வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இரவில் மின்னொளியில் ஜொலிக்கும் கோட்டை கொத்தளம்

By செய்திப்பிரிவு

வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இரவு நேரத்தில் மின்னொளியில் ஜொலிக்கும் வேலூர் கோட்டையை பொதுமக்கள் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலாத்தலமாக வேலூர் கோட்டை திகழ்கிறது. 16-ம் நூற்றாண்டில் 113 ஏக்கரில் பொம்மி ரெட்டி, திம்மி ரெட்டி ஆட்சியில் கட்டப்பட்ட இந்த கோட்டை ராணுவ ரீதியான பலம் மிக்க கோட்டையாக கட்டப்பட்டுள்ளது. கோட்டையை சுற்றியுள்ள அகழி கோட்டைக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது.

இந்தியாவில் அகழியுடன் கூடிய கோட்டைகளில் வேலூர் கோட்டை முக்கிய இடத்தை பிடித்துள்ளது. முதல் இந்திய சுதந்திர போராட்டத்தின் வித்தாக கருதப்படும் சிப்பாய் புரட்சி வேலூர் கோட்டையில் 1806-ம்ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இப்படி, வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் புதுப்பொலி பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோட்டையில் மார்பிள் நடைபாதைகள், பழங்காலத்து தூண்டில் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கோட்டையில் உள்ள ஆங்கிலேயர் காலத்து கட்டிடங்களையும் விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், கோட்டையின் கம்பீரமான கட்டமைப்பை இரவு நேரத்தில் பொதுமக்கள் பார்ப்பதற்காக அகழிக்கரையில் இருந்து கோட்டை கொத்தளத்தை நோக்கிய மின் விளக்குகள் ஒளிர ஏற்பாடு செய்துள்ளனர். இந்த பணிகள் நிறைவடைந்து நேற்று முன்தினம் இரவு மின்னொளி ஒத்திகை நடைபெற்றது.

நேற்று மொத்த மின் விளக்குகளை எரியவிடப்பட்டு கோட்டை கொத்தளத்தை மின்னொளியில் ஜொலிக்க வைத்து பொதுமக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தினர்.

இதுகுறித்து, வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் கோட்டையை ஒளி வெள்ளத்தில் ஜொலிக்க வைக்கும் திட்டமும் உள்ளது. இதற்காக, கோட்டையை சுற்றிலும் 280 மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இனி இரவு நேரத்திலும் கோட்டையின் அழகை பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE