‘ஓர் அரிய வாய்ப்பைத் தமிழக முதல்வர் தவற விடுகிறாரோ?’ இந்தக் கேள்வி அடிக்கடி எழுந்த வண்ணம் இருக்கிறது.
அரசியல் சந்திப்புகளைத் தாண்டி ஆக்கபூர்வமான அரசு சந்திப்புகள் முதல்வரின் தலைநகர் பயணத்தில் ஏன் இடம் பெறக் கூடாது?
பிரதமரைச் சந்தித்து மனு தருவது எல்லாம் சரிதான்; கூடவே தமிழகத்துக்கு என்று சிறப்பு திட்டங்களைத் தயாரித்து, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறைச் செயலாளர்களிடம் நேரடியாக பேசி விவாதித்து எடுத்துச் சொல்லி திட்டங்களை முன்னெடுக்கலாம். இதன் மூலம் அபாரமான உடனடிப் பயன்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். முதல்வரின் டெல்லி பயணத்தில், இதையும் முக்கிய அங்கமாக சேர்த்துக் கொள்ளலாம்; சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இத்தகைய முயற்சிகள் புதிதில்லை
பள்ளிப் பிள்ளைகளுக்கு சத்துணவு திட்டம் அறிமுகப்படுத்த நினைத்தார் எம்ஜிஆர். ஆனால், மத்திய தொகுப்பிலிருந்து போதுமான அரிசி கிடைத்தால் மட்டுமே இந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியும். இதன் பொருட்டு மத்திய அரசிடம் கோரிப்பெற டெல்லி சென்றார்.
மத்திய உணவு செயலரை நேரில் சந்தித்து, கோரிக்கை வைக்க முயற்சித்தார். எம்ஜிஆர் உடன் சென்ற இரு அமைச்சர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். நல்லவேளையாக அப்போது உணவு செயலாளர் பொறுப்பில் இருந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பி எஸ் ராகவன் ஐஏஎஸ். (தற்போது 95 வயது - சென்னையில் வசிக்கிறார்)
எம்ஜிஆர் சந்திக்க விரும்புகிறார் என்பதை அறிந்த ராகவன், தமிழக முதல்வர் இருக்கும் இடம் தேடி தானே சென்றார். அவரிடம் எம்ஜிஆர் தனது கோரிக்கையை வைத்தார். ஆவன செய்வதாகக் கூறி ராகவன் உடனடியாக மத்திய அமைச்சரை சந்தித்தார். ‘நல்ல திட்டம் தமிழகத்துக்கு உதவ வேண்டும்’ என்று தனிப்பட்ட முறையில் மத்திய அமைச்சரைக் கேட்டுக் கொண்டார். உடனடியாக மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு அரிசி ஒதுக்கீடு செய்து, ஆணை பிறப்பிக்கப் பட்டது; சத்துணவுத் திட்டம் நடைமுறைக்கு வந்தது.
இப்படி, பல சமயங்களில் பல முதல்வர்கள், துறைச் செயலாளர்கள் மூலம் தத்தம் மாநிலங்களுக்குக் கொண்டு வந்த பலன்கள் அநேகம்.
எப்போதுமே, ஒரு மாநில முதல்வர்- மத்திய செயலாளர் இடையிலான சந்திப்பு, மிகுந்த பயன் தரக் கூடியதாகவே அமைகிறது. காரணம், மத்திய செயலாளர்களின் அதிகார வரம்பு அளப்பரியது. மேலும், மிக வலுவான காரணம் இருந்தாலன்றி, செயலாளரின் பரிந்துரைகளைப் பொதுவாக மத்திய அமைச்சர்கள் நிராகரிப்பது இல்லை. அதிலும் தமிழக முதல்வர் போன்று, மிகுந்த மக்கள் ஆதரவு கொண்ட ஒருதலைவர் சந்தித்துக் கேட்கிற போது,அந்தக் கோரிக்கையை மத்திய செயலாளர்கள் தீவிரமாக முன்னெடுத்து நிறைவேற்றுவதில் அலாதி முனைப்பு காட்டுகிறார்கள். வேறொன்றுமில்லை; மக்கள் தலைவர் ஒருவர் கோருகிற போது கிடைக்கும் - ‘மக்களின் விருப்பம்’ என்கிற அடையாளம்; அங்கீகாரம்.
ஒரே ஒரு ‘நிபந்தனை’ - செயலாளரிடம் முன் வைக்கும் கோரிக்கை குறித்து, முதல்வரின் ஆழமான புரிதல், தீர்க்கமான தர்க்க வாதம், இவ்வகை சந்திப்புகளில் மிக முக்கிய பங்கு வகிக்கும். எனவே டெல்லி சென்று செயலாளரிடம் விவாதிக்கும் முன்பாக, ‘வீட்டு வேலை’ சரியாகச் செய்து விட்டு செல்ல வேண்டும்.
தமிழக முதல்வரின் கனவுத் திட்டமாக அது இருந்தால், யாருடைய தயவும் இன்றி, அவர்களாகவே திட்டம் குறித்து முழுவதுமாக விளக்கிச் சொல்லி தாக்கத்தை ஏற்படுத்த முடியும். நமது முதல்வருக்கு தமிழக முன்னேற்றத்தில் தீவிர ஆர்வம் இருக்கிற காரணத்தால், மிக நிச்சயமாய், மிக உறுதியாக மிகத் தெளிவாகச் செயல்பட முடியும்.
தமிழகத்துக்கு நீண்டகால, நிரந்தரப்பயன் தருகிற ஏதேனும் ஒரு திட்டம்குறித்து தீவிரமாக ஆலோசித்து ஆழமாகவிவாதித்து விரிவான திட்டஅறிக்கை தயார் செய்து தகுந்த தயாரிப்புகள், தேவையான முன்னேற்பாடுகள் கொண்ட கோப்புடன் தமிழக முதல்வர் சம்பந்தப்பட்ட மத்திய செயலாளரை சந்தித்துப் பேசலாம்.
பெரும்பாலும், முதல்வர் இருக்கும் இடம் (தமிழ்நாடு இல்லம்) தேடி சம்மந்தப்பட்ட செயலாளர் வந்து விடுவார். நல்ல நட்புணர்வுடன் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள் ஒருபோதும் தோல்வியுறுவது இல்லை.
இது மட்டுமன்றி, பொதுவான கலந்துரையாடலுக்கும் மத்திய செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கலாம். அவர்களுடன் தமிழக முதல்வர் ஏற்படுத்திக் கொள்ளும் இணக்கம், நெருக்கம், பல சமயங்களில் பல விதங்களில் நமது மாநிலத்துக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
அரசியல் தலைவர்கள் உடனான சந்திப்பு எந்த உடனடி மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது. அதற்கு சில நாட்கள் ஆகலாம். ‘சில காட்சிகள்’ மாறினால் அன்றி, எதுவுமே நிறைவேறாமலும் போகலாம். இவையெல்லாம் அரசியலுக்கு உட்பட்ட பரிசீலனைகள். மாறாக,உயர்மட்ட செயலாளர்கள் உடனான, அரசியல் களத்துக்கு அப்பாற்பட்ட கலந்துரையாடல், எதிர்பாராத வகையில், நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.
இத்தகைய சந்திப்புகள் தமிழக முதல்வருக்கு, தலைநகர் டெல்லியில் ஒரு வலுவான அடித்தளம் அமைத்துத் தரும். தேவைப்பட்டால் ‘நாளைக்கு’ தேசிய அரசியலில், ‘அடுத்த கட்ட நகர்வு’ சமயத்தில், இந்தச் சந்திப்புகள் மிகப் பெரிய அளவில் சாதகமாக இருக்கும்.
‘அரசியல் சந்திப்புகள்’ தவிர்க்குமாறு செயலாளர்களுக்கு மத்திய அரசு அவ்வப்போது சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தலாம். இந்த அறிவுரை பொதுவாக, மாநில முதல்வர்களை துறைச் செயலாளர்கள் சந்திப்பதைக் கட்டுப்படுத்துவது இல்லை.
இது விஷயத்தில் தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தினால் மிக நல்லது. வாய்ச்சண்டை அரசியலை விடவும் வாய்ப்புகளை உருவாக்கும் ஆரோக்கியமான சந்திப்புகள் தமிழக வளர்ச்சிக்கு மிகத் தேவை.
இன்றைய நிலையில், ஐயத்துக்கு இடமின்றி தமிழகத்தின் ‘நம்பர் ஒன்’ தலைவர் - தமிழக முதல்வர் தான். எனவே அவர் எடுக்கிற முயற்சிகளுக்கு டெல்லியில் நல்ல வரவேற்பு கிட்டும். ஏன் முயற்சிக்கக் கூடாது?
ஓர் அரசியல் தலைவராக பெரும் வெற்றி பெற்றுள்ள தமிழக முதல்வர், இந்த மாநிலத்தின் தலைமை நிர்வாகியாக சாதிக்க வேண்டியவை நிறைய உள்ளன. மாற்று சிந்தனைகள், மாற்று முயற்சிகள், மாற்று வழிமுறைகள் இதற்கு மிகவும் கைகொடுக்கும்.
மாற்று முகாம்களையும் மாற்றுகிற வல்லமை, மாற்று சிந்தனைகளுக்கு உண்டு. மாற்றுக் கருத்து இருக்கிறதா?.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago