குரங்கனி தீ விபத்து வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு; பெல்ஜியம் நபரின் கோரிக்கை நிராகரிப்பு

By கி.மகாராஜன்

மதுரை: குரங்கனி தீ விபத்து வழக்கை ரத்து செய்யக் கோரி பெல்ஜியத்தை சேர்ந்தவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை பாலவாக்கத்தில் வசிப்பவர் பீட்டர் வான் கெய்ட். பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இவர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: சென்னை டிரக்கிங் கிளப்பை 2013-ல் தொடங்கி நடத்தி வருகிறேன். எங்கள் அமைப்பை சேர்ந்த திவ்யா முத்துக்குமார், நிஷா ஆகியோர் 4 ஆண்டுக்கு முன்பு மகளிர் தினத்தை முன்னிட்டு சில குழுக்களை குரங்கனி மலை ஏற்றத்துக்கு அழைத்துச் சென்றனர். வனத்துறையில் முறையாக அனுமதி பெற்றே 27 பேர் மலையேற்றத்துக்கு சென்றனர்.

மலையேற்றத்தை நிறைவு செய்து கீழே இறங்கும் போது எதிர்பாராவிதமாக தீ விபத்து நிகழ்ந்தது. காட்டுத்தீயில் சிக்கி மலையேற்ற பயிற்சியை ஒருங்கிணைந்த 4 பேர் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.

மலையேற்றக் குழுவினர் காட்டுக்குள் செல்வதற்கு வனத் துறையினர் கட்டணம் வசூலித்தனர். அதற்கான ரசீது வைத்திருந்தவர்கள் தீ விபத்தில் உயிரிழந்தனர். இதையடுத்து அனுமதி பெறாமல் மலையேற்றம் சென்றதாக வழக்குப் பதிவு செய்தனர். இந்த மலையேற்றத்துக்கு தலைமை வகித்ததாக என் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தீ விபத்து நிகழந்தபோது நான் பெல்ஜியம் நாட்டில் இருந்தேன். எனவே, போடி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குரங்கனி தீ விபத்து வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்து, மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. மனு தள்6ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE