கனல் கண்ணன் ஜாமீன் கோரிய வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ‘பெரியார் சிலையை உடைக்க வேண்டும்’ என்று பேசியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் ஜாமீன் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசாரப் பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், திரைப்பட சண்டைப் பயிற்சி நிபுணர் கனல் கண்ணன், ‘ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும்’ என்பதாக பேசியிருந்தார்.

இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலர் குமரன், சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணனை ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கனல் கண்ணன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்டம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE