‘‘எனக்கு துரோகம் செய்தால் நான் பொறுத்துக் கொள்ள வேண்டுமா?’’ - வைரல் ஆடியோவில் ஆறுக்குட்டி

By டி.ஜி.ரகுபதி

கோவை: துரோகம் செய்துவிட்டதாக திமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியிடம் அதிமுக உறுப்பினர் வாக்குவாதம் செய்த ஆடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்தவர் ஆறுக்குட்டி. 2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தார். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இந்நிலையில் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் சில காலம் அமைதியாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி கடந்த 24-ம் தேதி பொள்ளாச்சியில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியுடன் அதிமுக உறுப்பினர் ஒருவர் செல்போனில் பேசிய ஆடியோ இன்று (ஆக.26) மாலை வெளியானது.

மொத்தம் 2 நிமிடம் 30 விநாடிகள் அந்த ஆடியோவில் துடியலூர் நாகராஜ் என அறிமுகப்படுத்திக் கொண்டு பேசும் நபர், முதலில் திமுகவில் இணைந்ததற்கு ஆறுக்குட்டிக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். பின்னர், "உங்களுக்காக நாங்கள் பாடுபட்டுள்ளோம். நீங்கள் செய்தது தவறு. உங்களுக்கான உயிரைக் கொடுத்து நாங்கள் பாடுபட்டுள்ளோம். தொண்டர்களிடம் நீங்கள் குமுறியிருக்க வேண்டும். நீங்களே முடிவு எடுத்துச் சென்றுவிட்டீர்கள்" எனக்கூறி அந்த நபர் பேசுகிறார்.

அதற்கு முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியும் "எனக்கு துரோகம் செய்தால் நான் பொறுத்துக் கொள்ள வேண்டுமா. சசிகலாவுக்கு துரோகம் செய்த எடப்பாடியை போய் கேள்" என பதில் அளித்து பேசுகிறார். அப்படியே இருவருக்கும் லேசான வாக்குவாதம் ஏற்படுகிறது. பின்னர், நேரில் வந்து பேசுங்கள் என முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி கூறுவதோடு முடிகிறது. இந்த ஆடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஆறுக்குட்டி விளக்கம்:

இதுதொடர்பாக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் கேட்ட போது, ‘‘நான் 10 வருடங்களாக எமஎல்ஏவாக இருந்துள்ளேன். என்மீது எந்த சர்ச்சையும் இல்லை. நான் யாரையும் மரியாதைக்குறைவாக பேசவில்லை. தற்போது செல்போனில் பேசிய நபரும் எனக்கு தெரிந்தவர் தான். மதுபோதையில் பேசுகிறார். நான் செல்போனில் பேச வேண்டாம், நேரில் பேசிக் கொள்ளலாம் என தெரிவித்தேன். இருப்பினும் அவர் தொடர்ந்து நான் துரோகம் செய்ததாக கூறினார். நிறைய துரோகம் இருக்கிறது. நான் அந்த வார்த்தையை பேசக்கூடாது என்று இருந்தேன். தொடர்ந்து பேசும் போது பேசித்தான் ஆக வேண்டியிருக்கிறது. நான் தவறாக எதுவும் பேசவில்லை. நான் அவர் பேசியதை பெரிதுபடுத்தவில்லை. நான் சங்கடமும்படவில்லை. யாரோ தூண்டிவிட்டிருக்கலாம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE