10 ஆண்டுகளாக புதர் மண்டிக்கிடக்கும் வெள்ளலூர் குளம்: பாழாகும் 1,400 ஏக்கர் பாசன நிலங்கள்

By கா.சு.வேலாயுதன்

கோவையின் பழமையான அடையாளங்களே குளங்கள்தான். கி.பி. 12, 13-ம் நூற்றாண்டுகளில் கொங்கு மண்டலத்தை ஆண்ட கொங்கு சோழர்கள், நொய்யல் கரையில் தடுப்பணைகள் கட்டி, வாய்க்கால்கள் ஏற்படுத்தி 40 குளங்களை அமைத்து பாசனத்துக்கு உதவினர்.

தற்போது பல குளங்கள் காணாமல்போய்விட்டன. மீதமுள்ள வையும் சாக்கடைகள் நிரம்பிய குளங்களாகக் காட்சியளிக்கினறன. மாநகரில் உள்ள 8 குளங்களைப் பராமரிக்கும் பொறுப்பை, பொதுப்பணித் துறையிடமிருந்து, மாநகராட்சி நிர்வாகம் ஏற்றது. எனினும், அந்தக் குளங்களிலும் கழிவுநீர் கலப்பது தொடர்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் இக்குளங்களை சீரமைக்கப் போவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வெள்ளலூர் குளம் மீட்புக் குழு என்ற அமைப்பு, விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் ஒரு லட்சம் கையெழுத்து பெறும் இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

ராஜ வாய்க்கால்

கோவை ஆத்துப்பாலம் மயானம் அருகேயுள்ள சங்கிலிக் கருப்பன் அணைக்கட்டிலிருந்து பிரியும் ராஜ வாய்க்கால் 6.5 கிலோமீட்டர் பயணம் செய்து, வெள்ளலூர் குளத்துக்கு வருகிறது. இந்தக் குளம் 99 ஏக்கர் பரப்பு கொண்டது. இதன் மூலம் 1,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்தக் குளம் நிரம்பியிருந்த காலங்களில், சுற்றுப் பகுதிகளான போத்தனூர், நஞ்சுண்டாபுரம், வெள்ளலூர், செட்டிபாளையம், மலுமாச்சம்பட்டி, பாப்பம்பட்டி, சின்னக்குயிலி, பெரிய குயிலி, செலக்கரச்சல், இடையர்பாளையம், தேகானி என 10கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள, 30-க்கும் மேற்பட்ட ஊர்களில் 30 அடி முதல் 60 அடிக்குள் நிலத்தடிநீர் கிடைத்துவந்தது. தற்போது அது 1,000 அடிக்கும் கீழே சென்றுவிட்டதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்

கோவை மாநகரம் நெரிசல் மிகுந்த நகரமான பின்பு, கடந்த 40 ஆண்டுகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. ஆக்கிரமிப்பு வீடுகளால் வெள்ளலூர் குளத்துக்கு வரும் வாய்க்கால்களில் குப்பைகள் நிரம்பின. ஒருகட்டத்தில் வாய்க்கால்களின் பெரும்பகுதியை வீடுகள் ஆக்கிரமித்தன.

சங்கிலிக் கருப்பன் அணை உள்ள அணைமேடு மற்றும் சுண்ணாம்புக் கால்வாய் பகுதிகளில் தற்போது 500 வீடுகளுக்கு மேல் உள்ளது. வாய்க்காலுக்காக கட்டப்பட்ட மதகுகளின் மேற்புறப் பகுதி, இந்த 2 குடியிருப்புகளையும் இணைக்கும் சிறு பாதையாக மாறியுள்ளது.

இதில், சுண்ணாம்புக் கால்வாய் குடியிருப்புவாசிகள் வீசும் குப்பை, நொய்யல் ஆற்றிலிருந்து வாய்க்காலுக்கு தண்ணீர் பிரிந்து செல்லும் பாதையை அடைத்துள்ளன. இதனால், வாய்க்கல் மதகுகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் நிரந்தரமாக பூட்டி வைத்துள்ளனர்.

இதைத் திறந்து விட்டால் மழைக்காலங்களில் வரும் வெள்ளம் வழியோரக் குடியிருப்புகளை மூழ்கடித்துவிடும். அப்படி பலமுறை நடந்து, ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். எனவேதான், இந்த மதகுகளை நிரந்தரமாகப் பூட்டி வைத்துள்ளனர் அதிகாரிகள்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘நாங்கள் 40 முதல் 50 ஆண்டுகளுக்கு மேலாக இங்கேதான் வசிக்கிறோம். முன்பெல்லாம் வாய்க்காலில் தண்ணீர் வந்தால், வீடுகளுக்குள் நுழையாது. வாய்க்காலில் தடையின்றிச் சென்றுவிடும்.

ஆனால், ஆக்கிரமிப்பு வீடுகள் வந்த பின்னர், வாய்க்காலில் குப்பை, கழிவுகள் நிரம்பி, வீடுகளுக்குள் தண்ணீர்புகத் தொடங்கியது. இதனால், வாய்க்காலில் தண்ணீர் வருவதை நிரந்தரமாகவே அடைக்க வேண்டியதாகிவிட்டது. எனினும், நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்தால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துவிடும்.

எங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தால் அடுக்கு மாடிக் குடியிருப்பு வீடுகள் தருவதாகக் கூறினர். அதுவும், 321 பேருக்குத்தான் தரமுடியும் என்று கூறியுள்ளனர். இந்தப் பிரச்சினை முடிவுக்கு வருவது எப்போது என்று தெரியவில்லை” என்றனர்.

இந்த அணைமேட்டை ஒட்டியுள்ள பாலக்காடு சாலையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் பொள்ளாச்சி சாலை உள்ளது. இந்த இடைப்பட்ட தூரத்தில், வாய்க்கால் ஓரம் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இங்குள்ள பாலத்திலும், வாய்க்கால்களிலும்கூட மண்ணும், பழைய பொருட்களும், குப்பையும் நிரம்பியுள்ளன. வாய்க்காலில் வெள்ளம் வந்தால், குடியிருப்பு களில் தண்ணீர் புகுந்துவிடும்.

இதேபோல, அங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நஞ்சுண்டாபுரம் இட்டேரி பகுதியில், வாய்க்கால்கள் கரையோரம் 700 வீடுகள் உள்ளன. இங்கெல்லாம், கூப்பை நிரம்பியும், முட்புதர்கள் முளைத்தும் வாய்க்காலே வெளியில் தெரியவில்லை.

அங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளலூர் குளம் உள்ளது. இந்த குளத்துக்கான அடையாளத்தை தேடிக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. அந்த அளவுக்கு முட்புதர்கள் நிறைந்துள்ளன. மேலும், குளத்தின் நடுவில் சுமார் 30 ஏக்கர் பரப்புக்கு வண்டல் மண் எடுத்ததற்கான அடையாளமும் காணப்படுகிறது.

ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து

இதுகுறித்து வெள்ளலூர் குளம் மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறும்போது, “கோவையில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. அவற்றில், தண்ணீரே வராத அளவுக்கு சிக்கலில் உள்ளது வெள்ளலூர் குளம்தான்.

அங்கு குடியிருப்போருக்கு மாற்று வீடு தந்து, நீர்நிலைகளை மீட்பதாக 10 ஆண்டுகளுக்கு முன்பே அரசு அறிவித்தது. அதற்காக, வெள்ளலூர், மலுமாச்சம்பட்டி, பிள்ளையர்புரம், உக்கடம் கழிவுநீர்ப்பண்ணை, கீரணத்தம் பகுதிகளில் குடிசைமாற்று வாரியத்தால் 10 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

அதில் ஒரு பகுதியாக, வெள்ளலூர் குளம் ராஜ வாய்க்கால் ஆக்கிரமிப்பு வீடுகளையும் கணக்கெடுத்து, அவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே டோக்கனும் கொடுத்துள்ளனர் பொதுப்பணித் துறையினர்.

ஆனால், அதில் பல குளறுபடிகள் உள்ளன. சுண்ணாம்புக் கால்வாய், அணைமேடு, குறிச்சிப் பிரிவு, நஞ்சுண்டாபுரம் இட்டேரி பகுதிகளில் சுமார் 1,500 வீடுகள் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. அதிகாரிகளோ 321 பேருக்கு மட்டும் வீடுகளுக்கான டோக்கன் கொடுத்துள்ளனர். இந்தப் பிரச்சினையில், மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துகின்றனர்.

இதனால், நீர்நிலைகளில் குடியிருப்போருக்கு வீடு கிடைக்காத நிலை உள்ளது. இந்தப் பிரச்சனையால் வெள்ளலூர் குளம் பாழாகிக் கொண்டிருக்கிறது. இங்கு, வண்டல் மற்றும் கிரேவல் மண் எடுக்க, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தனியார் நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்தனர். இதையடுத்து, பல்லாயிரக்கணக்கான லாரிகளில் கிரேவல் மண் எடுத்தனர். விவசாயிகளின் போராட்டத்துக்குப் பின்னரே, மண் எடுக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன.

இதுபோல, பல முறைகேடுகளை சுட்டிக்காட்டியும், குளத்தை மீட்கக் கோரியும் கடந்த செப். 25-ம் தேதி கையெழுத்து இயக்கம் தொடங்கினோம். இதுவரை 10 ஆயிரம் பேருக்கு மேல் கையெழுத்திட்டுள்ளனர். மொத்தம் ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று, அரசுக்கு அனுப்ப உள்ளோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்