கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு - முல்லை பெரியாறு பிரச்சினை குறித்து பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருவனந்தபுரம் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனை நேற்று சந்தித்துப் பேசினார். இரு மாநிலங்களுக்கும் நலன் பயக்கும் திட்டங்கள் அடங்கிய அறிக்கையை அவரிடம் வழங்கியதுடன், முல்லை பெரியாறு பிரச்சினை குறித்தும் பேசினார்.

தென் மாநிலங்களில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் முதல்வர்கள் பங்கேற்கும் தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, தென்மண்டல கவுன்சிலின் 30-வது கூட்டம், கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.

கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று காலை11.40 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் சென்றார். முதல்வருடன் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, முதல்வரின் செயலர்கள் த.உதயச்சந்திரன், அனுஜார்ஜ் ஆகியோரும் சென்றனர். முன்னதாக திருவனந்தபுரம் சென்றிருந்த தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ் ஆகியோர், விமான நிலையத்தில் முதல்வரை வரவேற்றனர்.

கோவளத்தில் சந்திப்பு

அதைத் தொடர்ந்து, நேற்று மாலை கோவளத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, ‘தி திரவிடியன் மாடல்’ என்ற நூலை கேரள முதல்வருக்கு ஸ்டாலின் பரிசளித்தார். இந்த சந்திப்பின்போது, இரு மாநிலங்களுக்கும் நலன் பயக்கும் திட்டங்கள் குறித்த அறிக்கையை பினராயி விஜயனிடம் ஸ்டாலின் வழங்கினார்.

அத்துடன், முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்தி தேக்குதல், பேபி அணை புனரமைப்புக்கு அனுமதி அளித்தல், பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தம், நீராறு, கல்லாறு, ஆனைமலையாறு, சிறுவாணி, பாண்டியாறு - புன்னம்புழா மற்றும் நெய்யாறு திட்டங்கள் குறித்து இரு முதல்வர்களும் விவாதித்துள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியில், இருமாநில நதிநீர் பிரச்சினைகளை தீர்க்க பொதுப்பணித்துறை செயலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள், நதிநீர் திட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது, அமைச்சர் மனோ தங்கராஜ், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, முதல்வரின் செயலர்கள் த.உதயச்சந்திரன், அனுஜார்ஜ் ஆகியோரும் உடன் இருந்தனர்.

கலை நிகழ்ச்சியில் பங்கேற்பு

இதைத் தொடர்ந்து ஓணம் பண்டிகையை முன்னிட்டு அங்கு நடந்த கலை நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்றார். இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், இரவு 7 மணிக்கு சென்னை திரும்புகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்