தென்னை மரங்கள் சூழ நீர் நிரம்பி ரம்மியமாக இருக்கிறது பூங்குளம். சோழர்கள் காலத்து குளம் என்கிறார்கள். குளத்தைச் சுற்றி அழகிய நடைபாதை. நீர்ப் பரப்பில் கெண்டை மீன்கள் துள்ளுகின்றன. பூக்கள் சொரியும் பூங்காவில் இனிதே நடக்கிறது மகரந்தச் சேர்க்கை. மக்கள் சுறுசுறுப்பாக நடைபயிற்சி செய்கிறார்கள். அவர்களுடன் நடக்கிறேன். ஒரு சுற்றுக்கே கால் மணி நேரம் பிடிக்கிறது. பெரிய குளம்தான். ஆங்காங்கே படித்துறைகள். குளத்தின் நடுவே விளக்குத் தூண். படித்துறையில் குளித்துக்கொண் டிருக்கிறார் ஊர்க்காரர் ஒருவர். “அசலூரா சார், வாங்க ஒரு குளியல் போடலாம்...” அன்போடு அழைக்கிறார்.
படித்துறையில் அமர்ந்து பேசத் தொடங்குகிறேன். “நீங்க உட்காந்திருக்கீங்களே. நாலு வருஷம் முன்னாடி அங்கிட்டு மூக்கைப் பிடிச்சிட்டுத்தான் நிக்கணும். குளம் மண் மூடி சீமைக் கருவேலக் காடா இருந்துச்சு. ஊர்க்காரங்களுக்கு பொதுக்கழிப்பிடம் இதுதான். பொம்பளைங்க இந்தப் பக்கம் நடக்க முடியாது. புதர்க் காட்டுக்குள்ள உட்கார்ந்து சரக்கு அடிக்கிறது, சீட்டு ஆடுறதுன்னு அட்டூழியம் பண்ணுவாங்க. பஞ்சாயத்துத் தலைவர் சிங்கதுரை அய்யா இதுக்கு ஒரு வழி பண்ணணும்னு முடிவு செஞ்சாரு. முதல்ல இங்கே மலம் கழிக்கக் கூடாதுன்னு தடை போட்டாரு. விடியற்காலை 5 மணியில் இருந்து நூறுநாள் வேலைத் திட்டத்து ஆட்கள் கரையோரம் அமர்ந்து இங்கிட்டு வர்றவங்களைத் திருப்பி அனுப்பிடுவாங்க. அது இன்னைக்கு வரைக்கும் தொடருதுன்னு வையுங்க. கிராமத்துல அத்தனை வீடுகளுக்கும் அரசாங்க திட்டத்துல கழிப்பிடம் கட்டிக்கொடுத்தார்.
அடுத்ததா, இந்தக் குளத்தை கையில எடுத்தாங்க. நூறுநாள் வேலைத் திட்டத்துல சுமார் 400 பேர் தினசரி வேலைப் பார்த்தாங்க. மொத்தம் 5 ஏக்கருங்க இந்தக் குளம். ஆறு மாசம் வேலை நடந்துச்சு. முள்ளுக் காட்டை பிடுங்கி எறிஞ்சாங்க. பொக்லைன் வெச்சி தூர் வாரினாங்க. சிதிலமடைஞ்சு கிடந்த படித்துறைகளை சீரமைச்சு, கூடுதலா படித்துறைகள் கட்டினாங்க. குளத்தை சுத்தியும் உயரமா வேலியமைச்சு, வாயில் கதவு போட்டாங்க. குளத்துக்கு நடுவுலயும் குளத்தை சுத்தியும் லைட் கம்பம் நட்டாங்க. குளத்தை சுத்தி தென்னங்கன்றுகள் நட்டாங்க. பூங்காக்கள், நடைபாதை அமைச்சாங்க. சுமார் 10 லட்சம் ரூபாய் செலவானது. அதுல பாதியை சிங்கதுரை அய்யா தனிப்பட்ட முறையில ஏத்துக்கிட்டார். எல்லாம் தயார். ஆனா, குளத்தை தூர் வாரியும் பொட்டுத் தண்ணி இல்லை. சரி, மழை பெய்யட்டும்னு காத்திருந்தோம். நாலைஞ்சு தடவை மழை பெஞ்சும் குளத்துல தண்ணீர் சேகரமாகலை. குளத்துக்கு வருகிற நீர் ஓடைப் பாதைகள் எல்லாம் பல ஆண்டு காலமாக அழிக்கப்பட்டிருக்கு. அதை எல்லாம் இன்னைக்கு அப்புறப்படுத்த முடியாது.
மொத்த உழைப்பும் போச்சே, பணமும் வீணாச்சே ஊரே சோகத்துல மூழ்கிச்சு. கிராம சபைக் கூட்டத்தைக் கூட்டுனோம். ஊர்க் கூடி ஒரு முடிவு எடுத்தோம். குளத்துக்கு சுத்துவட்டாரத்துல இருக்கிற விவசாயிகள் எல்லாம் தங்களோட ஆழ்துளை கிணத்துல இருந்து ஆளுக்கு ஒருநாள் தண்ணீரை குளத்துக்குள்ள விடணும்னு கேட்டுக்கிட்டோம். சிலர், ‘எங்க நிலத்தடி நீர் வத்திடாதான்னு’ கேட்டாங்க. அதுக்கு அய்யா, ‘குளத்துல நீர் நிறைஞ்சிட்டா அந்தத் தண்ணியால் உங்க நிலத்தடி நீர் மேலும் பெருகுமே தவிர வத்தாது’ன்னு சொன்னார். எல்லாரும் ஏத்துக்கிட்டாங்க. தொடர்ந்து ஒரு மாசத்துக்கு காலையில இருந்து இரவு வரைக்கும் ஒவ்வொருத்தர் தோட்டத்துல இருந்தும் மோட்டார் மூலம் குளத்துக்குள்ள தண்ணியை பாய்ச்சினாங்க. பக்கத்துல இருக்கிற மத்திய தென்னை ஆராய்ச்சி நிலையத்துல பேசி அவங்களும் கணிசமான அளவு தண்ணீரை குளத்துல விட்டாங்க. இப்படி ஒரு மாசம் தண்ணீர் பாய்ச்சுனாங்க. குளம் நிரம்பிடுச்சுங்க. மூணு வருஷமாச்சு, இன்னைக்கு வரைக்கும் குளம் வத்தலைங்க. தண்ணீர் தளும்பி நிக்குது. சுத்துவட்டாரத்துல நிலத்தடி நீரும் பெருகியிருக்கு” குளித்து முடித்து புத்துணர்வுடன் படி ஏறுகிறார் அவர்.
பட்டுக்கோட்டையில் மதுக்கடைகள் இருக்கின்றன. ஆனால், இங்கே மருந்துக்கும் ஒரு மதுக்கடை இல்லை. விசாரித்தோம். ஊருக்குள் மது அருந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்றார்கள். “சிங்கதுரை அய்யா இந்த அஞ்சு வருஷமாதான் பஞ்சாயத்துத் தலைவர் பொறுப்பில் இருக்காரு. ஆனா, அதுக்கு முன்னாடியே அவர் இந்த கிராமத்துல மது குடிக்க தடை போட்டிருந்தார். ஒருவகையில் அவர் போட்டிருந்த மதுவிலக்குதான் அவரை இந்த ஊருக்கு பஞ்சாயத்துத் தலைவர் ஆக்குச்சு. ஏழெட்டு வருஷம் முன்னாடியே அவரு நிறைய சமூகப் பணிகளை செஞ்சாரு. மது குடிக்காதீங்கன்னு தடை உத்தரவு போட்டாரு. மது குடிக்கிறவங்களை ஆகாச வீரனார் கோயிலுக்கு அழைச்சிட்டுப் போய், ‘‘இனிமே மதுவைத் தொட மாட்டேன்’’னு சத்தியம் செய்ய வெச்சாரு. இதனால, மது குடிக்கிறவங்க இவரைக் கண்டாலே தலைதெறிக்க ஓடுனாங்க. அப்போதான் மதுவை கைவிட்டு ஆறு மாசம் ஒழுக்கமா இருக்கிறவங்க பேருல 5 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும்னு அறிவிச்சாரு.
இதை எல்லாம் பார்த்துட்டு உள்ளூர்ல கட்சிக்காரங்க அய்யாக்கிட்ட சண்டைக்கு வந்துட்டாங்க. ‘‘இதெல்லாம் செய்யதானே நாங்க இருக்கோம். நீங்க என்ன பஞ்சாயத்து தலைவரா?’’னு சண்டை போட்டாங்க. பஞ்சாயத்துத் தலைவரா இருந்தாதான் இதெல்லாம் செய்யணுமான்னு 2011-ல் தேர்தல்ல நின்னு தலைவராகிட்டார். இதோ இப்போ வரைக்கும் இந்த ஊருக்குள்ள சுமார் 30 பேர் வரைக்கும் குடியை நிறுத்தி, அய்யாவிடம் பரிசு வாங்கியிருக்காங்க. பணத்தை வாங்கிய சிலர் அந்தப் பணத்தில் திரும்பவும் குடிக்க ஆரம்பிச்சாங்க. தீவிர மது பழக்கம் இருக்கிற குடிநோயாளிகளை மது மீட்பு சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைப்பார். அந்த செலவும் இலவசம். அந்த வகையில் இதுவரையில் 22 பேர் சுத்தமா குடியை நிறுத்தியிருக்காங்க” என்றவர்கள், வீரபாண்டி என்பவரின் வீட்டுக்கு அழைத்துப் போனார்கள்.
“ஆறு வருஷத்துக்கு முன்னாடி ஊருக்குள்ள பெரிய சண்டியரு இவர். அதுவும் குடிச்சிட்டாருன்னா கையில புடிக்க முடியாது. தினமும் வீட்டுல அடிதடிதான். ஒருநாள் நிம்மதியா இருக்க முடியாது. நெலத்தை எல்லாம் வித்துக் குடிச்சிட்டாரு. சமாளிக்க முடியாம சிங்கப்பூருக்கு அனுப்புனோம். அங்கேயும் அடிதடி. ஒருவழியா சிங்கதுரை அய்யா மூலம் ஆகாச வீரனாருக்கு கட்டுப்பட்டு, இதோ ஆறு வருஷமா குடியை நிறுத்திட்டாரு” என்று பூரிக்கிறார் வீரபாண்டியின் மனைவி. பூரண மதுவிலக்கு கொடுத்த பூரிப்பு அது. தமிழகம் முழுவதும் எதிர்பார்ப்பது அதைத்தானே!
இரவு 10.45 மணி. தஞ்சையில் இருந்து சென்னை நோக்கி நகரத் தொடங்குகிறது தொடர்வண்டி. நமது இந்தத் தொடர் கட்டுரையில் அதிகத்தூர் தொடங்கி மைக்கேல்பட்டினம் வரை எளிய பஞ்சாயத்து தலைவர்களுக்கு வாசகர்கள் கொடுத்த வரவேற்பு இதுவரை காணாதது. உலகம் முழுவதும் இருந்து ‘தி இந்து’-வின் வாசகர்கள் அந்த தலைவர்களிடம் பேசிவருகிறார்கள். இன்னும் குத்தப்பாக்கம், கோணமூலை, பூத்துறை, கீரப்பாளையம் உட்பட வரிசைக் கட்டி காத்திருக்கின்றன முன்னோடி கிராமங்கள். உள்ளாட்சியில் நாட்டுக்கே வழிகாட்டும் கேரளத்தின் கிராமங்கள் ஜனநாயக விருந்து படைக்க காத்திருக்கின்றன. சற்றே காத்திருப்போம்.
அதுவரை உள்ளாட்சியைப் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள் இன்னும் இருக்கின்றன. உலக நாடுகளில் உள்ளாட்சி தொடங்கி உலகமயமாக்கலில் உள்ளாட்சி வரை அறிந்துக்கொள்வோம். இந்தியாவில் உள்ளாட்சி உருவான உன்னத வரலாறு தொடங்கி சமகால அரசியலில் அது சந்திக்கும் அவலங்கள் வரை தெரிந்துக்கொள்வோம். நம்பிக்கையுடன் பயணிப்போம்.
- பயணம் தொடரும்...
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago