அதிகம் பாஸ்போர்ட் பெற்றவர்கள்: தமிழகம் 3-வது இடம்

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: இந்தியாவில் அதிகம் பேர் பாஸ்போர்ட் பெற்ற மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.

ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு நாம் செல்ல பாஸ்போர்ட் பெற வேண்டியது கட்டயாம் ஆகும். பாஸ்போர்ட் இல்லாமல் நாம் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு கூட செல்ல முடியாது. இந்தியாவில் மூன்று வகையான பாஸ்போர்ட் உள்ளது. அதாவது சாதாரண / வழக்கமான பாஸ்போர்ட், டிப்ளமேடிக் பாஸ்போர்ட் மற்றும் அஃபீஷியல் பாஸ்போர்ட் என்று மூன்று வகை பாஸ்போர்ட்கள் உள்ளன.

ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியா 87-வது இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (ஐஏடிஏ) தரவைப் பயன்படுத்தி 199 பாஸ்போர்ட்டுகளில் எது வலிமையானது மற்றும் பலவீனமானது என்று தரவரிசைப்படுத்துகிறது. இதன் மூலமாக இந்தியாவின் பாஸ்போர்ட்டை வைத்து விசா இல்லாமல் எளிய முறையில் 60 நாடுகளுக்கு செல்ல முடியும்.

தாய்லாந்து, இந்தோனேசியா, மாலத்தீவு மற்றும் இலங்கை போன்ற ஆசிய நாடுகளுக்கு இந்தியர்கள் 'விசா-ஆன்-அரைவல்' முறையில் செல்லலாம். அதாவது விசா இல்லாமல் அந்த நாட்டிற்கு சென்ற பின்னர் விசா எடுத்துக் கொள்ளலாம். இதுபோல இந்திய குடிமக்களுக்கு விசா-ஆன்-அரைவல் சேவைகளை வழங்கும் 21 நாடுகள் ஆப்பிரிக்காவில் உள்ளன. இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே இந்த முறையில் இந்தியர்கள் செல்லலாம்.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி வரை 7,95,19,121 பேர் பாஸ்போர்ட் வைத்துள்ளனர். இதில், அதிகபட்சமாக கேரளாவில் 91,43,099 பேரும், மகாராஷ்டிராவில் 89,32,053 பேரும், தமிழ்நாட்டில் 79,27,869 பேரும் பாஸ்போர்ட் வைத்துள்ளனர்.

மிசோரம், நாகலாந்து, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறைவான நபர்கள்தான் பாஸ்போர்ட் வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE