“அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும் என்கிற ஓயாத முயற்சியே சுயாட்சி. அந்த அரசாங்கம் வெளிநாட்டு அரசாங்கமாக இருந்தாலும் சரி, தேசிய அரசாங்கமாக இருந்தாலும் சரி. வாழ்க்கையின் ஒவ்வொரு காரியத்துக்கும் மக்கள் அரசாங்கத்தையே எதிர்பார்த்துக்கொண்டிருந்தால் சுதந்திர அரசாங்கம் என்பதும் வருந்தத் தக்கதாகிவிடும்” என்றார் காந்தி.
ஆனால், இன்றைய நாள் காந்தியடிகள் வலியுறுத்திய அதிகாரப் பரவலுக்கு நேர் எதிரான நாளாக அமைந்துவிட்டது. கடந்த 20 ஆண்டுகாலம் தடையின்றி ஓடிக் கொண்டிருந்த பஞ்சாயத்து சக்கரம் இன்று நிறுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் தனி அதிகாரி களின் கட்டுப்பாட்டுக்கு வருகின்றன. அடிமட்டத்தில் இருக்கும் கிராமப் பஞ்சாயத்துக்களின் நிலைதான் மிகவும் கேள்விக்குறியாகியிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 12,524 கிராமப் பஞ்சாயத்துக்கள் இருக்கின்றன. ஐந்து கிராமங்களுக்கு ஒருவர் வீதம் சுமார் 2,500 தனி அலுவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் ஆறு மாத காலம் அல்லது உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கும் வரை பொறுப்பில் இருப்பார்கள்.
காந்தியடிகள் கிராம சுயராஜ்ஜியத்தை வலியுறுத்தியபோது அதனை கடுமையாக எதிர்த்தார் அம்பேத்கர். ‘இந்திய கிராமங்கள் மூடநம்பிக்கையிலும், சாதி வெறியிலும் ஊறிக்கிடப்பவை. அவை நம் நாட்டின் முன்னேற்றத்துக்கு பெரும் தடை!’ என்றார் அவர். ‘கிராம சுயராஜ்ஜியம் என்பது கிராமங்களில் உள்ள சாதி வெறிப்பிடித்த நிலக்கிழார்களுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கும். வலுவான மத்திய அரசின் அதிகாரம் மூலம் கிராமங்களைப் பாதுகாக்க வேண்டும்’ என்றார் அவர். சாதிய ஒடுக்கங்களில் இருந்து மக்களை காக்கவே அப்படி சொன்னார் அம்பேத்கர். ஆனால், காந்தியின் தரப்பினர் அவருக்கு பதில் சொல்ல இன்னொரு கருத்தை முன்வைத்தார்கள்.
அதிகாரத்தின் பிரதிநிதியாக, அரசாங்கத் தின் பிரதிநிதியாக செல்லும் அதிகாரியும் ஒரு மனிதன்தானே? அவர் ஒன்றும் சாதியம் பார்க்காத இயந்திரம் இல்லையே. நிலக்கிழார் சாதியம் பார்க்கிறார் என்று பயந்து அதிகாரி கையில் அதிகாரத்தை கொடுத்தால், மற்றுமொரு நிலக்கிழாராக அங்கே அந்த அதிகாரி உருவாக மாட்டார் என்பது என்ன நிச்சயம்? சுதந்திரத்துக்குப் பிறகு 50 ஆண்டுகளாக காணாத சுதந்திரத்தை கடந்த 20 ஆண்டுகளாகத்தான் நமது கிராமங்கள் அனுபவிக்கின்றன. அந்த 50 ஆண்டு கால கட்டத்தில் சாதிய ஒடுக்குதலுக்கு சற்றும் குறைவில்லாமல் இருந்தது அதிகாரிகளின் காலனிய ஆதிக்கம். தவிர ஊழல், நிர்வாக சீர்கேடு எல்லாம் சேர்த்து மக்களை ஓட்டாண்டி களாக்கி இருந்தன.
ஒருதரப்பினர் அதிகாரக் குவிப்புக்குக் காரணமாக இப்படிச் சொல்கிறார்கள்: ‘‘அதிகாரிகள் வழியாக கிராமங்களை, மக்களை நிர்வாகரீதியாக பயிற்றுவிக்க வேண்டும். இல்லையெனில் படிக்காத கிராம மக்கள் அடித்துக்கொள்வார்கள். வன்முறை உருவாகும்’’ என்கிறார்கள்.
சரி! படிக்காத மக்கள் என்றே வைத்துக் கொள்வோம். பாமரர்கள்தான். அவர்களிடம் பொறுப்பை கொடுங்கள். பிரச்சினை எழட்டும். வன்முறை உருவாகட்டும். அவர்கள் அடித்துக் கொள்ளட்டும். தவறுகள் செய்யட்டும். பாடம் கற்றுக்கொள்ளட்டும். தன்னைத் தானே தகவமைத்துக்கொள்ளும்போதுதான் இயல்பான, ஆரோக்கியமான ஒரு சமூகம் உருவாகும். இது ஓர் அறிவியல். கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி பீடத்தில் இருந்தவர்கள், அதிகாரிகள் செய்யாத தவறுகளையா எளிய மக்கள் செய்துவிடுவார்கள்? அரசியல்வாதிகள் உருவாக்காத வன்முறைகளையா கிராம மக்கள் உருவாக்கிவிடுவார்கள்?
சொல்லப்போனால், பிரச்சினைகள் உருவாகும்போதுதான், அதற்கான தீர்வுகளும் உருவாகின்றன. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தியபோதுதான் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, மேலவளவு சாதிய அவலங்கள் வெளியே தெரிந்தன. பிரச்சினை எழுந்தது. வன்முறை வெடித்தது. ஆனால், இன்றைக்கு ஓரளவுக்கேனும் தீர்வு கண்டிருக்கிறோமா இல்லையா? ஆனால், இன்று தனி சட்டம் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குச் செல்வது பஞ்சாயத்து ராஜ்ஜியம் என்கிற தத்துவத்துக்கு நேர் எதிரானது. இதன் பாதகங்களை களரீதியாக நன்கு அறிந்தவர் நந்தகுமார். உள்ளாட்சி அமைப்புகளுக்காக பணிபுரியும் முழுநேரத் தன்னார்வலர். கிராமங்கள்தோறும் சென்று உள்ளாட்சித் தத்துவத்தைப் பிரச்சாரமாக மேற்கொண்டு வருபவர்.
“நாடாளுமன்றத்துக்கு அல்லது சட்ட மன்றத்துக்கு இப்படி ஒரு நிலை வந்தால் இதுபோல் செய்வார்களா? நீதிமன்றத் தீர்ப்பில் தேர்தல் அறிவிப்பு நடைமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று குறிப் பிடப்பட்டது. அதற்கு பிறகேனும் சரியான கால அவகாசம் கொடுத்து புதிய தேர்தல் அறிவிப்பை முறையாக வெளியிட்டிருக்கலாம். தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அதை செய்யாமல் மேல்முறையீடு செய்தது. கிராமத்தின் அதிகாரங்கள் அதிகாரிகளிடம் சென்றால் அடித்தட்டு மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுவார்கள் என்பதை யாரும் புரிந்துக்கொள்ளவில்லை.
ஒரு கிராமப் பஞ்சாயத்தை நிர்வாகம் செய்யவே ஒரு தலைவர், ஏழெட்டு வார்டு உறுப்பினர்கள், ஒரு செயலாளர் ஆகியோர் தேவைப்படுகிறார்கள். இந்தச் சூழலில் ஐந்து பஞ்சாயத்துக்களை ஒரு அலுவலர் எவ்வாறு நிர்வகிப்பார்? அடுத்த வாரம் தனது மகளுக்கு கல்யாணம் வைத்துவிட்டு உதவித் தொகைக்காக காத்திருக்கும் ஏழை விவசாயி எங்கே போவார்? உதவி தொகைக்கு விண்ணப்பித்துவிட்டு காத்துக்கிடக்கும் அபலை பெண்கள் எங்கே போவார்கள்? கூரை வீட்டை மச்சு வீடாக கட்டிக்கொள்ள கனவு காணும் கூலி தொழிலாளி எங்கே போவான்? குடிநீர் மோட்டார் பழுது, தெருவிளக்கு மாற்றுதல், குப்பை அள்ளுதல் என எவ்வளவோ பணிகளுக்கு உடனடி நிதி தேவை. இவற்றை அதிகாரிகள் எப்படி தர முடியும்? எந்த நிதியில் இருந்து எடுத்துத் தருவார்கள்? தவிர, கேள்விகள் கேட்கவும் தவறுகளை சுட்டிக் காட்டவும் தங்களுக்கென்று தலைவர், வார்டு உறுப்பினர்கள் இருந்தார்கள். இப்போது யாரிடம் சென்று மக்கள் கேட்பார்கள்? எல்லாவற்றையும்விட அதிகாரிகள் நடத்துவது எப்படி மக்களாட்சியாக இருக்க முடியும்?
‘என் மக்கள் முடிவெடுத்துக் கொள்வார் கள். அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுங்கள். இந்தியர்கள் மக்களாட்சிக்கு தகுதியான வர்களே’ என்கிற காந்தியின் வரிகளை அடிக்கடி சொல்வார் ‘குத்தம்பாக்கம்' இளங்கோ. ‘அரசுப் பள்ளிகள் சிறப்பாக இயங்க அவை உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப் பாட்டில் இருக்க வேண்டும்’ என்பார் கல்வி யாளர் ராஜகோபாலன். ‘நீர்நிலைகள் மக்கள் பொறுப்பில் இருக்க வேண்டும்’ என்பார் ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங். உள்ளாட்சி அமைப்புகளின் உன்னதங்களை புரிந்துக்கொண்ட மனிதர்கள் இவர்கள்.
மக்களாட்சி, ஜனநாயகம் என்பவை வெறும் வார்த்தைகள் அல்ல; அவை ஒரு தத்துவம், கலாச்சாரம், மனோபாவம்! படிப்படியாக பரிணமிக்கவேண்டியவை அவை. 1996-ம் ஆண்டு முதல் இன்று வரை பல தவறுகளோடும் சாதனைகளோடும் பயணித்து வருகிறது உள்ளாட்சி அமைப்புகள். அதன் தவறுகளைக் களைந்து அதனை வலுப்படுத்துவதே நோக்கமாக இருக்கவேண்டும். ஏற்கெனவே மக்களுக்கு வழங்கப்பட்ட உள்ளாட்சி அதி காரங்கள் இன்றைக்கு தமிழகத்தில் பலவீனப் பட்டிருக்கின்றன. இந்த நிலையில் அதிகாரி களின் கைகளுக்கு அதிகாரம் செல்வது ஆரோக்கியமானது அல்ல...” சொல்லும்போது நந்தகுமாரின் அலைபேசி ஒலிக்கிறது.
அருகில் இருக்கும் கிராமத்தில் இருந்து பேசினார்கள். அங்கே ஆதரவற்று கிடக்கும் ஒரு முதியவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகச் சொன்னார்கள். எதுவும் இல்லாத ஏழை இறந்தால் இறுதி சடங்குக்கு ரூ.2,500 ரூபாயை கிராமப் பஞ்சாயத்து கொடுக்கும். பஞ்சாயத்துத் தலைவர் இருந்தால் உடனடியாக இந்தத் தொகை கிடைத்துவிடும். இப்போது யார் தருவார் அந்தப் பணத்தை? அரசு அலுவலர் தருவாரா?
- பயணம் தொடரும்...
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 secs ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago