அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி உத்தரவு ரத்து ஏன்? - உயர் நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: "ஜூன் 23-ம் தேதி பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில், அதற்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்க முடியாது" என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில், அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேல் முறையீட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று காலை தீர்ப்பளித்தனர். அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தும், இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டனர். 128 பக்கங்களைக் கொண்ட இந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

> கட்சி பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று விதி உருவாக்கப்பட்டது. அதில் மாற்றம் செய்ய தடை விதித்து இன்னொரு விதியும் உருவாக்கப்பட்டது.

> 25 ஆண்டுகளுக்கும் முன் கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் மறைவின்போது இதே நிலை ஏற்பட்டபோது பொது செயலாளர் ஜெயலலிதாவை அனுகமுடியவில்லை எனக்கூறி துணை பொதுச் செயலாளர் எஸ்.திருநாவுக்கரசு கூட்டிய பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கப்பட்டது. திருநாவுக்கரசு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளதால், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு உகந்தது தான் என முடிவுசெய்து விசாரித்தோம்.

> ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு கட்சி விதிகளில் 2017-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. 2021 டிசம்பர் பொதுக்குழுவில் ஒரே வாக்கு முறைப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு என திருத்தம் செய்யப்பட்டதால், தனிப்பட்ட முறையில் செயல்பட முடியாது. பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்காததால் இரண்டு பதவிகள் காலாவதியாகிவிட்டதா? என்பதை பிரதான வழக்கில் முடிவு செய்ய முடியும்.

> உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக சிவில் வழக்கு தொடர முடியாது எனக் கூற முடியாது.

> அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடக்கும் என ஜூன் 23-இல் பொதுக்குழுவில் அறிவித்ததே நோட்டீஸ் தான். அதனை முறையான நோட்டீஸாகத்தான் கருத வேண்டும். பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று நடத்தப்படும் சிறப்பு கூட்டங்களுக்கு இன்னொரு நோட்டீஸ் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை.

> ஒ.பன்னீர்செல்வம் இருந்தபோதுதான் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுக்குழுக் கூட்டம் குறித்து தனக்கு தெரியாது என்று அவர் கூற முடியாது. இருவருக்கும் இருந்த மோதல் காரணமாக இருவரும் இணைந்து சிறப்பு பொதுக்குழுவை கூட்டுவார்கள் என எதிர்பார்க்கமுடியாது.ஒருவருக்கொருவர் இடையே ஒத்துழைப்பு இல்லாத நிலையில், பொதுக்குழுவே கூட்டமுடியாத நிலைதான் உள்ளது.

> திருநாவுக்கரசு வழக்கில் துணை பொதுச் செயலாளர் கூட்டத்தை கூட்டியதால் தடை விதிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய வழக்கில் போட்டி பொதுக்குழு கூட்டாததால் அந்த வழக்கின் உத்தரவு தற்போது பொருந்தாது. இபிஎஸ் ஓபிஎஸ் இடையே பிரச்சினை நிலவுவதால், ஜூன் 23-இல் அவைத்தலைவர் அழைப்பு விடுத்த ஜூலை 11 பொதுக்குழு சட்டவிரோதம் என கூற முடியாது.

> அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் உள்ள பொதுக்குழுவுக்குத்தான் உச்ச பட்ச அதிகாரம் உள்ளது. இருவரும் இணைந்து கூட்டத்தை கூட்ட இயலாத நிலையில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடும் நிலைக்கு தள்ள முடியாது. பொதுக்குழுவுக்கு தலைமை நிலைய செயலாளர் அறிவிப்பு வெளியிட்டதில் தவறில்லை.

> பதவி காலி என்பதால் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை விட்டுவிட்டு, தலைமை நிலைய செயலாளர் என்ற நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இப்படியான ஒரு நிலையில் இருவரும் இணைந்து தான் பொதுக்குழு செயற்குழுவை கூட்ட வேண்டுமென கூற முடியாது. எனவே ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு என்ற அறிவிப்பில் தடையில்லை.

> 2460 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து 2539 உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். பொதுக்குழுவை ஜூலை 11-ம் தேதி கூட்ட வேண்டுமென்ற கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில்,அதனை போலியானது என்று சொல்ல முடியாது.

> பொதுக்குழு, செயற்குழு இருவரும் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்ற உத்தரவால் ஈடு செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கட்சி முடங்கும் நிலையில் உள்ளது. ஜூன் 23-ம் தேதி பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில், அதற்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்க முடியாது.இருவரும் இணைந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டுமென்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லாதது.

> ஒருங்கிணைப்பாளர் பதவி காலியானதாக இணை ஒருங்கிணைப்பாளர் கடிதம் எழுதி உள்ள நிலையில், அதே பதவியில் தொடர உத்தரவிட்டது தவறு. இரு பதவிகள் தேர்வு செய்யப்பட்டதற்கு ஜூன் 23-ம் தேி பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கவில்லை. பதவிகள் காலியாகிவிட்டது போன்ற விவகாரத்தில் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. அவை பிரதான வழக்கில்தான் முடிவு செய்ய முடியும்.இதன் அடிப்படையில் தனி நீதிபதி தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்