சென்னையில் தனியார் பங்களிப்புடன் கழிப்பறை மேம்பாடு: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: சென்னையில் கழிப்பறைகள் மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்கள் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்தில் மெரினா கடற்கரையில் உள்ள கழிப்பறைகள், மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையின் அனைத்து பகுதிகளையும் சர்வதேச தரத்தில் உயர்த்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடந்தது. அதில் மாநகராட்சி உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் " சென்னையில் கழிப்பறைகள் மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்கள் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்தில் மெரினா கடற்கரையில் உள்ள கழிப்பறைகள், மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த கழிப்பறைகளுக்கான ஒப்பந்தம் பெறும் தனியார் நிறுவனங்கள், கழிப்பறை கட்டிட சுவர்களில் விளம்பரம் செய்து கொள்ள அனுமதிக்கப்படும். மேலும், கழிப்பறையை பராமரிப்பதற்கான செலவை மாநகராட்சி செலவிடுவதால், பொதுமக்களுக்கு சர்வதேச தரத்தில் நவீன கழிப்பறை வசதியை இலவசமாக ஏற்படுத்தித் தர முடியும்.தற்போது, 260க்கும் மேற்பட்ட கழிப்பறைகள், 36 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. இவை, நவீன ‘மாடர்ன் ’ கழிப்பறையாக அமைக்கப்படும்.

வடசென்னை பகுதிகளில் அதிகளவில் பூங்கா இல்லாத நிலை உள்ளது. அங்கு, பொது இடங்களைக் கண்டறிந்தும், பொதுமக்களிடம் கருத்துகள் கேட்டும் எங்கெல்லாம் பூங்கா அமைக்க வேண்டும் எனக் கேட்டறிந்து, பூங்கா அமைக்கப்படும்.

தற்போது 5 கோடி ரூபாய் செலவில் மிண்ட் பூங்கா, 2 கோடி ரூபாய் செலவில் மாடி பூங்கா வடசென்னை பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் ராயப்பேட்டை, புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை பகுதிகளில் நாய்கள் கருத்தடை மையம் உள்ளது. அவற்றை மேலும் மேம்படுத்த வேண்டிய கட்டமைப்பு வசதிகள் குறித்து, நாய்கள் ஆர்வலர்களிடம் ஆலோசனை பெற்று பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மூன்று மையங்கள் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

வடசென்னையில் வால்டாக்ஸ் சாலை, வியசார்பாடி சுரங்கப்பாதை பகுதிகளில் பூங்கா அமைத்தல், பூச்செடிகள் வைத்து அழகுபடுத்துதல், சாலையில் குப்பைகள் சேராமல் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. தற்போது கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு, பிளாஸ்டிக் மாசில்லாத பகுதியாக மாற்றப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், அக்கரை ஆகிய கடற்கரைகளை மேலும் அழகுப்படுத்துதல், பொதுமக்களுக்கான வசதிகள் மேம்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டு வரும் சூழலில், குளங்கள், விளையாட்டு மைதானம், பூங்கா, பொது இடங்கள் என தலா 5 இடங்களை, பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து, அவற்றில் மேம்படுத்த வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்து மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், வாரந்தோறும் சாலைகளில், தமிழகம் மற்றும் சென்னையின் கலச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. மாம்பலம் கால்வாய் போல், சென்னையின் பல கிளை கல்வாய்கள் துார்வாரி சீரமைக்கப்பட உள்ளது.

மேலும், மாநகராட்சியிடமிருந்து மக்களுக்கு தேவையான ஆன்லைன் சேவைகள், மருத்துவமனைகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட 17 திட்டங்கள் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளது" என்று கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE