இருநாட்களுக்கு முன்பு படித்த செய்தி ஒன்று மிகவும் பாதித்தது. வெறும் செய்தியாக அதனை கடக்க இயலவில்லை. தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞர் ஜவஹர் பிளாஸ்டிக்கை ஒழிக்க வலியுறுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஜவஹர், தஞ்சையின் புது ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் பிளாஸ்டிக்கை ஒழிக்கக் கோரி தொடர் பிரச்சாரங்களை செய்துவந்தவர். ஆட்சியர் அலுவலக மாடியின் உச்சியில் ஏறுவது உட்பட பல்வேறு நூதனப் போராட்டங்களில் ஈடுபட்டார். இந்நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் புது ஆற்றில் பிளாஸ்டிக்கால் மூடப்பட்ட நிலையில் ஜவஹரின் சடலம் ஒதுங்கியது. தனது அலைபேசியின் காணொளி காட்சியில் அவர், “என் சாவுக்குப் பிறகாவது இந்த சமூகம் பிளாஸ்டிக்கை ஒழிக்க முன்வர வேண்டும். இயற்கையைப் பகைத்துக்கொண்டு யாராலும் உயிர் வாழ முடியாது” என்று பதிவு செய்திருந்தார்.
இந்தியா ஒவ்வோர் ஆண்டும் 5.6 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. ஒவ்வொரு நாளும் 60 நகரங்களில் 6 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் முறையாக சேகரிக்கப்படாமல் கொட்டிக்கிடக்கின்றன. கடலில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டுவதில் இரண்டாம் (ஆண்டுக்கு 0.60 மில்லியன் டன்) இடத்தில் இருக்கிறது இந்தியா. முதல் இடத்தில் இருக்கிறது சீனா (8.82 மில்லியன் டன்). நிலைமை மாறும் என்று நம்புவோம். சரி, வாருங்கள்… நாம் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் பஞ்சம்பட்டி கிராமத்துக்குச் செல்வோம்.
பேருந்தில் அந்த ஊருக்குச் செல்லும்போது பல கிலோ மீட்டருக்கு முன்பாகவே ஒரு வித்தியாசத்தை உணர முடிகிறது. வழிநெடுக இருக்கும் கிராமங்கள் அனைத்துமே படுசுத்தமாக இருக்கின்றன. எங்கும் குப்பைத் தொட்டியையோ, குப்பையையோ காண முடியவில்லை. இதோ ஊருக்குள் நுழைகிறது பேருந்து. நன்பகலிலும் குளுகுளுவென வீசுகிறது காற்று. சாலையின் இருபுறமும் ஏராளமான மரங்களுடன் பசுமை போர்த்தி வரவேற்கிறது பஞ்சம்பட்டி.
“பசுமை பொருளாதார கிராமத்துக்கு வாங்க சார்...” கைகொடுத்து வரவேற்கிறார் கருப்பையா. வயது 60-யை தாண்டிவிட்டது. ஆனால், தோற்றத்தில் தெரியவில்லை. ஒல்லியாக உறுதியான உடல்வாகுடன் இருக்கிறார். கருப்பையா முன்னாள் ராணுவ அதிகாரி. ராணுவ வீரராகப் பணியில் சேர்ந்து சுபைதார் மேஜர் வரைக்கும் பணி உயர்வு பெற்றவர். ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்க எல்லைகளில் பணியாற்றியிருக்கிறார்.
“ஒவ்வொரு விடுமுறையிலயும் ஊருக்குள்ள வர்றப்ப தண்ணி பஞ்சம் தலைவிரிச்சாடும். ஊரும் சீர்கேடா இருந்துச்சு. நிறைய குடிசைகள், சாலையிலேயே சாக்கடை, குப்பைன்னு கிடக்கும். ராணுவ ஒழுக்கத்தோட வளர்ந்த எனக்கு எல்லாமே படுசுத்தமா இருக்கணும். 48 வயசுல பணி ஓய்வு பெற்றேன். ஊருக்குத் திரும்பினேன்.
எனக்கு ஊருல சொந்த வீடு, நிலபுலன், தோப்பு எல்லாம் திருப்தியா இருக்கு. கைநிறைய ஓய்வூதியம் வருது. ஆனா, ஊருல எங்க பார்த்தாலும் காய்ச்சல், நோய் நொடின்னு ஊரு சுகமா இல்லை. கவலை மனசை அரிச்சுது. 2006-ம் வருஷம் உள்ளாட்சித் தேர்தல் வந்துச்சு. என் வீட்டுக்காரம்மா பாப்பாத்திதான், ‘‘தே… வீட்ல சும்மாதானே கிடக்கே, குப்பையை அள்ளச் சொல்லி எத்தனை தடவை மனு போட்டிருப்ப. யாராச்சும் வந்தாங்களா? நீயே பஞ்சாயத்துத் தலைவருக்கு நில்லு. பொம்பளைங்க நாங்க உன்னை ஜெயிக்க வைக்கிறோம்’’னு உசுப்பேத்திட்டாங்க. அதேமாதிரி நின்னேன். மக்கள் என்னை தேர்வு செஞ்சாங்க…” அமைதியாக புன்னகைக்கிறார் கருப்பையா.
அடுத்து அவர் அழைத்துச் சென்ற இடம் மிகப் பெரிய குப்பை கிடங்கு. பிளாஸ்டிக் கழிவுகள் மலைபோல குவிந்திருக்கின்றன. பெண்கள் மும்முரமாக வேலைப் பார்த்துக்கொண் டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தள்ளுவண்டியில் பிளாஸ்டிக் குப்பைகளைக் கொண்டுவருகிறார்கள் பெண்கள். அருகில் உள்ள அறை ஒன்றில் அரவை இயந்திரம் கரகரவென ஓடிக்கொண்டிருக்கிறது.
“எங்க கிராமத்துல மட்டுமில்லீங்க, சுத்துவட்டாரத்துல ஆலமரத்துப்பட்டி, பிள்ளையார் நத்தம், பித்தளைப்பட்டி உட்பட சுமார் 25 கிராமத்துல எங்கேயும் நீங்க பிளாஸ்டிக் குப்பைகளைப் பார்க்கவே முடியாது. எல்லா கிராமப் பஞ்சாயத்திலேயும் பேசி குப்பையை சேகரிக்கிறோம். அதை கிலோ ரூ.5 கொடுத்து விலைக்கு வாங்குறோம். தரம் வாரியாக பிரித்து, அதனை அரவை இயந்திரத்துல அரைக்கிறோம். சுத்துவட்டார கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு பக்கத்து மாவட்டங்களுக்கும்கூட அதனை கிலோ 25 ரூபாய்க்கு விக்குறோம். ஒரு நாளைக்கு 500 கிலோ வரைக்கும் போச்சு. அதனை சாலை போட பயன்படுத்துறாங்க. சுத்துவட்டார கிராமத்து சாலைகள், கொடைக்கானல் மலைப் பாதை, வத்தலக்குண்டு, மணலூர், தாண்டிக்குடி ஊர் சாலைகள் எல்லாம் நம்ம பிளாஸ்டிக்கால பளபளன்னு ஜொலிக்குது” என்கிறார் உற்சாகமாக.
கொசுக்கள் உற்பத்திக்கு முக்கியக் காரணம் பிளாஸ்டிக் கழிவுகள். சாக்கடைகள், நீர் நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் சேருவதுதான் கொசு உற்பத்திக்கு முக்கியக் காரணம். இங்கு பஞ்சம்பட்டி மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களிலும் கொசுக்களே கிடையாது. “கடந்த 10 வருஷத்துல ஊரெல்லாம் சிக்குன் குனியா, டெங்கு, மலேரியா வந்திச்சில்லையா, எங்க கிராமத்துல ஒத்தை கேஸ் பதிவாகலை. அந்த வகையில் மாவட்ட நிர்வாகமே எங்க கிராமப் பஞ்சாயத்தை பாராட்டி கவுரவிச்சிருக்கு. காரணம், படுசுத்தம். இதோ இப்ப சுத்திக்கிட்டிருக்கோமே, எங்கேயாச்சும் பிளாஸ்டிக் கழிவை கண்ணுல காட்டுங்களேன். உங்களுக்கு பரிசு தர்றேன்” என்கிறார்.
இங்கே 10 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன. குப்பை வாகனங்களில் தினசரி வீடுதோறும் குப்பை சேகரிக்கப் படுகிறது. அவற்றில் பிரித்தெடுக்கும் மக்கும் குப்பைகள் மண் புதைப் படுக்கைகளில் சேகரிக்கப்பட்டு இயற்கை உரம் தயாராகிறது.மேற்கண்ட தொழில்நுட்பங்களுக்காக காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் மகளிர் குழுக்கள் சிறப்பு பயிற்சி பெற்றிருக்கின்றன. சுமார் 50 குடும்பங்கள் இதன் மூலம் வேலைவாய்ப்பு பெறுகின்றன. வெறும் உழைப்பில் தொடங்கிய திட்டம் இது. இன்று சுமார் 10 லட்சம் ரூபாயாக அது பெருகியிருக்கிறது. இதுவே பசுமை பொருளாதாரம். இந்தப் பசுமை பொருளாதார நிதிதான் கிராமத்தில் பல்வேறு கடன் திட்டங்களாக சுழல்கிறது. மக்கள் வாழ்க்கைத்தரம் மேம்பட்டிருக்கிறது. இவை தவிர, தற்போது புதிதாக மண்புழு உரம் தயாரிக்கும் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. தேர்தல் அறிவிப்பால் திட்டம் தள்ளிப்போயிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக பஞ்சாயத்துத் தலைவர் பொறுப்பில் இருக்கிறார் கருப்பையா. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த குடிசைகளில் ஒன்றைக்கூட இப்போது பார்க்க முடியவில்லை. வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 30 வீடுகளைக் கட்டிக்கொடுத்திருக்கிறது கிராமப் பஞ்சாயத்து. கழிப்பறை இல்லாத வீடுகளே கிடையாது. குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க ஊருக்குள் 10 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் இருக்கின்றன. ஆத்தூர் அருகேயிருக்கும் காமராஜர் நீர்தேக்கத்தில் இருந்து ரூ. ஒரு கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அணைக்கு அருகிலேயே கிராமப் பஞ்சாயத்து சார்பாக கிணறு வெட்டியிருக்கிறார்கள். அதில் இருந்தும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பஞ்சம்பட்டியின் மற்றுமொரு சிறப்பு மரங்கள். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 15 ஆயிரம் மரக் கன்றுகளை நட்டிருக்கிறது கிராமப் பஞ்சாயத்து. கிராமே பசுமைப் போர்த்தியிருக்கிறது. மேற்கண்ட வளர்ச்சிப் பணிகளுக்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சிறந்த பஞ்சாயத்துத் தலைவருக்கான விருதைப் பெற்றிருக்கிறார் கருப்பையா.
பேசிக்கொண்டே சுமார் இரு கிலோ மீட்டர் நடந்திருப்போம். கடும் வெயிலிலும் மரங்கள் தந்த குளிர்ச்சி மற்றும் நிழலால் களைப்புத் தெரியவில்லை. தேசிய நெடுஞ்சாலை வந்துவிட்டது. இதோ ராமநாதபுரத்துக்குச் செல்லும் பேருந்து வருகிறது. அன்புடன் விடை கொடுத்தார் கருப்பையா. பேருந்தில் ஏறிக்கொண்டேன். ‘‘போலாம் ரைட்’’ விசில் அடித்தார் நடத்துநர்.
- பயணம் தொடரும்...
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago