கர்நாடகா மாநில நெல் விவசாயிகள் தமிழக அறுவடை இயந்திரங்களை எதிர்நோக்கி இருந்தபோதும், வன்முறை சம்பவங்களால் இயந்திர உரிமையாளர்கள் அச்சத்துடன் காத்திருக்கின்றனர்.
கர்நாடகாவில் மங்களூர், ஷிமோகா, ராய்ச்சூர், பெல்லாரி உள்ளிட்ட பல பகுதிகளில் நெல் சாகுபடி அதிக அளவில் நடைபெறும். இந்தப் பகுதி கிராமங்களில் மற்ற மாநிலங்களைப் போன்றே நெல் நடவு, கதிர் அறுப்பு போன்ற பணிகளுக்கு போதிய ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால், நடவு மற்றும் அறுவடை போன்ற பணிகளுக்கு இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலும் இயந்திரங்களையே நம்பியுள்ளனர். 4-ல் ஒரு பங்கு நெல் சாகுபடி பரப்பில் மட்டும் ஆட்கள் மூலம் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மீதமுள்ள பகுதியில் நடவும், அறுவடையும் இயந்திரங்கள் மூலமே நடக்கிறது.
அறுவடை பணிக்கு கர்நாடகா மாநிலத்தில் சொற்ப இயந்திரங்களே உள்ளன. எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இருந்து தான் நெல் அறுவடை இயந்திரங்கள் ஆண்டுதோறும் அறுவடை பணிக்கு செல்கின்றன. சுமார் 700-க்கும் அதிகமான நெல் அறுவடை இயந்திரங்கள் இவ்விரு மாநிலங்களிலும் உள்ளன. இவை ஆண்டுதோறும் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என 5 மாநிலங்களிலும் சுழற்சி முறையில் அறுவடை பணிக்குச் செல்லும். இதில் டயர் மூலம் நகர்ந்து செல்லும் இயந்திரங்கள், செயின் மூலம் நகர்ந்து செல்லும் இயந்திரங்கள்(ஈரம் நிறைந்த சேற்று வயல்களில் தடையின்றி செல்ல) என 2 வகை உள்ளன. இந்த 2 வகைகளிலும் பல்வேறு திறன் கொண்ட இயந்திரங்களும் உள்ளன. திறனுக்கு ஏற்றபடி இந்த இயந்திரங்களின் அறுவடை செய்யும் வேகமும், பரப்பளவும் மாறுபடும். அதற்கேற்ப, அறுவடைக்கான கட்டணமும் வேறுபடும்.
மொத்தத்தில் கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் நெல் சாகுபடி பரப்பை அதிக அளவில் அறுவடை செய்து கொடுப்பது தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த நெல் அறுவடை இயந்திரங்கள் தான். 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே இது நடைமுறையில் உள்ளது.
அதேபோல, தற்போது கர்நாடகா மாநில கிராமங்களில் நெல் வயல்கள் அறுவடை தருணத்தை நெருங்கி யுள்ளது. ஆனால், சமீபத்தில் தமிழர் களுக்கும், தமிழக வாகனங்களுக்கும் எதிராக கர்நாடகாவில் நடந்த வன்முறை சம்பவங்களால் தமிழக, புதுச்சேரி மாநில நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் அச்சமடைந்துள்ளனர். அங்குள்ள விவசாயிகள் தமிழக, புதுச்சேரி நெல் அறுவடை இயந்திரங்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தபோதும் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்பதால் இயந்திர உரிமையாளர்கள் கர்நாடகா செல்ல தயங்கி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த நெல் அறுவடை இயந்திர உரிமையாளர் குமார் கூறியது:
அக்டோபர் மாதம் தொடங்கி விட்டாலே கர்நாடகா மாநிலம் மங்களூர் பகுதியில் நெல் அறுவடை தொடங்கி விடும். வயல்கள் அறுவடைக்கு தயாராக இருப்பது குறித்து அங்குள்ள தரகர்கள் சிலர் அறுவடை இயந்திர உரிமையாளர்களான எங்களுக்கு தகவல் அளிப்பர். உடனே இங்குள்ள வாகனங்கள் கர்நாடகாவிற்கு செல்லத் தொடங்கி விடும். இங்குள்ள இயந்திரங்களில் பெரும்பாலானவை கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு தான் செல்லும். இந்த ஆண்டும் வெளி மாநிலங்களிலுள்ள தரகர்கள் மூலம் அழைப்பு வரத் தொடங்கி விட்டது. ஆனால், கர்நாடகாவிற்கு செல்ல அச்சமாக உள்ளது.
காவிரி விவகாரம் முடிவுக்கு வராத நிலையில் அவ்வப்போது கர்நாடகா மாநிலத்தில் ஆர்ப்பாட்டம், கல்வீச்சு, வன்முறை போன்ற சம்பவங்கள் நடக்கிறது. முந்தைய கலவரத்தின்போது, வேகமாக கடந்து வரக்கூடிய கார், லாரி, பேருந்து போன்ற வாகனங்களே தாக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் சேதமானது. இந்நிலையில் நெல் அறுவடை இயந்திரங்களை உடனுக்குடன் இடம் மாற்ற முடியாது என்பதால் அங்கு செல்லவே தயக்கமாக உள்ளது. சத்தியமங்கலம், ஓசூர் வழியாக கர்நாடகா மாநிலத்திற்குள் செல்ல இன்னும் அச்சமான சூழல் நிலவுவதால், அறுவடை இயந்திர உரிமையாளர்கள் சிலர் கேரளா மாநிலம் வயநாடு வழியாக சென்று மங்களூருக்குள் நுழையத் திட்டமிட்டுள்ளனர். கர்நாடகாவில் உள்ள பெரும்பாலான விவசாயிகள், தமிழக விவசாயிகளை போல ‘தான் உண்டு தன் வேலையுண்டு’ என்பது போலத்தான் விவாசாய பணிகளில் ஈடுபடுகின்றனர். எனவே அங்குள்ள கிராமங்களில் அறுவடை பணியை தொடங்கி விட்டால் ஆபத்து நெருங்காது. சாலை வழி பயணம் தான் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே இந்த ஆண்டு பெரும்பாலான வாகனங்கள் கேரளா, ஆந்திரா பகுதிகளுக்குத் தான் நெல் அறுவடைக்கு செல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago