அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக ஒழிக்க முயல்வதா? - அன்புமணி கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக ஒழிக்க முயல்வதா? வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''தமிழக அரசுத் துறைகளில் ஐந்தாண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணியிடங்களையும், பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் தற்காலிக பணியிடங்களையும் ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்வதற்காக குழு ஒன்றை அமைக்க அரசு ஆணையிட்டிருக்கிறது. தமிழகத்தில் அரசு பணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் நிலையில், இது பெரும் பாதகத்தையே ஏற்படுத்தும்.

தமிழக அரசு நிதித்துறை இதுதொடர்பாக பிறப்பித்துள்ள 18.08.2022 தேதியிட்ட அரசாணையில், பத்தாண்டுகளுக்கு மேலாக தொடரும் தற்காலிக பணியிடங்கள், 5 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள நிரந்தரப் பணியிடங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியமானது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்காக தமிழக அரசின் சார்பில் அமைக்கப்படும் 3 உறுப்பினர்கள் குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் இந்த பணியிடங்களை தொடருவதா... ரத்து செய்வதா? என்பது பற்றி அரசு முடிவெடுக்கும் என்றும் தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணையில் கூறப்பட்டுள்ளது.

ஐந்தாண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணியிடங்களையும், பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் தற்காலிக பணியிடங்களையும் ஆய்வு செய்வதற்காக தமிழக அரசின் நிதித்துறை முன்வைத்துள்ள காரணிகளே தவறானவை. ஒரு பணியை ஐந்தாண்டுகளுக்கு மேல் நிரப்பாமலேயே, அந்த பணியிடம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்ற முடியும் என்றால், அத்தகைய பணியிடங்களை இனியும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தான் நிதித்துறையின் பார்வை ஆகும். அதேபோல், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் உருவாக்கப்பட்ட தற்காலிக பணியிடங்கள், அக்காலத்திற்கு பிறகு தொடர வேண்டிய அவசியமில்லை என்ற அரசின் பார்வையும் முழுக்க முழுக்க தவறானது ஆகும்.

தமிழக அரசுத் துறைகளில் 5 ஆண்டுகளுக்கும் மேல் நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் நிலையில், அந்த பணியிடங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் தாமாகவே நிறைவேறுவதாக அரசு நினைப்பது முற்றிலுமாக மாயை தான். அந்த பணியிடங்களுக்கான பணிகளை பிற ஊழியர்கள் தான் பகிர்ந்து கொள்கின்றனர். அதனால் அரசுத் துறை அலுவலகங்களில் பணிகளின் வேகம் பாதிக்கப்படுகிறது. பல துறைகளில் மக்களுக்கு 10 நாட்களில் வழங்கப்பட வேண்டிய சேவைகள் 15 நாட்களுக்கு மேலாகியும் கிடைப்பதில்லை. இந்த உண்மைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அரசு அலுவலகங்களில் பணிகள் தடைபடாமல் நடக்கின்றன என்று கூறி, அப்பணியிடங்களை ரத்து செய்ய துடிப்பது அநீதி ஆகும்.

அதேபோல், தற்காலிக பணியிடங்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக நீடிப்பதற்கு காரணமும் அரசின் செயல்பாடின்மை தான். அரசு பணியிடங்கள் காலியாகும் போது, அதனால் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகள் தடைபடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் தற்காலிக பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. அவை எவ்வளவு காலத்திற்கு உருவாக்கப்படுகின்றனவோ, அந்த காலத்திற்குள் நிரந்தரப் பணியிடம் நிரப்பப்பட்டு விட்டால், தற்காலிகப் பணியிடம் தானாகவே காலாவதியாகி விடும். ஆனால், காலியாகும் நிரந்தர பணியிடங்களை தமிழக அரசு நிரப்புவதே இல்லை என்பதால் தான், காலியிடங்கள் பத்தாண்டுகளைக் கடந்தும் நீடிக்கின்றன. நிரந்தர பணியிடங்களை நிரப்பாவிட்டால், தற்காலிகப் பணியிடங்கள் 25 ஆண்டுகள் ஆனாலும் நீடிக்கத் தான் செய்யும். இதை உணராமல், பத்தாண்டுகளுக்கு மேலும் தற்காலிகப் பணியிடங்கள் தொடருவது ஏன்? என்று ஆராய்வதில் பயனில்லை.

தமிழக அரசு துறைகளில் மூன்றரை லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. அதற்கு காரணம், காலியிடங்களை அரசு நிரப்பாதது தான். காலியிடங்களை நிரப்பாமல் வைத்து விட்டு, ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் காலியிடங்களை ரத்து செய்ய துடிப்பது அப்பட்டமான ஆட்குறைப்பு நடவடிக்கை தான். இதன் முடிவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள் வேலை இழக்க நேரிடும். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிக்கும். இது மிகப்பெரிய சமூக அநீதி.

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அரசுத் துறைகளிலும், கல்வி நிறுவனங்களிலும் காலியாக உள்ள மூன்றரை லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்; புதிதாக 2 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று வரை அரசுத்துறைகளில் ஒரு பணியிடம் கூட புதிதாக உருவாக்கப்படவில்லை; அதேபோல், கடந்த 15 மாதங்களில் நிரப்பப்பட்ட அரசுப் பணி காலியிடங்களை விட, புதிதாக உருவாக்கப் பட்ட காலியிடங்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

இத்தகைய சூழலில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் பணியிடங்களை ஒழிக்க நினைப்பது நியாயமல்ல. இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும். மாறாக, தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்