விநாயகர் சதுர்த்தியை அமைதியாக நடத்துவது குறித்து இந்து அமைப்பினருடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை: மெரினாவில் சிலைகளை கரைக்க தடை

By செய்திப்பிரிவு

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விநாயகர் சிலை ஊர்வலத்தை அமைதியாக நடத்துவது குறித்து இந்து அமைப்பினருடன் போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 31-ம் தேதி (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களிலும், சென்னையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களிலும் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கு இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் ஊர்வலம், அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்பதில் போலீஸார் தனிக் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து அமைப்பினருடன் சென்னை கூடுதல் காவல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, அன்பு, இணை ஆணையர்கள் நரேந்திரன் நாயர், ரம்யா பாரதி, ராஜேஸ்வரி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

முதலில் இந்து முன்னணி அமைப்பினருடன் தனியாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் இந்து முன்னணி சென்னை மாநகர செயலாளர் ஏ.டி.இளங்கோவன், நிர்வாகிகள் மணலி மனோகரன், கார்த்திகேயன் உட்பட சுமார் 30 பேர் பங்கேற்றனர். அவர்கள், நீதிமன்ற கருத்தை சுட்டிக்காட்டி இந்த ஆண்டு திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் வழியாக விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் அதை போலீஸ் அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து தமிழக இந்து பரிவார், இந்து மக்கள் கட்சி, பாரத் இந்து முன்னணி, சிவசேனா உள்ளிட்ட மேலும் பல இந்து அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது எந்தெந்த இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டதோ, அங்குதான் சிலைகளை வைக்க வேண்டும். புதிய இடங்களில் வைக்கக் கூடாது.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள உத்தரவின்படி குடியிருப்பின் அருகே சிலை வைக்கப்பட்டால் அந்த வீட்டின் உரிமையாளரிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சாலையில் வைக்கப்பட்டால் மாநகராட்சியிடமும், நெடுஞ்சாலைக்கு உட்பட்ட பகுதியில் இருந்தால் நெடுஞ்சாலைத் துறையிடமும் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

கூட்டத்தில் கலந்துகொண்ட இந்து அமைப்பினர்.

தீயணைப்புத் துறை அனுமதியும் அவசியம். மின் இணைப்பும் பிரத்யேகமாக பெற வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் விளக்கினர். இந்த பண்டிகை, ஊர்வலம் அமைதியாக நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் போலீஸார் கேட்டுக் கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு வெளியே வந்த இந்து அமைப்பு நிர்வாகிகள் கூறும்போது, “வழக்கமாக வைக்கப்படும் இடங்களில்தான் சிலைகளை நிறுவ வேண்டும். புதிய இடங்களில் சிலைகள் வைக்கக் கூடாது என்று போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு வைக்கப்பட்ட இடத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தால், எங்கு சிலை வைப்பது? எனவே இந்த கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம்.

அதேபோல் மின் இணைப்பு பெறுவதற்கு ரூ.7 ஆயிரத்து 500 முதல் ரூ.25 ஆயிரம் வரை ‘டெபாசிட்’ தொகை செலுத்தி மீட்டர் பெறுகிறோம். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முடிந்த பின்னர் அந்த மீட்டரை கொடுத்து ‘டெபாசிட்’ தொகையை பெறுவதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது. எனவே, இந்த பணத்தை திரும்ப பெற்று தருவதற்கு போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றனர்.

4-ம் தேதி ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தி பண்டிகை அன்று நிறுவப்படும் சிலைகள் பூஜிக்கப்பட்டு வரும் 4-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை, பாலவாக்கம் பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் கரைக்க போலீஸார் அனுமதி அளித்துள்ளனர். மெரினாவில் கரைக்க வழக்கம்போல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

23 hours ago

தமிழகம்

1 day ago

தமிழகம்

1 day ago

மேலும்