் காடு’ என்பார்கள். வைகையின் கடைமடை பாயும் பகுதி அது. வைகையின் தலைமடைக்கே தண்ணீருக்கு வழியில்லை. கடைமடையின் நிலையைச் சொல்லவா வேண்டும்? மதுரை யில் தொடங்கி ராமநாதபுரம் வரை காய்ந் துக்கிடக்கிறது வைகையும் அதன் பிள்ளை களுமான கண்மாய்களும். ராமநாதபுரத்தில் நிலத்தடி நீரைப் பருகலாம் என்றால் கடும் உப்பு கரிக்கிறது. ஊருக்கு நூறு பேர் சிறுநீரகக் கோளாறால் அவதிப்படுகிறார்கள். ஆனால், நிலைமை இன்றைக்கு பரவாயில்லை. காரணம், அரியனேந்தல் கிராமப் பஞ்சாயத்து. மக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைக் குடிக்கி றார்கள். சுத்திகரிப்பு என்றால் சும்மா குளோரின் பவுடரைக் கலந்துவிடுவது அல்ல. எதிர் சவ்வூடு பரவல் (Reverse osmosis) முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர். நாம் 20 ரூபாய் கொடுத்து பாட்டிலில் வாங்கிப் பருகும் தண்ணீரை அவர்கள் குடம் 5 ரூபாய்க்கு வாங்குகிறார்கள்.
இதோ… மணியடிக்கும் சத்தம் கேட்கிறது. மக்கள் குடங்களை எடுத்துக்கொண்டு வரிசை யாக வருகிறார்கள். கிராமப் பஞ்சாயத்துப் பணியாளர் குருநாதன் குடிநீர் மையத்தைத் திறக்கிறார். படுசுத்தமாக இருக்கிறது குடிநீர் சுத்திகரிப்பு மையம். சுவிட்சை தட்டுகிறார். குழாயில் சீறிப் பாய்கிறது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர். குழாயடி சண்டை எல்லாம் கிடையாது. வரிசையில் நிற்கிறார்கள். 5 ரூபாய் காசு கொடுத்து தண்ணீரைப் பிடிக்கிறார்கள். அத்தனைப் பேருக்கும் அரியனேந்தல் கிராமப் பஞ்சாயத்து சார்பில் பில்லிங் மெஷினில் ரசீது தரப்படுகிறது. அரியனேந்தல் மக்கள் மட்டுமல்ல; சுற்றுவட்டாரத்தில் சுமார் 10 கி.மீ-க் குள் இருக்கும் நென்மேனி, கிளைக்குளம், மஞ்சூர், பொட்டுக்கட்டி, சரஸ்வதி நகர், உலகநாதபுரம் உள்ளிட்ட ஊர்களில் இருந் தெல்லாம் பேருந்தில் வந்து தண்ணீர் பிடித்துப் போகிறார்கள்.
“இந்த மூணு வருஷமாதான் நாங்க நல்லத் தண்ணியைக் குடிக்கிறோம். இத்தனை வருஷத்துல இப்படி தண்ணியைக் குடிச்ச தில்லீங்க. இதமா இனிக்குதுங்க” என்கிறார்கள் ஊர் பெண்கள். இந்தத் தண்ணீருக்காகத்தானே மூன்றாம் உலகப் போர் மூளும் என்கிறார்கள். இந்தத் தண்ணீர் கிடைக்காமல்தானே இந்தியாவில் இன்றும் 100 மில்லியன் குடும்பங்கள் வாடுகின்றன. இந்தத் தண்ணீருக்காகத்தானே கர்நாடகம், கேரளம், ஆந்திரத்திடம் கையேந்தி நிற்கி றோம். இந்தத் தண்ணீருக்காகத்தானே விவசாயி கள் தண்டவாளத்தில் தலையை வைத்துப் போராடுகிறார்கள். இந்தத் தண்ணீருக்காகத் தானே சென்னையில் மூன்று கல்லூரி பிள்ளைகள் லாரியில் அடிபட்டு இறந்தார்கள். நினைவுகளில் இருந்து மீட்டார் நந்தகோபாலன்.
“எங்க கிராமம் மட்டுமில்ல; சுத்து வட்டாரத்துல அத்தனை கிராமத்துலேயும் கடுமையான குடிநீர் பஞ்சம். நிலத்தடித் தண்ணியைத்தான் குடிக்கணும். கடுமையா உப்புக் கரிக்கும். எங்க கிராமத்துல மட்டும் சுமார் 50 பேர் கிட்னியில கல்லு வந்து பாதிக்கப்பட்டாங்க. மாவட்டத்துல பல பேரு செத்துப்போயிருக்காங்க. ஒருநாள் சுதந்திர தின விழாவுக்காக எங்க ஊர் அரசு பள்ளியில கொடி ஏத்தினேன். குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்துட்டு ஒரு பிள்ளைக்கிட்ட, ‘வேறன்னப்பா வேணும்’னு கேட்டேன். ‘மிட்டாய் எல்லாம் வேணாமுண்ணே; குடிக்க நல்ல தண்ணியைக் கொடுங்க. நெதமும் எங்கம்மா வயித்து வலியில துடிக்குது. சீக்கிரம் செத்துப்போயிடும்னு டாக்டருங்க சொல்றாங்க’னுச்சு. ஒரு நிமிஷம் எனக்கு பூமியே நின்னுப்போயிட்ட மாதிரி ஆயிடுச்சு. கண்ணுல கரகரன்னு தண்ணி கொட்டுது.
நம்ம ஊருக்கு நல்ல தண்ணியைக் கொடுக்காம ஓயக்கூடாதுன்னு முடிவெடுத் தேன். அரசு அதிகாரிகளிடம் பேசினேன். அவங்களும் என்ன பண்ணுவாங்க, ‘பிரச்சினை உங்க ஊருக்கு மட்டும் புதுசா என்ன? மொத்த ராமநாதபுரமும்தான் தண்ணியில்லாம சாகுதே...’னு புலம்புனாங்க. பலநாள் தூக்கம் இல்லை. நாளுபூரா இதே நினைப்பு மண்டைக்குள்ள ஓடுது. அப்பதான் ஒருநாள் விருதுநகர் மாவட்டம், பெத்துரெட்டிப்பட்டி கிராமப் பஞ்சாயத்துல சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மக்களுக்கு கொடுக்குறாங்கன்னு தகவல் கேள்விப்பட்டேன். உடனே அங்ஙன ஓடினேங்க. சுத்திகரிப்பு மையம் அமைச்சு அஞ்சு ரூபாய்க்கு தண்ணீர் கொடுத்திட்டு இருந்தாங்க. கிராமப் பஞ்சாயத்துல தீர்மானம் போட்டு இப்படி ஒரு மையத்தை அமைச்சதா சொன்னாங்க. எல்லாத்தையும் போட்டோ புடிச்சிக்கிட்டேன். கையோடு எந்த நிறுவனம் அதைச் செஞ்சுக்கொடுத்ததுன்னு கேட்டு அங்கிட்டும் போய் கொட்டேஷன் வாங்கிட்டேன். எட்டு லட்சம் ரூபாய் வந்துச்சு.
மறுநாளே கலெக்டர் நந்தகுமாரைப் பார்த்து விஷயத்தை சொன்னேன். விருதுநகர் போய் பார்த்துட்டு முடிவு பண்ணிக்கலாம்ன்னார். இல்லைங்கன்னு, நான் போட்டோ, கொட் டேஷன் எல்லாம் மேஜையில பரப்பினேன். ‘எல்லா தயாராத்தான் வந்திருக்கீங்க’ன்னு சிரிச்சார். . ‘நம்ம மாவட்டத்துல இதுமாதிரி பண்ணதில்லை. அதுவும் கடினமான நம்ம நிலத்தடி தண்ணிக்கு இது செட் ஆகுமா தெரியலை. இருந்தாலும் சோதனை முயற்சி யாக செஞ்சுப் பார்ப்போம்’னு சொன்னார். கையோடு அஞ்சரை லட்சம் ரூபாய் ஒதுக்கினார். கிராமப் பஞ்சாயத்தில் இருந்து மீதித் தொகையைப் போட்டு உடனடியாக வேலையை ஆரம்பிச்சோம். ரெண்டு மாசத்துல கட்டிடம் உட்பட அத்தனையும் தயார். தண்ணியைக் குடிச்சிப் பாத்தோம். வாழ்நாள்ல எங்க பூமியில் இருந்து அப்படி ஒரு தண்ணியை நாங்க குடிச்சதில்லீங்க. மக்களுக்கெல்லாம் ஒரே சந்தோஷம்!
திரும்பவும் கலெக்டர்கிட்ட போய் ‘நீங்க தான் வந்து தொறந்து வைக்கணும்’ன்னேன். அவரோ, ‘நான் மாவட்டத்துக்கு கலெக்ட ருன்னா, நீங்க உங்க பஞ்சாயத்துக்கு கலெக்டர். நீங்க திறந்து வைக்குறதுதான் முறைன்னாரு. எங்க ஊருல சுதந்திரப் போராட்டத் தியாகி முத்தையாங்கிறவரை வெச்சி திறப்பு விழா நடத்தினோம். மறுநாள் கலெக்டர் நந்தகுமார் வந்தார். தண்ணியைக் குடிச்சிட்டு ‘மீட்டிங்குல குடிக்கிற பாட்டில் தண்ணி மாதிரியில்ல இருக்கு’ன்னு பாராட்டினார்” என்கிறார் நெகிழ்வுடன்.
அடுத்ததாக நடந்ததுதான் இன்னும் சிறப்பு. 2012-13ல் குடிநீர் சுத்திகரிப்பு மையம் இங்கு சிறப்பாகச் செயல்படத் தொடங்கியதும் இதே போன்ற திட்டத்தை ராமநாதபுரம் மாவட்டம் முழுக்க தொடங்க உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியர். இன்று சுமார் 100 கிராமப் பஞ்சாயத்துகளில் வெற்றிகரமாகச் செயல்படுகிறது சுத்திகரிப்பு குடிநீர் திட்டம்!
“குடித் தண்ணியைக் காசுக்கு விக்கிறது சரியான்னு கேட்குறாங்க. நாங்க வணிக நோக்கத்துல விக்கலை. குடிநீரின் மதிப்பு தெரியணும். எப்படி கஷ்டப்பட்டு இந்தத் திட்டத்தை இங்கே கொண்டு வந்தோம்ன்னு புரியணும். எத்தனை உசுரு இதில்லாம போயிருக்குன்னு தெரியணும். குறிப்பா, குடிநீரைக் குடிக்கிறதுக்கு மட்டும்தான் பயன்படுத்தணும். குளிக்க, துவைக்க பயன் படுத்தக்கூடாது. அதுக்காகதான் மலிவான விலைக்கு கொடுக்கிறோம். அந்தத் தொகை யில இந்த மையத்தை பராமரிக்கிறோம். பணியாளருக்கு சம்பளம் கொடுக்கிறோம்” என்கிறார். குடிநீர் மையத்தில் தண்ணீரை சுத்திகரிக்கும்போது வெளியேறும் நீரையும் வீணடிப்பதில்லை இவர்கள். சற்று தொலை விலேயே சுகாதார மையம் ஒன்றை அமைத்தி ருக்கிறார். அங்கு செல்கிறது அந்தத் தண்ணீர்!
“இந்தாங்க சார் குடிங்க...” என்று ஒரு சொம்புத் தண்ணீரைக் கொடுத்தார் பஞ்சாயத்துத் தலைவர் நந்தகோபாலன். தொண்டைக் குழியை நனைத்து நெஞ்சத்தில் குளிர்ச்சியாக இறங்குகிறது தண்ணீர். உள்ளங்களின் ஆட்சி கொடுத்த குளிர்ச்சி அது!
‘ஸ்ப்பீட்ன்னா என்னங்க சார்?’
கிராம சுயராஜ்யத்துக்கு காந்தி சொன்ன காரணங்களில் முக்கியமானது, அதிகாரிகளின் கைகளில் அதிகாரம் குவிந்துவிடக்கூடாது என்பதுதான். ஆனால், இன்றைக்கும் அந்த அவலம் தொடர்கிறது. அரியனேந்தல், ஓடந்துறை உள்ளிட்ட தமிழகத்தின் 6 பஞ்சாயத்துக்களுக்கு மத்திய அரசின் விருது ஒன்று அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த விருது வழங்கப்பட்டபோது கடந்த சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு இருந்ததால் இவர்களை டெல்லிக்கு அழைக்க முடியவில்லை. விருதும் விருதுத் தொகை ரூ.8 லட்சமும் மாநில ஊரக வளர்ச்சி துறைக்கு அனுப்பப்பட்டுவிட்டது. ஆனால், இன்னமும் அதனை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது ஊரக வளர்ச்சித் துறை. “நான் மெட்ராசுக்கு நடையா நடக்கிறேன். இயக்குநர்கிட்ட போனா ‘இங்கெல்லாம் ஏன் வர்ற? எங்களுக்கு கொடுக்கத் தெரியாதா? ஸ்ப்பீட்’ன்னு கோபப்படுறாரு. ஆமா, ஸ்ப்பீட்ன்னா என்னங்க சார்?” என்று அப்பாவியாக கேட்கிறார். ‘நேர்மையானவர்’என்று பொய் சொல்லிவிட்டு வந்தேன். ஆனால், அதுதானே உண்மை!
- பயணம் தொடரும்...
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago