இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் காரசார வாதம்: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தீர்ப்பை தள்ளிவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் காரசாரமாக வாதிட்டனர். இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

‘கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து முன்னாள் முதல்வர் பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் காரசாரமாக வாதிட்டனர். அதன் விவரம்:

இபிஎஸ் மற்றும் அதிமுக தரப்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், சி.ஆர்யமா சுந்தரம், விஜய் நாராயண், வழக்கறிஞர் நர்மதா சம்பத்: தனி நீதிபதியின் தீர்ப்பில் பல தவறுகள் உள்ளன. அவர், ‘ஜூலை 11பொதுக்குழுவுக்கு ஜூலை 1-ம் தேதிநோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதிகாரம் பெற்றவரால் இந்த பொதுக்குழு கூட்டப்படவில்லை. அடிப்படை தொண்டர்களின் கருத்துகளை பெறவில்லை. ஒற்றைத் தலைமை தொடர்பாக கட்சியினர் கோரிக்கை வைத்ததாக கூறியதற்கு புள்ளிவிவரங்கள் இல்லை.1.50 கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தனரா?’ என்றெல்லாம் தெரிவித்தார்.

இவை தனி நீதிபதியின் ஊகத்தின் அடிப்படையிலானவை.

குறிப்பாக, ஜூன் 23-ம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என, மனுதாரர்கள் கேட்காத நிவாரணத்தை தனி நீதிபதி வழங்கியது அசாதாரணமானது. கட்சி விவகாரங்களில் பொதுக்குழுவின் முடிவே இறுதியானது. ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இனி ஒருபோதும் இணைந்து செயல்பட முடியாது.

தனி நீதிபதியின் உத்தரவால் கட்சி நடவடிக்கைகள் ஸ்தம்பித்துப் போய் உள்ளன. கட்சியில் தனது உரிமை பாதிக்கப்பட்டதால்தான் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தாரே தவிர, 1.50 கோடி உறுப்பினர்களின் உரிமைக்காக அல்ல. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு விபரீதமானது. எனவே, உள்கட்சி நடவடிக்கைகளில் தலையிடும் வகையிலான அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

ஓபிஎஸ், பொதுக்குழு உறுப்பினர் அம்மன் வைரமுத்து தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், பி.எச்.அரவிந்த் பாண்டியன், வழக்கறிஞர்கள் சி.திருமாறன், பி.ராஜலட்சுமி, ஸ்ரீராம்: அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களைவிட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற இபிஎஸ் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுகதான்.

இதுதொடர்பான விதியை கொண்டுவருவதில் எம்ஜிஆர் மிகவும் உறுதியாக இருந்துள்ளார். இந்த சூழலில், பொதுக்குழு கூட்டமோ, நிரந்தர அவைத் தலைவர் நியமனமோ கட்சி விதிகளின்படி நடைபெறவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகவில்லை என்பதால்தான் தனி நீதிபதி ஜூன் 23-ம் தேதிக்கு முந்தைய நிலை தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே உள்ளது. தலைமைஅலுவலகத்தின் பெயரில் ஜூலை11-ம் தேதி பொதுக்குழுவுக்கு அனுப்பிய நோட்டீஸும் செல்லாது என்பதையே தனி நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு வாதம் நடந்தது. இதைத் தொடர்ந்து, இன்று (ஆக.26) மாலைக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்