சென்னை: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றும், ஒப்பந்த காலம் 4 ஆண்டுகளாக மாற்றப்படுவதாகவும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 1.20 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை போடப்பட்டு வந்தது. 13-வது ஊதிய ஒப்பந்தம், கடந்த 2019-ம் ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் காலாவதியானது. பல்வேறு காரணங்களால் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தாமதமாகி வந்தது. அதன்பின் தொழிற்சங்கங்களுடன் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான 7-ம் கட்ட பேச்சுவார்த்தை, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. ஊதிய ஒப்பந்த காலத்தை 4 ஆண்டுகளாக மாற்ற வேண்டும் என்ற அரசின் கருத்து ஏற்கப்படாததால், அன்றைக்கு ஒப்பந்தம் இறுதியாகவில்லை.
இதையடுத்து, 2-வது நாளாக நேற்றும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. அப்போது, ஒப்பந்த காலம் 4 ஆண்டுகளாக இருக்க வேண்டும் என்று அரசு தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்து சிஐடியு, அண்ணா தொழிற்சங்கப் பேரவை, டிடிஎஸ்எப், ஏஐடியுசி, எஸ்விஎஸ் ஏஏபி உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தனர். மற்ற தொழிற்சங்க பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டதை அடுத்து ஒப்பந்தம் இறுதியானது.
» கோவை வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடமாற்ற முற்பட்டால் தொடர் உண்ணாவிரதம் - எடப்பாடி பழனிசாமி
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:
போக்குவரத்து ஊழியர்களுக்கான14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறைவு பெற்று, ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. தற்போதைய நிதிநிலை அடிப்படையில், ஊதிய உயர்வு ஒப்பந்தத்துக்கான காலம் 4 ஆண்டுகள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கழகங்களில் 2019-ம் ஆண்டு செப்.1-ம் தேதியன்று பணிபுரிந்த நிரந்த ஊழியர்களுக்கு, 2019 ஆக. 31-ம் தேதி பெற்று வந்த அடிப்படை ஊதியத்தை பே மேட்ரிக்ஸில் பொருத்தி, 5 சதவீத ஊதிய உயர்வு அளித்து கணக்கீடு செய்து புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படும்.
சலவைப் படி, தனி பேட்டா, ரிஸ்க், ஷிப்ட், ஸ்டீரிங், ரீபில், இரவு பயணம், இரவு தங்கல் ஆகிய இனங்களில் படித் தொகை உயர்த்தி வழங்கப்படும். மலைப் பிரதேசங்களில் பணியாற்றுவோருக்கு மாதம் ரூ.1,500 ஆக வழங்கப்பட்டு வந்த மலைவாழ்படி, ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
பணியின்போது மரணமடையும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதி, ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். இதற்காக ஊழியர்களிடம் இருந்து பெறப்படும் தொகை, ரூ.60-ல் இருந்து ரூ.110 ஆக அதிகரித்து வசூலிக்கப்படும். இந்த உயர்வு வரும் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். உயிரிழந்த ஊழியர்கள் மற்றும் மருத்துவ அடிப்படையில் விடுவிக்கப்பட்ட பணியாளர்களின் மனைவிக்கும் இலவச பயண அட்டை வழங்கப்படும். கரோனா காலத்தில் பணியாற்றிய அனைவருக்கும் சிறப்பு ஊதியமாக ரூ.300 (ஒரு பணிக்கு) வழங்கப்படும்.
சீருடைக்கான தையல் கூலி ஆண்களுக்கு ரூ.300-ல் இருந்து ரூ.400 ஆகவும், பெண்களுக்கு ரூ.250-ல் இருந்து ரூ.300 ஆகவும், மேற்பார்வையாளர்களுக்கு ரூ.300-ல் இருந்து ரூ.400 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். கடந்த 2011-21 காலகட்டத்தில் 21 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பணிக்காலம் முறைப்படுத்தப்படும். ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
7 மாதங்களுக்கு மட்டுமா?
ஊதிய ஒப்பந்த ஷரத்துகளில், ‘புதிய ஒப்பந்தப்படி, 2022-ம் ஆண்டு ஜன.1 முதல் ஜூலை 31-ம் தேதி வரை வழங்கப்படவுள்ள நிலுவைத் தொகையில் கடந்த 7 மாதமாக வழங்கப்பட்ட இடைக் கால நிவாரணத் தொகை நேர் செய்யப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறும்போது “2019-ம் ஆண்டு செப்.1-ம் தேதி முதல் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும், நிலுவைத் தொகையானது 7 மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்ற வகையில் ஷரத்துகளின் வாக்கிய அமைப்பு இடம்பெற்றுள்ளது. அந்த தொகையிலும் 7 மாதங்களுக்கு ரூ.7 ஆயிரம் (மாதம் இடைக்கால நிவாரணம் ரூ.1,000) கழிக்கப்படும் என்பதே பொருளாகும். இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்” என்றனர்.
இன்று ஆர்ப்பாட்டம்
இதனிடையே, ஊதிய ஒப்பந்த காலம் அதிகரித்ததை கண்டித்து சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் அனைத்து போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு.. எவ்வளவு?
ஓட்டுநர் - குறைந்தபட்சம் ரூ.2,012; அதிகபட்சம் ரூ.7,981
நடத்துநர் - குறைந்தபட்சம் ரூ.1,965; அதிகபட்சம் ரூ.6,640
தொழில்நுட்ப பணியாளர் - குறைந்தபட்சம் ரூ.2,096, அதிகபட்சம் ரூ.9,329
அலுவலக பணியாளர் - குறைந்தபட்சம் ரூ.1,965, அதிகபட்சம் ரூ.6,640
தொழில்நுட்ப மேற்பார்வையாளர் - குறைந்தபட்சம் ரூ.4,585, அதிகபட்சம் ரூ.8,476
பயணச்சீட்டு பரிசோதகர்கள் - குறைந்தபட்சம் ரூ.4,692, அதிகபட்சம் ரூ.7,916
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago