உளுந்தூர்பேட்டை - சேலம் புறவழிச் சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக மாற்ற அன்புமணி கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை எண் 79-இல் உளுந்தூர்பேட்டை - சேலம் இடையிலான 136 கி.மீ தொலைவில் உள்ள புறவழிச் சாலைகளை இரு வழிச் சாலைகளில் இருந்து நான்கு வழிச்சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க கோரி மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதம்: "இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைப்பை விரிவுபடுத்துவதில் நீங்கள் காட்டும் உறுதிப்பாட்டுக்கு எனது வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் மிக முக்கியமான நெடுஞ்சாலை பிரச்சினையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

தேசிய நெடுஞ்சாலை எண் 79-இல் சேலம் - உளுந்தூர்பேட்டை இடையிலான 136 கி.மீ பாதையில் நடைபெறும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நெரிசல் மிகுந்த தேசிய நெடுஞ்சாலைகளில் இதுவும் ஒன்று. இந்த சாலையில் 8 இடங்களில் அமைந்துள்ள புறவழிச் சாலைகளில் 4 வழிச்சாலை திடீரென இரு வழிச்சாலையாக மாறி விடும் நிலையில், அதை கவனித்து சமாளிக்க முடியாமல் அந்த சாலையில் பயணிப்பவர்கள் தடுமாறுகின்றனர். இந்த சாலை கிட்டத்தட்ட மரணப்பாதையாகவே மாறி விட்டது. அதனால் அந்த சாலையில் நடைபெறும் விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில், சேலம் - உளுந்துர்பேட்டை இடையிலான 136 கி.மீ. நீள தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் கடந்த 2005-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கான பணியை கட்டி, இயக்கி, ஒப்படைக்கும் திட்டத்தின் கீழ் ரிலையன்ஸ் இன்ஃராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் ரூ. 941 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்றி 2012-ஆம் ஆண்டு ஜூலை மாதம் போக்குவரத்துக்கு திறந்து விட்டது.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இந்த சாலையில் 97.37 கி.மீ நான்கு வழிச்சாலை. மீதமுள்ள 38.99 கி.மீ நீள நெடுஞ்சாலை இருவழிச் சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலையில் மொத்தம் 8 இடங்களில், அதாவது உடையாப்பட்டி (6.40 கி.மீ), வாழப்பாடி(4.62 கி.மீ), நரசிங்கபுரம் மற்றும் ஆத்தூர் (7.20 கி.மீ), சின்னசேலம் (4.60 கி.மீ), கள்ளக்குறிச்சி (5.10 கி.மீ), தியாகதுருகம் (3.90 கி.மீ), எலவனாசூர்கோட்டை (4.00 கி.மீ), உளுந்தூர்பேட்டை (2.57 கி.மீ) ஆகிய இடங்களில் இரு வழி புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டன.

2014-ஆம் ஆண்டில் தனியார் ஆலோசனை நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட சுதந்திரமான ஆய்வில், மேட்டுப்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியின் வழியாக ஒவ்வொரு மாதமும் இரு சக்கர ஊர்திகளை சேர்க்காமல் சுமார் 2 லட்சம் வாகனங்கள் இந்த சாலையில் பயணிப்பதாக தெரியவந்தது. நடப்பு 2022-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகரித்திருக்கும்.

ஆனால், 8 இடங்களில் உள்ள புறவழிச்சாலைகளும் இரு வழிச்சாலைகளாகவே இருப்பதால், 4 வழிச்சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், புறவழிச்சாலை மட்டும் இருவழிச் சாலையாக இருப்பதை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. அதனால், அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் கூட, இரவு நேரத்தில் பிரகாசமான ஒளிரும் விளக்குகள் இல்லாமை, சாலைத் தடுப்புகளின் இடைவெளியிலும், சந்திப்புகளிலும் சூரிய ஒளியில் இயங்கும் மினுமினுப்பான்கள் அமைக்கப்படாமை, நான்கு வழிச்சாலைகள் இருவழிச்சாலைகளாக குறுகும் இடங்களில் பிரதிபலிப்பான்கள் இல்லாமை ஆகியவை தான் சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கான முதன்மைக் காரணம் ஆகும். விபத்து விகிதம் அதிகரிப்பதற்கான மிக முக்கியக் காரணம் சாலையின் தவறான வடிவமைப்பு தான். எடுத்துக்காட்டாக, நெடுஞ்சாலை திடீரென நான்கு வழிச்சாலையிலிருந்து இருவழிச் சாலையாக மாறுவதால், நான்கு வழிச்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் இருவழிச் சாலையிலும் அதேவேகத்தில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை எண் 79-இல் கடந்த 2011 முதல் 2022 வரையிலான 11 ஆண்டுகளில் மட்டும் 1036 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்துகளால் ஏராளமான குடும்பங்கள் தங்களுக்கு வாழ்வாதாரம் ஈட்டித்தடும் உறுப்பினர்களை இழந்துள்ளன, நூற்றுக்கணக்கானவர்கள் தங்களின் உடல் உறுப்புகளை இழந்து, வாழ்வாதாரம் ஈட்ட முடியாமல் வாழ்நாள் முழுவதும் படுக்கையிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 8 இடங்களில் உள்ள புறவழிச்சாலைகளிலும் இருவழிச்சாலைகளை நான்குவழிச் சாலைகளாக மாற்றுவதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணி பல ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து விட்டாலும் கூட, சாலை விரிவாக்கப்பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. 8 இடங்களிலும் இரு வழிச்சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு மீண்டும், மீண்டும் கோரிக்கை விடுத்தும் கூட, அதன் மீது ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது மிகவும் வருத்தமளிக்க்கிறது.

எனவே, தேசிய நெடுஞ்சாலை எண் 79-இல் சேலம் - உளுந்தூர்பேட்டை இடையிலான 136 கி.மீ பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் 8 இடங்களில் உள்ள இருவழி புறவழிச்சாலைகளையும் 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணிகளை உடனடியாக தொடங்க வேன்டும் என்று மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் என்ற முறையில் தாங்கள் ஆணையிட வேண்டும்; அதன்மூலம் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோவதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்