ஒரு சிறு புள்ளிவிபரம். சென்னையின் உள்ளாட்சி அமைப்புகள் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு தர வேண்டிய மின் கட்டண நிலுவைத் தொகை ரூ. 37.83 கோடி. காஞ்சிபுரம் 7.38 கோடி. செங்கல்பட்டு 6.16 கோடி. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் 3.76 கோடி. வருவாய் துறை 4.58 கோடி. கல்வித் துறை 7.92 கோடி. இப்படி ஒவ்வொரு துறையும் வைத்திருக்கின்றன. ஏன்? கோடிகளில் கொழிக்கும் தொழிலதிபர்கள், அமைச்சர்கள்கூட பாக்கி வைத்திருக்கிறார்கள். சரி, வாருங்கள் நாம் மேட்டுப்பாளையத்துக்கு மேலே இருக்கும் ஓடந்துறைக்குச் செல்வோம்.
கோவை மாவட்டம், கோத்தகிரி மலை யடிவாரத்தில் இருக்கிறது ஓடந்துறை கிராமப் பஞ்சாயத்து. ஊரை ஒட்டி சலசலக்கிறது பவானி. வாழைத் தோட்டங்களும் பாக்குத் தோப்புகளுமாக பசுமையாக இருக்கிறது பூமி. ஊருக்குள் பெரியதாக ஆள் நடமாட்டம் இல்லை. தோட்டங்களுக்குள் வேலைக்கு போயிருக்கிறார்கள். கணிசமாக மலைவாழ் மக்கள். பெரும்பாலும் நகரத்தின் வாடையே நுகராதவர்கள். ஆனால், கடந்த ஐந்தாண்டு களில் பைசா பாக்கியில்லாமல் இவர்கள் பஞ்சாயத்து செலுத்தியிருக்கும் மின் கட்டணம் சுமார் 1.20 கோடி ரூபாய். மின் கட்டணம் மட்டுமா செலுத்தியிருக்கிறார்கள்?
ஆண்டுக்கு 6.75 லட்சம் யூனிட் வீதம் கடந்த 10 ஆண்டுகளில் 67.50 லட்சம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்கிறார்கள். அதில் ஆண்டுக்கு 2.15 லட்சம் யூனிட் வீதம் கடந்த 10 ஆண்டுகளில் 21.5 கோடி யூனிட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியத்துக்கு விற்பனை செய்திருக்கிறார்கள். சுமார் ரூ. 65 லட்சம் வருவாய் பெற்றிருக்கிறார்கள். இன்னமும் பெறுகிறார்கள். நம்ப முடியாமல் புள்ளிவிபரங்களைப் புரட்டினோம். எதிரே வெள்ளந்தியாக நிற்கிறார் பஞ்சாயத்து தலைவி லிங்கம்மாள். அவரிடம் பரபரப்புடன் ‘உடனே அந்த மின் உற்பத்தி நிலையத்தைப் பார்க்க வேண்டும்’ என்றோம். ‘நம்ம ஊருல ஏதுங்க மின் உற்பத்தி நிலையம்...’ என்றார். தலை கிறுகிறுத்தது.
“அது பெரிய கதைங்க. வாங்க ஊரைச் சுத்திப் பார்த்திட்டே பேசலாமுங்க என்று தோளில் கைபோட்டு அழைத்துச் செல்கிறார் சண்முகம். 60 வயதை தாண்டிய இளைஞர். லிங்கம்மாளின் கணவர். “1996 தொடங்கி 2006 வரைக்கும் இந்தப் பஞ்சாயத்து பொதுப் பஞ்சாயத்துங்க. அந்த 10 வருஷம் நான் தானுங்க தலைவர். 2006-ல இதை பெண் களுக்கு ஒதுக்குனாங்க. இதுதான் சமயமுன்னு அம்மணியை நிக்கச் சொல்லிட்டு ஒதுங்கிட்டேனுங்க. இந்த 10 வருஷமா அம்மணி ஆட்சிதானுங்க.” என்றவர் தனது மின்சார கனவை விவரித்தார்.
“96-ம் வருஷம் நான் பொறுப்புக்கு வந்தப்ப வெறும் மலைக்காடுங்க இந்த ஊர். வாசனைக்குக்கூட தார் சாலையைப் பார்க்க முடியாது. மக்கள் தொகை ஆயிரத்துச் சொச்சம்தான். பஞ்சாயத்து வரி வருவாயும் பெருசா இல்லைங்க. ஆனா, மின் கட்டணம் மூவாயிரம் வந்துச்சுங்க. கட்ட முடியாம அல்லாடி னோம். ஊருக்குள்ள வந்து பியூஸை பிடுங் கிட்டுப் போயிடுவாங்க. ஊரே இருண்டுக் கிடக் கும். மோட்டார் ஓடாம குடித்தண்ணிக்கு அல்லாட ணும். உருட்டிப் புரட்டிக் கட்டுவோமுங்க. ஒத்தை விளக்குக்கு மின்சாரம் கொடுக்க முடியலையேன்னு கவலை அரிச்சதுங்க.
நம்ம பக்கம் சோலார் தொழில்நுட்பம் வந்தப் புதுசுங்க அது. கல்லார்புதூர், வினோபாஜி நகர் ஆகிய ரெண்டு கிராமத்துல சோலார் தெருவிளக்கு அமைச்சோம். கணிசமா செலவு குறைஞ்சது. மூணு வருஷத்துல குடிநீர் மோட்டாருக்கு மட்டும் 15,000 ரூபா மின் கட்டணம் வந்துச்சு. திணறிட்டோம். உடனே அதைக் குறைக்க மரக்கட்டையை எரிச்சி (Biomass Gasifier) மின்சாரம் தயாரிச்சோம். அன்னைக்கு யூனிட் 3 ரூபாய் கட்டணம். நாங்களே மின்சாரம் தயாரிச்சப்ப யூனிட் 1.75 ரூபாய்க்கு கிடைச்சதுங்க. சுமார் 50 % மின் கட்டணம் மிச்சம் பண்ணோம். முதல்ல அஞ்சு வருஷத்தை இப்படியே ஓட்டிட்டோம்.
மானியம் மறுத்த அரசுகள்!
அதுக்குள்ள நாலைஞ்சு மடங்கு மக்கள் தொகை பெருகிடுச்சு. வீடுகள் அதிகமாகிடுச்சு. குடிநீர் தொட்டிகள், குடிநீர் குழாய் இணைப்புகள், தெருவிளக்குகள் நிறைய கொண்டு வந்துட்டோம். மின்கட்டணமும் கிடுகிடுன்னு 2 லட்சமாக எகிறிடுச்சுங்க. வரி வருவாயைப் பெருக்கியிருந்தாலும் இந்த மின் கட்டணத்துக்கு ஏதாவது ஒரு வழி பண்ண னும்னு மனசுக்குள்ளே திட்டம் ஓடிக்கிட்டேயி ருந்ததுங்க. அப்படி தோணுனதுதானுங்க காத்தாலை மின் உற்பத்தித் திட்டம். அதைப் பத்தி விசாரிச்சப்ப நம்ம ஊருக்கு தேவையான மின்சாரத்தைவிட கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்யலாமுன்னு சொன்னாங்க.
2004-ல் கிராம சபையைக் கூட்டினோம். வருஷத்துக்கு 350 கிலோ வாட் திறன் கொண்ட காத்தாலையை நிறுவத் தீர்மானம் போட்டோம். அதன் மதிப்பீடு அன்னைக்கு ரூ. 1 கோடியே 55 லட்சம். வரி வருவாயை நிர்வாகத்தை சிறப்பா செஞ்சிருந்ததால் எங்க பஞ்சாயத்துல சேமிக்கப்பட்ட உபரி நிதி கையிருப்பு 40 லட்சம் ரூபாய் இருந்துச்சு. இன்னமும் 1.15 கோடி ரூபாய் வேணும்? யார் தருவாங்க? அரசு அதிகாரிகள்கிட்டே கேட்டோம். வழியே இல்லைன்னுட்டாங்க. மரபு சாரா எரிசக்தி திட்டத்தில் கோடிக்கணக்கான மானியம் கொடுக் குற மத்திய அரசும் மாநில அரசும் அன்னைக்கு எங்களை கண்டுக்கவே இல்லை. பேங்குக்கு போனா சூரிட்டி கேட்குறாங்க. எங்ககிட்ட என்ன இருக்கு சூரிட்டி? பொறம்போக்கு நிலம் கூட கிடையாது. எல்லாம் வனத்துறை நிலம். ஒரு வைராக்கியம் பிறந்துச்சு.
நம்பிக் கொடுத்த வங்கி!
ஊர்க்காரங்க கொஞ்சம் பேரை கூட்டிக்கிட்டு கோயமுத்தூரு ஆவாரம்பாளையத்துல இருக்குற சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தி யாவுக்கு போனேன். பேங்கு சேர்மனை பார்க்கச் சொன்னாங்க. ஒரு பெண்மணி அவங்க. அவங்களைப் பார்த்தோம். “படிக்காத கிராமத்து ஜனங்கம்மா நாங்க. ஆனா, நாணயமானவங்க. கிராமத்தை நல்லா நிர் வாகம் பண்ணியிருக்கோம். கடனை திருப்பி அடைச்சிடுவோம்மா”ன்னு சொன்னோம். எங்களை எல்லாம் நிதானமாக பார்த்தவங்க, ஒரு நிமிஷம் அமைதியா இருந்தாங்க. அப்புறம், “நீங்க கேட்குறது மிகப் பெரிய தொகை. சூயூரிட்டி இல்லாம கொடுக்க முடியாது. ஆனால், நான் உங்களை, உங்கள் கிராமத்து மக்களை நம்புறேன். வங்கி விதிகளை தளர்த்தி என் சக்திக்கு மீறி ரிஸ்க் எடுக்குறேன். வாக்குறுதியை காப்பாத்துங்க’னு சொல்லி ஒரே கையெழுத்துல ஒண்ணேகால் கோடி ரூபாயைக் கொடுத்தாங்க. எங்களுக்கு சிலிர்த்துப் போச்சுங்க.
கம்பீரமாகப் பறக்குது காற்றாலை!
இன்னொரு பிரச்சினை. எங்க ஊருல காத்தாலையைப் போடுற அளவுக்கு காத்து கிடையாதுங்க. உடுமலைப்பேட்டை மைவாடி பஞ்சாயத்துத் தலைவர்கிட்ட பேசினேன். அவரும் கிராம சபை தீர்மானம் போட்டு சம்மதம் கொடுத்தார்.
அங்கே வெற்றிகரமாக காத்தாடியை நிறுவிப்போட்டோமுங்க. உடனே மின்சாரம் உற்பத்தி தொடங்கினோம். வாரந்தோறும் மக்களை அழைச்சிட்டுப்போய் பொறியாளர்கள் உதவியோடு காத்தாலை யைப் சிறப்பா பராமரிச்சோம். நல்ல அறுவடைங்க. முதல் வருஷமே 6.75 லட்சம் யூனிட் மின்சாரம் கெடைச்சது. எங்க தேவை 4.5 லட்சம் யூனிட்தான். மிச்சம் 2.15 லட்சம் யூனிட்டை மின்வாரியத்துக்கு வித்தோம். அந்தம்மாவுக்கு கொடுத்த வாக்கு தவறாம மாசம் ஒன்றரை லட்சம் ரூபாய் லோன் கட்டினோம். இதோ இந்த பத்து வருஷத்துல 1.15 கோடி ரூபாய் அசல், 50 லட்சம் ரூபாய் வட்டி 1.65 கோடி ரூபாயை கட்டி முடிச்சிட்டோம். சொச்சம் ரூபாய் நிர்வாக நடைமுறை பாக்கி இருக்கு. அவ்வளவுதான்.
இதோ இப்ப காத்தாடி முழுமையாக எங்க கிராமப் பஞ்சாயத்தின் சொத்தா மாறிடுச்சுங்க. இனிமே கெடைக்குற வருவாய் அத்தனையும் எங்க கிராமத்துக்குதான். இப்பவே பல்வேறு திட்டங்கள் மூலம் எங்க கிராமத்தை முன்னேற்றி இருக்கேன்.
இப்ப காத்தாடியில இருந்து முழுசா வருமானம் கொட்டுதில்லைங்க, இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு வந்துப் பாருங்க, எங்க கிராமத்தை குட்டி சிங்கப்பூரா மாத்திக்காட்டுறேனுங்க”. உற்சாகம் பொங்கப் பேசுகிறார் சண்முகம். கோடிக்கணக்கில் மின் கட்டணம் நிலுவை வைத்திருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நிர்வகிக்கும் துறைகள் ஓடந்துறை கிராம மக்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
இப்போதும் உடுமலைப்பேட்டையில் கம்பீர மாக சுழன்றுக்கொண்டிருக்கிறது ஓடந்துறை மக்கள் காற்றாடி. கிராமப் பஞ்சாயத்து சார்பில் இந்தியாவில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரே காற்றாடி மின் ஆலையும் அதுதான். காற்றாடி மட்டுமா? ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசுகள் உட்பட மொத்தம் 43 நாடுகளின் பிரதிநிதிகளை தன்னை நோக்கி ஈர்த்த கிராமம் ஓடந்துறை!
(பயணம் தொடரும்...)
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago