கள்ளக்குறிச்சி | உயிரிழந்த மாணவி பாலியல் துன்புறுத்தலோ, கொலையோ செய்யப்படவில்லை - உயர் நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: மருத்துவ அறிக்கையின்படி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலோ, கொலையோ செய்யப்படவில்லை. அவர் தற்கொலைதான் செய்துள்ளார் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் நிபந்தனை ஜாமீன் வழங்கி ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஜாமீன் நிபந்தனை தொடர்பாக நீதிபதி ஜி.கே.இளந்திரையன் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

நன்றாக படிக்க வேண்டும் என மாணவிக்கு அறிவுரை கூறியதற்காக ஆசிரியைகள் உள்ளிட்ட 5 பேரும் தற்போது சிறைவாசம் அனுபவிப்பது துரதிர்ஷ்டவசமானது. படிப்பில் சுமாராக உள்ள மாணவர்களை நன்றாக படிக்க வேண்டும் என அறிவுறுத்துவது ஆசிரியப் பணியின் ஒரு அங்கம். மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக மனுதாரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு பொருத்தமற்றது. மாணவியின் தற்கொலை குறிப்பிலும் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதேநேரம், படிப்பில் சிக்கல்களை சந்தித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கு நீதிமன்றம் தனது வருத்தத்தை பதிவு செய்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது.

மருத்துவ அறிக்கையின்படி, மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தலோ அல்லது கொலையோ செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை. அவர் தற்கொலைதான் செய்துள்ளார். மாணவியின் மரணத்தில் பல்வேறு முரண்பாடுகளை கூறினாலும், அந்த குற்றச்சாட்டுகள் பாலியல் குற்றச்சாட்டுக்கோ அல்லது கொலைக்கோ பொருந்தவில்லை. மாணவி தனது கடிதத்தில், வேதியியல் சமன்பாடுகள் தனக்கு சரியாக தெரியவில்லை என்ற விவரத்தை வேதியியல் ஆசிரியை, கணித ஆசிரியையிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார். பிளஸ் 2 தேர்வு எதிர்காலத்துக்கு முக்கியமானது என்பதால் பல பெற்றோர் தங்களது குழந்தைகளை குடும்ப சூழல் குறித்து கவலை கொள்ளாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக விடுதியில் தங்கவைத்து படிக்க வைக்கின்றனர். நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என குழந்தைகளை கட்டாயப்படுத்துகின்றனர். வேதியியல் பாடம் தனக்கு கடினமாக இருப்பதால் வீட்டிலிருந்து படிக்கிறேன் என அந்த மாணவி தனது பெற்றோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ரத்தம் அல்ல... பெயின்ட்

மாணவியின் உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள் மற்றும் ரத்தக் கசிவுகள் மாடியில் இருந்து விழுந்ததால் ஏற்பட்டு இருக்கலாம். மர்ம உறுப்பிலும் காயங்கள் இல்லை என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மாடியில் ரத்த மாதிரிகள் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அதை ஆய்வு செய்த தடய அறிவியல் துறை நிபுணர்கள், அது ரத்தம் அல்ல. சிவப்பு நிற பெயின்ட் என கூறியுள்ளனர்.கல்வி கற்றுத்தரும் ஆசிரியர்கள், மாணவர்களாலும் பெற்றோராலும் மிரட்டப்படுவது வருந்தத்தக்கது. எனவே, போக்ஸோ சட்டப்பிரிவு 305 மனுதாரர்களுக்கு பொருந்தாது. ஆகவே, பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், ஆசிரியைகள் என 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் அளிக்கப்படுகிறது.

ஆசிரியைகள் தவிர்த்து மற்ற 3 பேரும் மதுரையில் தங்கியிருந்து 4 வாரங்களுக்கு தல்லாகுளம் காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை என இரு வேளைகளில் கையெழுத்திட வேண்டும். அதன்பிறகு 4 வாரங்களுக்கு சிபிசிஐடி போலீஸார் முன்பாக ஆஜராகி கையெழுத்திட வேண்டும். விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும். ஆசிரியைகள் இருவரும் சேலத்தில் தங்கியிருந்து செவ்வாய் பேட்டை காவல் நிலையத்தில் 4 வாரங்களுக்கு இருவேளைகளில் கையெழுத்திட வேண்டும். அதன்
பிறகு 4 வாரங்கள் சிபிசிஐடி போலீஸார் முன்பாக ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்