வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் விரைவில் தமிழ் இருக்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட 5 தெற்காசிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் விரைவில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வலியுறுத்தலின் பேரில் மத்திய அரசால் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தலைவராக தமிழக முதல்வர் உள்ளார். கடந்த 2008-ல் கருணாநிதி தனது சொந்த நிதி ரூ.1 கோடியை வைப்புத் தொகையாக அளித்து, கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, ஆசியாவிலேயே மிக உயர்ந்த வகையில் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் அடங்கியது.

தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம்,மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கிய திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில்சிறந்த பங்களிப்பை வழங்கிய ஆய்வாளருக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 2009-ம் ஆண்டில் முதல் நபராகபின்லாந்து அறிஞர் அஸ்கோ பர்ப்போலோவுக்கு விருது அறிவிக்கப்பட்டது. அவருக்கு 2010-ல் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் விருது வழங்கப்பட்டது. அதன்பின், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் விருதுகள் வழங்கப்படவில்லை.

கடந்த ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பிறகு செம்மொழித் தமிழ் விருதை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜன. 22-ம் தேதி நடந்த விழாவில்,2010 முதல் 2019 வரையிலான 10 ஆண்டுகளுக்கான விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின்வழங்கினார். அதைத் தொடர்ந்து, 2020-ம்ஆண்டுக்கு தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள்துணைவேந்தர் ம.ராசேந்திரன், 2021-க்குமுன்னாள் தமிழ் பேராசிரியர் க.நெடுஞ்செழியன், 2022-க்கு பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர் ழான் லூயிக் செவ்வியார் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த 3 ஆண்டுகளுக்கான விருது வழங்கும் விழா, சென்னை பெரும்பாக்கத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனவளாகத்தில் நேற்று நடந்தது. ம.ராசேந்திரன், க.நெடுஞ்செழியன் ஆகியோருக்கு விருதுக்கான தொகை தலா ரூ.10 லட்சம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கருணாநிதியின் சிலையைமுதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பிரான்ஸ் நாட்டு அறிஞர் ழான் லாயிக் செவ்வியார் வெளிநாட்டில் இருந்து வர இயலாத காரணத்தால் அவருக்கு பின்னர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில், உயர்தனி செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள், சங்ககால மக்கட் பெயர்க் களஞ்சியம், தமிழகத்தில் சமணம் என்பது உள்ளிட்ட16 நூல்களையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:

இன்று சென்னையின் 383-ம் ஆண்டு பிறந்தநாள். சென்னை மேயராக நான் இருந்தபோதுதான், ‘மதராஸ்’ என்ற பெயரை ‘சென்னை’ என அப்போதைய முதல்வர் கருணாநிதி மாற்றினார். தமிழர் வாழும் இந்த நாட்டுக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியதும், ‘மெட்ராஸ்’ என்றழைக்கப்பட்ட தலைநகருக்கு ‘சென்னை’ என்று பெயர் சூட்டியதும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்ததும் திமுக அரசுதான்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 41 செவ்வியல் தமிழ் நூல்களின் ஆய்வுக்கு முதலிடம் வழங்குகிறது. செம்மொழித்தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் அவற்றின் மரபுத் தொடர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிறுவனத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதர தமிழக அரசு தயாராக உள்ளது. ஏனென்றால் இன்று நடப்பது தமிழின் ஆட்சி, தமிழின ஆட்சி. கடந்த ஆண்டு நடந்த விழாவில், வெளியிட்ட அறிவிப்புகளின்படி செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைந்துள்ள சாலையை ‘செம்மொழிச் சாலை’ என பெயர் மாற்றம் செய்து நமது அரசு செயல்படுத்தியுள்ளது.

புகழ்பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் செவ்வியல் தமிழ் இருக்கைகள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் அமைக்கப்படும் என்று அறிவித்தேன். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. முதல்கட்டமாக, ரீயூனியன் - டி லா ரீயூனியன் பல்கலைக்கழகம், இந்தோனேசியா - சுமத்ராஉத்தாரா பல்கலைக்கழகம், கம்போடியா - கெமர் மொழிகள் ஆய்வு மையம், வியட்நாம் - மொழிகள் மற்றும் பன்னாட்டு ஆய்வியல் பல்கலைக்கழகம், தாய்லாந்து - சுலாலோங்கோர்ன் பல்கலைக்கழகம் ஆகிய தெற்காசியாவில் உள்ள 5 பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகள் விரைவில் ஏற்படுத்தப்படும்.

தமிழ் மொழிக்கும். உலக மொழிகளுக்கும் இடையிலான உறவை, தொடர்பை ஆணித்தரமாக நிறுவ வேண்டியது காலத்தின் தேவை. இத்தேவையை தமிழ் இருக்கைகள் மூலம் மேற்கொள்ள வழிவகை ஏற்படும். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவை நிறைவேற்றவே, முதல்வர் பொறுப்பில் நாளும் உழைத்து வருகிறேன். அதைவிடப் பெரிய பெருமையோ, கடமையோ எனக்கு வேறு எதுவும் இருக்க முடியாது.

தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்களை செம்மொழி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. செம்மொழி நிறுவனம் முன்வைத்துள்ள இலக்குகளை அடைய தமிழக அரசு எப்போதும் துணை நிற்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், எம்.பி.,தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், தமிழ் வளர்ச்சித் துறை செயலர் மகேசன் காசிராஜன், செய்தித்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் இ.சுந்தரமூர்த்தி, இயக்குநர் இரா.சந்திரசேகரன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்