ஓஎன்ஜிசி விவகாரத்தில் கம்யூனிஸ்ட் நிலைப்பாடு வேதனை தருகிறது: மக்கள் நலனுக்கு எதிரானது என போராட்ட அமைப்புகள் கருத்து

By வீ.தமிழன்பன்

காரைக்கால்: ஓஎன்ஜிசி விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தற்போதைய நிலைப்பாடு வேதனையளிக்கும் வகையில் உள்ளதாக போராட்ட அமைப்புகள் கருதுகின்றன.

காரைக்கால் மாவட்டம் நிரவியில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘‘ஓஎன்ஜிசி தொழிலாளர்களின் நலன் கருதி, செயல்படாமல் உள்ள 60 எண்ணெய்க் கிணறுகளை இயக்க, அறிவியல்பூர்வமாக மக்களிடம் எடுத்துக் கூறி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

களத்தில் போராடும் அமைப்புகளின் தலைவர்களிடமும் இது குறித்து விளக்கும் முயற்சியை ஓஎன்ஜிசி அலுவலர்கள் முன்னெடுத்தால், ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருக்கிறேன்’’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஓஎன்ஜிசி தொழிலாளர்கள் நலன் கருதி, அந்நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டும், அந்நிறுவனத்துக்கு எதிராக போராடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பிலான தொழிற்சங்கங்கள் சார்பில் திருவாரூரில் அண்மையில் பேரணி நடைபெற்றது.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. எம்.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கட்சி எம்எல்ஏ நாகை மாலி உள்ளிட்டோர் பங்கேற்றனர் இதனால், ஓஎன்ஜிசி நிறுவனத்தை எதிர்த்து போராடிய அமைப்புகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகளின் இந்தப் போராட்டம், மக்கள் நலனுக்கு எதிரானது என்றும் விமர்சித்துள்ளன.

இதுகுறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் ‘இந்து தமிழ்’ நாளி
தழிடம் கூறியது: தொழிலாளர்கள் பாதிக்கப்படு வார்கள் என்பதால், ஓஎன்ஜிசி நிறுவனத்தை முற்றிலும் அகற்றக் கூடாது எனவும், அதேவேளையில், ஹைட்ரோகார்பன், ஷேல் திட்டங்களை முற்றிலும் எதிர்க்கிறோம் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தர
சன் கூறியுள்ளார். ஆனால், இந்த இரு திட்டங்களை மட்டும் எதிர்த்து நாங்கள் போராடவில்லை.

ஓஎன்ஜிசி இதுவரை அமைத்த எண்ணெய், எரிவாயு திட்டங்களால் காவிரிப் படுகையில் நிலம், நீர், சூழல் பாதிக்கப்பட்டுள்ளதுடன், புற்றுநோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதையும் ஆதாரங்களுடன் முன்வைத்துதான் போராட்டங்கள் நடத்தப்பட்டன. எனவே, கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு தவறு.

போராடும் அமைப்புகள் மீது அவதூறு பரப்புவது என்பது, அவர்களைப் போராட்டக் களத்திலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியாகும். இது, கண்டிக்கத்தக்கது. ஓஎன்ஜிசி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக நினைத்தால், அவர்களுக்கு மற்ற மாநிலங்களில் செயல்படும் ஓஎன்ஜிசி நிறுவனங்களில் பணி வழங்கலாம் என்றார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியது: இடது சாரிகள் எப்போதும் கொள்கைப் பூர்வமாகவே செயல்படுபவர்கள் என்ற பார்வை மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால், சந்தர்ப்பத்துக்கேற்ப தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொண்டு, பேரழிவுத் திட்டங்களை ஆதரிப்பது என்பது, விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகளை ஏமாற்றுவதற்குச் சமம்.

2016-க்கு முன்னர் அளிக்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் ஒரு சில கிணறுகள் தற்போதும் செயல்பாட்டில் உள்ளன என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால், செயல்பாட்டில் இல்லாத கிணறுகளிலிருந்து, ஏற்கெனவே பெற்ற அனுமதியை வைத்து, தற்போது சட்ட விரோதமாக ஹைட் ரோகார்பன் எடுக்கவுள்ளனர். எனவே, தொழிலாளர்கள் என்ற பெயரில் ஹைட்ரோகார்பன் எடுப்பதை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரிப்பது நியாயமில்லை என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE