மதுரையில் மாணவர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: பஸ் படிக்கட்டில் பயணித்தவர்களுக்கு போலீஸார் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

மதுரையில் நேற்று முன்தினம் அரசு பேருந்து படிக்கட்டில் பய ணித்த பள்ளி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக நேற்று நகர் முழு வதும் முக்கிய நிறுத்தங்களில் போக்குவரத்து போலீஸார், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து அரசு பேருந்து படிக்கட்டில் பயணித்து வந்த மாணவர்களை பிடித்து எச்சரித்து உறுதிமொழி எழுதி வாங்கினர்.

மதுரையில் நேற்று முன்தினம் அரசு பேருந்து படிக்கட்டில் நின்று பயணித்த விளாங்குடி பகுதி 9-ம் வகுப்பு படித்த மாணவர் பிரபாகரன் தவறி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

இதன் எதிரொலியாக மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஆறுமுகசாமி, கூடுதல் துணை ஆணையர் திருமலை குமார் அறிவுறுத்தலின்படி, உதவி ஆணையர்கள் செல்வின், மாரியப்பன் தலைமையில் போக்குவரத்து போலீஸார் நேற்று மாநகர் பேருந்துகளில் படியில் நின்று பயணித்த பள்ளி, கல்லூரி மாணவர்களை பிடித்து எச்சரித்து உறுதிமொழி எழுதி வாங்கினர்.

அவனியாபுரம் பெரியார் சிலை அருகே போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கபாண்டியன் தலைமையிலும், மாட்டுத்தாவணி, மூன்று மாவடி, பாத்திமா கல்லூரி, காளவாசல், திருப்பரங்குன்றம், தெப்பக்குளம் உட்பட பல்வேறு இடங்களிலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஆர்டிஓக்கள் செல்வம் (வடக்கு), சிங்காரவேலன்( தெற்கு), சித்ரா (மத்தி) வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் முரளி, உலகநாதன், சக்திவேல், ஜாஸ்மின் மேரி கமலம், சம்பத்குமார் மற்றும் போக்குவரத்து காவல் பிரிவு ஆய்வாளர்கள் கார்த்திகேயன், சுரேஷ், பூர்ணா கிருஷ்ணன், தங்கமணி, போலீஸார் உள்ளிட்டோர் மற்றும் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் முத்துமணி, உதவி பொறியாளர் கண்ணன் ஆகியோரும் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE