நீலகிரியில் பரவலாக கனமழை: கல்லட்டி மலைப் பாதையில் 10 இடங்களில் மண் சரிவு

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், கல்லட்டி மலைப்பாதையில் 10 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இந்தாண்டு தென்மேற்கு பருவமழை 100 சதவீதத்தையும் தாண்டி அதிகமாக பெய்து வருகிறது. இதனால், நீலகிரி மாவட்ட அணைகள் நிரம்பி வருவதோடு, ஆறுகள் மற்றும் அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில், உதகையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக மார்க்கெட் பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததுடன், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. இதேபோல, மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து படகு இல்லம் செல்லும் சாலையிலுள்ள ரயில்வே பாலத்தின் கீழ்பகுதி மற்றும் ரயில்வே காவல் நிலையம் பகுதியில் குளம்போல தண்ணீர் தேங்கியது.

இதனால், அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. பின்னர் தண்ணீர் வடிந்ததும் மீண்டும் அச்சாலையில் போக்குவரத்து தொடங்கியது. இதேபோல, ரயில் நிலையப் பகுதியில் வணிக வளாகங்களில் தண்ணீர் புகுந்தது. ஜவுளிக் கடைக்குள் தண்ணீர் புகுந்து, ஆடைகள் சேதமாகின.

உதகை - குன்னூர் சாலை காட்டேரி பூங்கா அருகே சாலையில் பாறைகள் மற்றும் மண் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, வருவாய் துறையினர் பொக்லைன் வாகனம் மூலமாக பாறைகளை ஒதுக்கினர். உதகை - மசினகுடி சாலை கல்லட்டி மலைப் பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

உதகையிலுள்ள தமிழகம் சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதகை தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான தீயணைப்புக் குழுவினர் சென்று, மரங்களை வெட்டி அகற்றினர்.

கூடலூர், மசினகுடி, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழையால், ஆங்காங்கே லேசான மண் சரிவு ஏற்பட்டது. கடும் குளிர் நிலவுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் செல்கின்றன.

தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்களில் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதே சமயம், காய்கறி தோட்டங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கியிருப்பதால், பயிர் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.

மழை அளவு (மி.மீ.)

நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக கல்லட்டியில் 67 மில்லி மீட்டர் மழை பதிவானது.

உதகை 35, கிளன்மார்கன் 34, குந்தா 28, கோடநாடு 27, நடுவட்டம் 26, ஓவேலி 24, கோத்தகிரி 22, தேவாலா 20, கூடலூர் 15, கெத்தை 14, சேரங்கோடு 14, கிண்ணக்கொரை 13, அவலாஞ்சி 11, பந்தலூர் 11, கீழ் கோத்தகிரி 11, அப்பர் பவானி 11, எமரால்டு 10, மசினகுடி 8, குன்னூரில் 6 மில்லி மீட்டர் மழை பதிவானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE