ஆதார், வாக்காளர் அட்டை நகல் வழங்க அவசியம் இல்லை; வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைக்க ‘6பி’ படிவம் போதும்: தலைமை தேர்தல் அதிகாரி

By கி.கணேஷ்

சென்னை: வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைப்புக்காக ‘6பி’ படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். ஆதார், வாக்காளர் அட்டை யின் நகல்களை அளிக்க வேண்டியது இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரிசெய்யும் நோக்கில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவு இருப்பதால், ஆதார் எண்ணை கட்டாயம் தரவேண்டும் என்று அறிவுறுத்தாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் வெளிப்படைத் தன்மையை பேணும் வகையில், ஆதார் அல்லது குடும்ப அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட 11 ஆவணங்களையும் இணைக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஆதார் இணைப்புக்கான பணிகள் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கியுள்ளது. குறிப்பாக, இதற்கென ‘6பி’ என்ற படிவத்தையும் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. தேசிய வாக்காளர் சேவை அமைப்பான ‘என்விஎஸ்பி போர்ட்டல்’, வாக்காளர் சேவை எண் மூலமாக இந்த இணைப்பை மேற்கொள்ளலாம்.

அல்லது, வீடு வீடாக வரும் வாக்காளர் பதிவு அலுவலரிடம் ‘6பி’ படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. வாக்காளர் பதிவு அலுவலர்கள் தாங்கள் பெற்ற படிவத்தில் உள்ள விவரங்களை இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘கருடா’ என்ற செயலியில் பதிவு செய்து வருகின்றனர். இப்பணிகளை 2023 மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் ஆவடி உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வீடு வீடாக வரும் வாக்காளர் பதிவு அலுவலர்கள், ‘6பி’ படிவத்தை அளித்து, அதில் விவரங்களை பதிவு செய்வதுடன், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல்களை கேட்பதாகவும், ஒரு வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தனித்தனி செல்போன் எண்ணை கட்டாயம் தரவேண்டும் என்று அறிவுறுத்துவதாகவும் புகார் எழுந்தது.

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், இதுபோன்று நகல்கள் கேட்கப்படுவது ஏன் என்றும், ஏற்கெனவே ஆதாரை பயன்படுத்தி சிம்கார்டு பெறுதல் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெறும் நிலையில், இது குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறியதாவது: நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி ஆதார் இணைப்பு பணிகள் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் உள்ள வாக்காளர்களில் இதுவரை 97 லட்சம் பேர் ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க பதிவு செய்துள்ளனர்.

வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் பொதுமக்கள் ‘6பி’ படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களின் நகலையும் அளிக்க வேண்டியது இல்லை.

அதேபோல, தேசிய வாக்காளர் சேவை அமைப்பான ‘என்விஎஸ்பி போர்ட்டல்’ (https://www.nvsp.in ), வாக்காளர் சேவை எண் ‘1950’ போன்றவற்றின் மூலமாகவும் வாக்காளர்கள் இந்த இணைப்பை மேற்கொள்ளலாம்.

‘6பி’ படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களின்படி செல்போன் எண்ணை அளிக்க வேண்டும். பெரும்பாலான வீடுகளில் ஒரே ஒரு செல்போன் மட்டுமே இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த எண்ணை மட்டுமே கொடுத்தால் போதும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒப்புகைச் சீட்டு தர கோரிக்கை

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளுக்காக வழங்கப்படும் 6 முதல் 8 வரையிலான படிவங்களுக்கு வழக்கமாக ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதை பயன்படுத்தி, விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்.

ஆனால், ஆதார் இணைப்புக்கான ‘6பி’ படிவத்துக்கு ஒப்புகைச் சீட்டு தரப்படுவது இல்லை. ஒப்புகைச் சீட்டு தராவிட்டால், ஆதார் இணைப்பு குறித்த நிலையைஎப்படி அறியமுடியும் என்று மக்கள் கேள்விஎழுப்பியுள்ளனர். மற்ற படிவம்போல, ஆதார் இணைப்புக்கும் ஒப்புகைச் சீட்டுதரவேண்டும் என்று கோரியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்