துணைவேந்தர் நியமனம் மாநில அரசின் உரிமை - சென்னையில் நடந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டு பல்கலைக்கழகங்கள், துணைவேந்தர்கள் செயல்பட வேண்டும். துணைவேந்தர் நியமனம் என்பது மாநில அரசின் உரிமை என்று துணைவேந்தர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் பேசியதாவது:

கலை, அறிவியல், இசை, விளையாட்டு, கல்வியியல், தமிழ் வளர்ச்சி, சட்டம், பொறியியல், மருத்துவம் என தனித்தனி சிறப்பு பல்கலைக்கழகங் கள் அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழகம் அமைந்துள்ளது. வேலைவாய்ப்பு தருவது மட்டுமே உயர்கல்வியின் நோக்கம் அல்ல. ஒரு முழுமையான மனிதனை, அனைத்து பண்புகளிலும் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை உயர்கல்வி உருவாக்க வேண்டும் என்பதே என் கனவு. அதை தமிழக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் நிறைவேற்ற வேண்டும். கல்வித் தரமும் வேண்டும். மாணவர் களின் எண்ணிக்கையும் குறையக் கூடாது. இதில் அரசு உறுதியாக இருக்கிறது.

வளர்ந்துவரும் தொழில்கள் மற்றும் அதற்கு தேவையான திறன்களை வளர்க்க, தொழில் நிறுவனங்களின் முழு பங்கேற்புடன் ஒருங்கிணைந்த பாடத் திட்டம் உருவாக்கப்படுகிறது. உலகத் தரத்துக்கு இணையாக பட்டப் படிப்புகள் சீரமைக்கப்படுகின்றன.

ஆராய்ச்சிக்கு ரூ.50 கோடி

உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளை தமிழகத்தில் செயல்படுத்தவும், ஆராய்ச்சிகள் மேற்கொள்ள ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், இளநிலை, முதுநிலை மாணவர்களை ஊக்கப்படுத்தவும் ஆண்டுதோறும் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்படும். மாணவர்கள், ஆசிரியர்களிடம் இருந்து இதற்கான திட்ட அறிக்கைகள் பெறப்பட்டு, நிபுணர் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு, அவர்களது பரிந்துரைப்படி நிதி வழங்கப்படும்.

மாணவர்களின் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தவும் ‘முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகை’ திட்டம் தொடங்கப்படும். இதற்கு, மாநில அளவில் தகுதி தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தொழில் துறையில் ஏற்பட்டு வரும் நவீன மாற்றங்களுக்கு ஏற்ப, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்க ஏதுவாக தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது. அதேநேரம், மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டு பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும். அறிவியல் சிந்தனை கொண்ட சமூகத்தையும், அறிவுப்பூர்வமான மாணவர்களையும், உருவாக்கக் கூடிய கடமையைத்தான் பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டும்.

துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளோம். ஏனென்றால், இது மாநில அரசின் உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமை. எனவே, மாநில அரசின் கொள்கை முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள், துணைவேந்தர்கள் செயல்பட வேண்டும்.

நாம் நீட் தேர்வுக்கு எதிராக இருக்கிறோம். நாம் எதிர்ப்பதற்கான காரணம் அத்தேர்வு மீதான பயம் அல்ல. படிப்புதான் தகுதியை தீர்மானிக்க வேண்டுமே தவிர, தகுதி இருந்தால்தான் படிக்கவே வரவேண்டும் என்று சொல்வது அநீதி. அதனால்தான் எதிர்க்கிறோம். கல்வியிடம் இருந்து மாணவர்களை அந்நியப்படுத்தும் அனைத்தையும் நாம் எதிர்க்க வேண்டும். அந்த அடிப்படையில்தான், நீட் தேர்வை மட்டுமல்லாமல், புதிய தேசிய கல்விக் கொள்கையையும் நாம் எதிர்க்கிறோம். மாநில கல்விக் கொள்கையை வகுக்க முன்னாள் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள் ளது. புதிய பாடங்கள், புதிய பட்டப் படிப்புகளை அறிமுகம் செய்யுங்கள். மாணவர் சமுதாயத்துக்கு எந்த பாடத்தில் ஆர்வம் இருக்கிறதோ, அதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள அவர்களை அனுமதியுங்கள்.

பழமைவாத, பிற்போக்கு கருத்துகளை புறந்தள்ளி, புதிய அறிவியல் கருத்துகள், ஆக்கப்பூர்வமான, வளமான சிந்தனையை மாணவர்களிடம் வளர்த்து, நாட்டுக்கும், எதிர்கால இளைஞர் சமுதாயத் துக்கும் பெருமை சேருங்கள். இவ்வாறு முதல்வர் கூறினார்.

பேராசிரியர்கள் நியமனம்

மாநாட்டில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி பேசும்போது, “போட்டித் தேர்வுகளுக்கு ஏற்ப பாடத் திட்டம் அமைப்பதுடன், கல்லூரிகளில் அதற்கு பயிற்சியும் அளிக்க வேண்டும். துணைவேந்தர்கள் இதுதொடர்பாக கல்லூரி முதல்வர்களை அழைத்து இந்த உணர்வை உருவாக்க வேண்டும். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் கற்றுத்தர விரும்பினால், அதற்கான பேராசிரியரை அழைத்து கற்றுக் கொடுக்கலாம். பேராசிரியர்கள் நியமனம், தற்காலிக பணியில் இருப்பவர்களுக்கு சம்பளம் தருவது குறித்து முதல்வரிடம் பேசியுள்ளோம். பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள 4,000 பேராசிரியர்கள், 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து நியமிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். காலத்துக்கேற்ற மாற்றங்களுடன் பாடத் திட்டங்களை தயாரிக்க வேண்டும்” என்றார்.

மாநாட்டில் அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், மெய்யநாதன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலர் உதயச்சந்திரன், உயர்கல்வித் துறை செயலர் தா.கார்த்திகேயன் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE