ஒரு மாதத்தில் குடும்ப அட்டை வழங்குக: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

விண்ணப்பித்த அனைவருக்கும் அதிகபட்சமாக ஒரு மாதத்தில் குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் தலைகீழாக நின்றாலும் வாங்க முடியாத பொருள் என்னவென்றால், குடும்ப அட்டைதான். குடும்ப அட்டை வழங்குவதில் தமிழக அரசு கடைபிடிக்கும் கடுமையான அணுகுமுறை காரணமாக லட்சக்கணக்கான குடும்பங்களால் பொது வினியோகத் திட்டத்தின் பயனை அடைய முடிவதில்லை.

பொது வினியோகத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ்வது தமிழகம்தான் என கடந்த காலங்களில் உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த திட்டத்தின் அடிப்படை ஆதாரமான குடும்ப அட்டைகளை வழங்குவதில் தேவையற்ற கெடுபிடியும், அலட்சியமும் காட்டப்படுகின்றன.

குடும்ப அட்டைகளை வழங்குவதற்காக தமிழக அரசு பல்வேறு தகுதிகளை நிர்ணயித்திருக்கிறது. குடும்ப அட்டை கோரி விண்ணப்பம் செய்பவர்கள் தமிழ்நாட்டில் வாழும் இந்தியக் குடிமக்களாக இருக்க வேண்டும்; தனியாக சமையல் செய்யும் வசதி வைத்திருக்க வேண்டும்; விண்ணப்பதாரருக்கு நாட்டின் எந்த பகுதியிலும் தமது பெயரிலோ அல்லது குடும்பத்தினர் பெயரிலோ குடும்ப அட்டை இருக்கக்கூடாது என்பது தான் தமிழக அரசு நிர்ணயித்த தகுதிகளாகும். இத்தகுதி உள்ளவர்களுக்கு 60 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

ஆனால், நடைமுறையில் குடும்ப அட்டைகளைப் பெறுவது குதிரைக் கொம்பை விட அரிதாக உள்ளது. குடும்ப அட்டை கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களை ஏதேனும் குறை கூறி தள்ளுபடி செய்வது அல்லது கிடப்பில் போடுவது என்ற உத்தியையே வழங்கல் துறை அதிகாரிகள் கடைபிடித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு புதிதாக வழங்கப்படும் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை திட்டமிட்டு குறைக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. அரசு பதவியேற்ற போது தமிழகத்தில் மொத்தம் 32,760 நியாயவிலைக் கடைகள் இயங்கி வந்தன. அவற்றின் மூலம் ஒரு கோடியே 97 லட்சத்து 36,525 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன.

ஆனால், அடுத்த இரு ஆண்டுகளில், அதாவது கடந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி நியாயவிலைக் கடைகளின் எண்ணிக்கை 31,388 ஆகவும், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 95 லட்சத்து 90,350 ஆகவும் குறைக்கப்பட்டுவிட்டதாக அரசு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்குத் தேவையான நியாயவிலைக்கடைகளை அதிக எண்ணிக்கையில் திறப்பதற்கு பதிலாக இருக்கும் கடைகளை மூடுவதும், பொது மக்கள் எதிர்க்கும் மதுக்கடைகளை மூடுவதற்குப் பதிலாக ஒவ்வொரு தெருவிலும் அதிக எண்ணிக்கையில் திறப்பதும் மிகுந்த கவலையளிக்கும் விஷயமாகும்.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், 28.02.2013 அன்று நிலவரப்படி 6,23,512 குடும்ப அட்டைகள் மட்டுமே புதிதாக வழங்கப்பட்டிருக்கின்றன. இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் குடும்ப அட்டைகள் கோரி அளிக்கப்பட்ட சுமார் 50 ஆயிரம் விண்ணப்பங்கள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்கள் விளக்கம் கேட்டு அணுகும்போது, ஏதேதோ விளக்கம் கூறி அவர்களை வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் விரட்டியடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. குடும்ப அட்டை வழங்குவதில் அரசும், அதிகார வர்க்கமும் இவ்வாறு நடப்பது கண்டிக்கத் தக்கது.

குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்வோர் அதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து வழங்குவதால், அவற்றை ஆய்வு செய்யும் பணிகளையும், கள ஆய்வையும் ஒரு வாரத்தில் முடித்து அடுத்த வாரத்தில் குடும்ப அட்டைகளை வழங்க முடியும். ஆனால், விண்ணப்பித்து மூன்று ஆண்டுகளாகியும் குடும்ப அட்டைகளைத் தராமல் தாமதம் செய்வது சரியல்ல. பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களைப் பெறுவதற்கு மட்டுமின்றி, அரசின் மற்ற உதவிகளைப் பெறவும், பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களுக்கு விண்ணப்பிக்கவும், சமையல் எரிவாயு இணைப்பு போன்ற சேவைகளை பெறவும் குடும்ப அட்டை மிகவும் அவசியமாகும். குடும்ப அட்டை இல்லாததால் லட்சக்கணக்கான குடும்பங்கள் எந்தவித சேவைகளையும் பெற முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் அதிகபட்சமாக ஒரு மாதத்தில் குடும்ப அட்டை வழங்க வேண்டும். ஏற்கெனவே பெறப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள விண்ணப்பங்களை உடனடியாக ஆய்வு செய்து, சிறப்பு முகாம்களை நடத்தி குடும்ப அட்டைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்