தமிழக மீனவர் பிரச்சினை | இரு நாட்டு கடற்கரைப் பகுதிகளில் தீர்வு மையங்கள் உருவாக்குக: ஓபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: "தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், இரு நாட்டுக் கடற்கரை பகுதிகளிலும் சிக்கல் தீர்க்கும் மையங்களை உருவாக்க மத்திய அரசை திமுக வற்புறுத்தும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் முடிந்த நிலையில், இதற்கான முயற்சியை எடுத்ததாகத் தெரியவில்லை" என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட, வழக்கமாக மீன்பிடிக்கும் பகுதிகளில், தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வரும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் கடந்த சில மாதங்களாக தொடர் கதையாக இருந்து வருவது வேதனை அளிக்கும் செயலாகும்.

உதாணமாக, 06-08-2022 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், 10-08-2022 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய படகும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 இந்திய மீனவர்கள் 22-08-2022 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய மீன்பிடிப் படகும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, 27-08-2022 அன்று ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து தமிழக மீனவர்களின் 95 படகுகள் இலங்கை வசம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளிலுமே தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், இந்தியக் கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் சிறைபிடித்தலுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை கடற்படையின் இதுபோன்ற தொடர் துன்புறுத்துதல்களைப் பார்க்கும்போது, இந்திய மீனவர்கள் மீன்பிடித் தொழிலையே கைவிடும் அளவுக்கு அவர்கள் மனதில் ஒரு பதற்றத்தை, ஒரு பீதியை உருவாக்கும் நோக்கத்தோடு இலங்கை கடற்படை செயல்படுகிறதோ என்ற அச்சம் மீனவ மக்களிடையே நிலவுகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில், கடலில் தங்களுடைய உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாத நிச்சயமற்ற தன்மை இலங்கைக் கடற்படையினரால் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக மீனவர்கள் உணர்கிறார்கள். இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும், அவர்களுடைய படகுகள் உடனடியாக திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்பதும் மீனவ மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், இரு நாட்டுக் கடற்கரை பகுதிகளிலும் சிக்கல் தீர்க்கும் மையங்களை (Crisis Management Centres) உருவாக்க மத்திய அரசை திமுக வற்புறுத்தும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் முடிந்த நிலையில், இதற்கான முயற்சியை எடுத்ததாகத் தெரியவில்லை.

தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக நான் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதங்களை எழுதியுள்ளேன். தமிழக முதல்வரும் அவ்வப்போது கடிதங்களை எழுதுகிறார். இருப்பினும், தமிழக மீனவர்களை தொடர்ந்து சிறைபிடிப்பதை இலங்கை கடற்படை வாடிக்கையாக கொண்டுள்ளது.

எனவே, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதை தடுக்கவும், அவர்களுடைய படகுகள் பறிமுதல் செய்யப்படுவதை நிறுத்தவும், அவர்கள் எவ்வித அச்சமுமின்றி இந்திய எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் சுதந்திரமாக மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இரு நாட்டு கடற்கரை பகுதிகளிலும் சிக்கல் தீர்க்கும் மையங்களை உருவாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்வர் எடுக்க வேண்டும் என்றும் அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்