சென்னை: இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் 7-ம் இடம்பிடித்துள்ளது. இருப்பினும் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ளது.
இந்தியாவில் 12 வயது முதல் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சுகாதாரம், முன்களப் பணியாளர்கள் மற்றும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதைக் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி அரசு மையங்களில் இலவசமாக போடப்படுகிறது.
அதேபோல், 18 வயது முதல் 59 வயது வரையுள்ளவர்களுக்கான பூஸ்டர் தவணை தடுப்பூசி தனியாரில் கட்டணத்தில் செலுத்தப்பட்டு வந்தது. அதனால், பூஸ்டர் தவணை செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதைத்தொடர்ந்து, 75-வது சுதந்திர தினத்தையொட்டி 75 நாட்களுக்கு, 18 முதல் 59 வயது வரையுள்ளவர்களுக்கு இந்தியா முழுவதும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசி வழங்கும் பணி கடந்த ஜூலை 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் 211.39 கோடி டோஸ்
இந்நிலையில், இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 27-ம் தேதி காலை 7 மணி வரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகள் குறித்த புள்ளி விவரத்தை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 92 கோடியே 7 லட்சத்து 56,966 பேருக்கு முதல் தவணையும், 85 கோடியே 93 லட்சத்து 19,998 பேருக்கு 2 தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
15 முதல் 18 வயதுள்ள சிறார்களில் 6 கோடியே 16 லட்சத்து 37,810 பேருக்கு முதல் தவணையும், 5 கோடியே 22 லட்சத்து 24,659 பேருக்கு 2 தவணையும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 12 முதல் 14 வயதுள்ள சிறார்களில் 4 கோடியே 2 லட்சத்து11,871 பேருக்கு முதல் தவணையும், 2கோடியே 99 லட்சத்து 97,546 பேருக்கு2 தவணையும் செலுத்தப்பட்டுள்ளது.
பூஸ்டர் தவணை தடுப்பூசியைப் பொறுத்தவரை சுகாதாரம், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதைக் கடந்தவர்களில் 5 கோடியே 96 லட்சத்து 1,554 பேருக்கு போடப்பட்டுள்ளது. 18 முதல் 59 வயதுள்ளவர்களில் 9 கோடியே 2 லட்சத்து 31,040 பேருக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 211 கோடியே 39 லட்சத்து 81,444 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7-வது இடத்தில் தமிழகம்
தடுப்பூசி செலுத்துவதில் மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்த புள்ளிவிவரத்தில், உத்தரப்பிரதேசம் 36 கோடியே 64 லட்சத்து 64,769 டோஸ் தடுப்பூசி செலுத்தி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மகாராஷ்டிரா 17 கோடியே 56 லட்சத்து 64,340 டோஸ் தடுப்பூசி செலுத்தி 2-வது இடத்திலும், மேற்கு வங்கம் 15 கோடியே 33 லட்சத்து 4,193 டோஸ் தடுப்பூசி செலுத்தி 3-வது இடத்திலும் உள்ளது. தமிழகம் 12 கோடியே 23 லட்சத்து 25,024 டோஸ் தடுப்பூசி செலுத்தி 7-வது இடம் பிடித்துள்ளது.
அதேபோல், சுகாதாரம், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதை கடந்தவர்களில் 62 லட்சத்து 74,086 பேருக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தி உத்தரப்பிரதேசம் முதலிடத்திலும், ஆந்திரா 60 லட்சத்து 57,919 பேருக்கு தடுப்பூசி செலுத்தி 2-ம் இடத்திலும், குஜராத் 53 லட்சத்து 85,839 பேருக்கு தடுப்பூசி செலுத்தி 3-ம் இடத்திலும் உள்ளது. தமிழகம் 23 லட்சத்து 86,436 பேருக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தி 11-ம் இடத்தில் உள்ளது.
பூஸ்டர் தடுப்பூசியில் 12-ம் இடம்
மேலும், 18 முதல் 50 வயதுள்ளவர்களில் 1 கோடியே 63 லட்சத்து 11,994பேருக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தி உத்தரப்பிரதேசம் முதலிடத்திலும், 92 லட்சத்து 23,120 பேருக்கு தடுப்பூசிசெலுத்தி குஜராத் 2-ம் இடத்திலும், 83 லட்சத்து 3,852 பேருக்கு தடுப்பூசி செலுத்தி மேற்கு வங்கம் 3-ம் இடத்திலும் உள்ளது. தமிழகம் 33 லட்சத்து 11,323 பேருக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தி 12-ம் இடத்தைப் பிடித்துள்ளது.
நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்துவதில் 7-வது இடத்தைப் பிடித்துள்ள தமிழகம், பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியிருப்பது பற்றி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கூடுதல் மெகா முகாம்கள்
கரோனா தடுப்பூசி செலுத்துவதை தமிழக அரசு ஒரு இயக்கமாகவே செயல்படுத்தி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட 34 முகாம்கள் மூலம் மட்டும் 5 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் முதல்,இரண்டாவது மற்றும் பூஸ்டர் தவணையாக செலுத்தப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதத்தில் கூடுதலாக மெகா முகாம்களை அமைத்து தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 96.20 சதவீதத்தினருக்கு முதல் தவணையும், 90.05 சதவீதத்தினருக்கு 2-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 17 வயதுடைய சிறார்களில் 91.14 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 77 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 12 முதல் 14 வயதுடைய சிறார்களில்92,85 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 69.10 சதவீதம் பேருக்கு இரண்டாம்தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தவணை தடுப்பூசி 14.96 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
மக்களிடம் ஆர்வம் குறைந்தது
கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் குறைந்துள்ளது. ஆனாலும், தொடர்ந்து தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள 18 முதல் 59 வயதுள்ளவர்களுக்கு 75 நாட்கள் இலவச தடுப்பூசி திட்டம் செப்.30-ம் தேதி வரை உள்ளது. அதற்குள் 18 முதல் 59 வயதுள்ளவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செப்.30-ம் தேதிக்குப்பின் பூஸ்டர் தவணை தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்திதான் போட்டுக் கொள்ள முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago