'தமிழகத்திலே வரலாறு காணாத வகையில் 52% மின் கட்டணம் உயர்வு' - ஆர்.பி உதயகுமார் கண்டனம்

By எஸ்.ஸ்ரீனிவாசகன்

சென்னை: தமிழகத்திலே வரலாறு காணாத வகையில் 52% மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கான கருத்து கேட்பு கூட்டத்தில் கட்டண உயர்வை ஆதரித்து ஒரு நபரும் பேசவில்லை என்பதால் மின் கட்டண உயர்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ''கரோனா தொற்று சூழ்நிலையில் இருந்து, பழைய நிலைமைக்கு மாற மக்கள் இன்னும் திரும்பவில்லை, ஆனால் தற்போது மின்சார கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், தமிழகம் இருளில் மூழ்கி இருந்தது அதனைத் தொடர்ந்து வந்த அன்றைய முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றினார், அதனைத் தொடர்ந்து எடப்பாடியாரும் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி, தங்கு தடையின்றி மின்சாரத்தை வழங்கினார்.

குறிப்பாக கஜா புயலில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் மின் கம்பங்கள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டன, சில இடங்களில் மின் கம்பங்கள் உடைந்தன, அதை எல்லாம் போர்க்கால அடிப்படையில் சீர் செய்து, உடனடியாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்தது எடப்பாடியார் தலைமையிலான அதிமுக அரசு.

மத்திய அரசும் அழுத்தம் கொடுத்தால் கூட அதை மக்கள் மீது சுமத்தாமல், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் ஜெயலலிதா ஆட்சியில் வழங்கப்பட்டது.

தற்போது திமுக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது குறிப்பாக ஒரு யூனிட் மின் கட்டணம் 27.50 காசு முதல் ரூ1.25 வரை உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது, சில பிரிவினருக்கு 52% வரை மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது, இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது.

சேவை கட்டணம், மீட்டர் காப்பு தொகை, பதிவு கட்டணம், வளர்ச்சி கட்டணம் என புதிதாக மும்முனை மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் கடந்த 2018ஆம் ஆண்டில் ரூ.7,450 ஆக இருந்தது, ஆனால் தற்போது அந்த கட்டணம் ரூ.54,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது, 2018 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 625% அதிகமாக உள்ளது.

அனைத்து மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறிவிட்டு, கூடுதல் மின் இணைப்பு பெற்றால் முதல் 100 யூனிட்டுக்கும் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என புதிய மின் கட்டணத்தில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு புதிய ஒருமுனைமின் இணைப்பு பெறுவதற்கு 1,600 ரூபாய் கட்டணம் இருந்தது தற்போது ரூ.9,620 அதிகரிக்கப்பட்டுள்ளது கடந்த 2018ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 501 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த புதிய மின் கட்டண உயர்வின்படி இரு மாதங்கள் சேர்ந்து வீடுகளில் 401 முதல் 500 வரை யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோர் தான் அதிகம் பாதிக்கப்பட உள்ளனர் தற்போது 500 யூனிட் பயன்படுத்தினால் 1,130 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது மின் கட்டண உயர்வால் 1,725 ரூபாய்கட்டணம் செலுத்த வேண்டும். இது 52.60% அதிகமாகும்.

மின்கட்டண உயர்வால் தொழில் முனைவோர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள், குறிப்பாக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்படும்.

இந்த மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடியார் ஆணைக்கிணங்க, 75 மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடியார், திமுகவின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வை மக்களுக்கு தோலுரித்துக் காட்டினார்.

மின் கட்டண உயர்வு தொடர்பாக, பொது மக்களிடத்தில் தமிழக அரசு சார்பில் கருத்து கேட்பு நடைபெற்றது மதுரை, கோவை, சென்னையில் நடைபெற்ற கூட்டங்களில், ஒரு நபர் கூட மின் கட்டண உயர்வை ஆதரித்து பேசவில்லை, அரசின் சார்பில் அதிகாரிகளும் இதற்கு பேசவில்லை, எத்தனை மாவட்டங்களிலும் நடைபெற்றாலும் யாரும் மின் கட்டண உயர்வை ஆதரித்து பேச மாட்டார்கள்.

மின்சாரத் துறை அமைச்சர் அண்டை மாநிலங்களை ஒப்பிட்டும், மத்திய அரசு மீது பழிகளை சுமத்தியும், மின் கட்டண உயர்வை நியாயப்படுத்தி பேசுகிறார், அவருக்கு கள நிலவரம் தெரியவில்லை.

ஆகவே முல்வரும், மின்சாரத்துறை அமைச்சரும் கள நிலவரங்களை உள்வாங்கிக் கொண்டு மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்