அதிமுக அலுவலகம் சூறை: சிபிசிஐடிக்கு வழக்குகள் மாற்றப்பட்டதாக தமிழக அரசு தகவல்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அதிமுக தலைமை அலுவலம் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 4 வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் தாக்கல் செய்த மனுவில், "கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தது. அப்போது ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்குள் புகுந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக அளித்தப் புகாரில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கும் ஏற்பட்ட பிரச்சினையால், இரு தரப்பினருக்கும் சுவாதீன பிரச்சினை இருந்ததாக கூறி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கபட்டது. ஆனால் அவ்வாறு எந்த பிரச்சினையும் இல்லை. அந்த சீலை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர், அதிமுக அலுவலகத்திற்குள் நாங்கள் சென்று பார்த்தோம்.

அப்போது அலுவலகத்தில் இருந்த சொத்து பத்திரங்கள், கம்ப்யூட்டர்கள், 37 வாகன ஆவணங்கள் உள்ளிட்டவற்றை காணவில்லை. ஜூலை 11-இல் புகுந்த ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆவணங்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராஜம் புகார் அளித்த புகாரை பெற்றுக்கொண்ட ராயப்பேட்டை காவல் நிலையத்தினர், ஒப்புகை சீட்டு கூட வழங்கவில்லை. உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட பிறகே புகாரை பெற்றதற்கான சான்று கிடைக்கப் பெற்றது.

ஜூலை 23 ஆம் தேதி புகார் அளித்தும், புகாரை காவல் துறையினர் உரிய முறையில் விசாரிக்கவில்லை. ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக காவல் துறை செயல்பட்டு வருவதால், புகாரை சிபிஐ அல்லது பிற விசாரணை அமைப்பிற்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம், ஆவணங்கள் சூறையாடப்பட்ட விவகாரம் தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்" எனக் கூறி, அந்த உத்தரவு நகல் தாக்கல் செய்யப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்குகள் தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்