ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கை மீது முதல்வர் நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் நடைபெற்ற ஊழல் தொடர்பான ஒருநபர் விசாரணைக் குழு அறிக்கை மீது முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது: ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் நடைபெற்ற ஊழல் தொடர்பான ஒரு நபர் விசாரணைக் குழு அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம், விசாரணைக் குழு தலைவர் டேவிதார் 2 நாட்களுக்கு முன்பு வழங்கினார். அதன் மீது முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார்.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில இடங்களில் வடிகால்களின் குறுக்கே மரங்கள், மின் கம்பங்கள் உள்ளன. இதனால் மழைநீர் வடிகால் பணிகள் முழுமை பெறாமல் உள்ளன.

கட்டப்பட்ட மழைநீர் வடிகால்கள் முழுமையாக இணைக்கப்படாததால் சில இடங்களில் மழைநீர் தேங்கியது. பணிகளை விரைவில் முடிக்குமாறு ஒப்பந்ததாரர்களை துறை செயலர் சிவ் தாஸ்மீனா அறிவுறுத்தியுள்ளார். செப்டம்பர் மாதத்துக்குள் 80 சதவீதபணிகள் முடிக்கப்பட்டு விடும். இப் பணிகள் முடிந்தால், சென்னையில் மழைநீர் தேக்கம் இருக்காது.

கொசஸ்தலை ஆறு வடிநிலப் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் அடுத்த ஆண்டு முடிவுறும். இதுவரை 70 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. புளியந்தோப்பு போன்ற பகுதிகளில் கடந்தமுறை வெள்ள நீர் அதிகமாகத் தேங்கியது. தற்போது அப்பகுதிகளில் 90 சதவீதம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE