ஆகம விதிகளின்படியே அர்ச்சகர் நியமனம் - உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு முழு விவரம்

By செய்திப்பிரிவு

சென்னை: கோயில்களில் பணி நியமனம் தொடர்பான அறநிலையத் துறையின் புதிய விதிகள் செல்லும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அதேநேரத்தில் ஆகம விதிகளை பின்பற்றி கட்டப்பட்டுள்ள கோயில்களில் ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பூசாரிகள் ஆகியோருக்கான பணி நியமனம் தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு புதிய விதிகளை அறநிலையத் துறை கொண்டு வந்தது. அதன்படி, கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுபவர்கள் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு முடித்து ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்தவர்கள் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமனம் பெறலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அரசின் இந்த புதிய விதிகளில் குறிப்பிட்ட சில விதிகளை எதிர்த்து அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச்செயலாளர் பி.எஸ்.ஆர்.முத்துக்குமார் சிவாச்சாரியார் மற்றும் ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரான மயிலாப்பூர் டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

மனுக்களில் அவர்கள் கூறியிருந்ததாவது:

கோயில்களை எங்கு அமைப்பது, எப்படி அமைப்பது, பிரதான கடவுளுக்கான சன்னதி, பரிவார மூர்த்திகளுக்கான சன்னதி, அன்றாட பூஜை மற்றும் வழிபாட்டு முறைகள், சாத்துப்படி, நைவேத்யம், திருவிழாக்கள் உள்ளிட்ட கோயில்களின் மரபு சார்ந்த அனைத்தும் ஆகம விதிகளின்படியே நடைபெற்று வருகின்றன. இந்த ஆகம விதிகளை முழுமனதுடன் முறையாக கற்று, தொழில் ரீதியாக பயிற்சி எடுத்தவர்கள் மட்டுமே ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டுள்ள கோயில்களில் அர்ச்சகர்களாகவோ, ஓதுவார்களாகவோ பணிபுரிய முடியும்.

ஆகம விதிகளில் கைதேர்ந்த அனுபவமிக்கவர்கள், பத்தாம் வகுப்பில் தேர்ச்சியோ அல்லது ஓராண்டு சான்றிதழ் படிப்போ முடிக்காதவர்கள். அவர்கள் சிறுவயதிலேயே தங்களது வாழ்க்கையை முழுவதுமாக இறைபணிக்கு அர்ப்பணித்து, குருகுலக் கல்வி மூலம் தங்களது குருவிடம் தீட்சை பெற்றவர்கள். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஆகம விதிகளை கடுமையாக பின்பற்றி வேத மந்திரங்களையும், வழிபாட்டு முறைகளையும் கற்றவர்கள். அதன்பிறகு ஹோமம், கும்பாபிஷேகம் மற்றும் பூஜை வழிபாடுகளில் 3 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருந்தால் மட்டுமே அவர்கள் அர்ச்சகர் என்ற நிலைக்கு வரமுடியும்.

இந்துவாக உள்ள அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகர் ஆகலாம் என கடந்த 2006-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதை எதிர்த்து சிவாச்சாரியார்கள் சங்கம் சார்பில் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அர்ச்சகர் பணி நியமனம் என்பது ஆகம விதிகளுக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என மீண்டும் உறுதி செய்துள்ளது.

எனவே, ஆகம விதிகளின்படி, பாரம்பரிய மரபு மற்றும் மத சடங்குகளில் முறையான பயிற்சி மேற்கொண்டவர்களை மட்டுமே கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்க முடியும். ஆனால், கடந்த 2021-ம் ஆண்டு அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் இந்த தகுதிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளன. எனவே, கோயில்களில் அர்ச்சகர்கள் பணி நியமனம் தொடர்பான அரசின் புதிய விதிகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரியிருந்தனர்.

இந்த வழக்குகளை கடந்த ஆண்டு அக்டோபரில் விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆர்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, அர்ச்சகர்களின் பணி நியமனம் என்பது இந்த வழக்குகளின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

அதன்பின், இந்த வழக்குகள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி அமர்வில் தொடர்ந்து நடந்து வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், வழக்கறிஞர்கள் பி.வள்ளியப்பன், என்.ஆர்.வெங்கடேஷ் ஆகியோரும், அறநிலையத் துறை தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். நீதிபதிகள் பிறப்பித்துள்ள விரிவான தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

கோயில்களில் அர்ச்சகர்கள் பணி நியமனம் தொடர்பான அறநிலையத் துறையின் புதிய விதிகள் செல்லும். அதேநேரம், ஆகம விதிகளை பின்பற்றி கட்டப்பட்டுள்ள கோயில்களில் ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும். அதேபோல கோயில்களில் அர்ச்சகர்களையும், பூசாரிகளையும் நியமிக்கும் அதிகாரம் கோயில் அறங்காவலர்களுக்கும், தக்காருக்கும் மட்டுமே உள்ளது. அறநிலையத் துறைக்கு கிடையாது.

தமிழகத்தில் எந்தெந்த கோயில்களில் ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகிறது என்பதை கண்டறிய, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சொக்கலிங்கம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவில் மெட்ராஸ் சம்ஸ்கிருத கல்லூரி செயற்குழு தலைவர் என்.கோபாலசுவாமியை நாங்கள் நியமிக்கிறோம். மேலும், 2 பேரை குழுவின் தலைவராக உள்ள எம்.சொக்கலிங்கத்துடன் தமிழக அரசு கலந்தாலோசித்து ஒரு மாதத்துக்குள் நியமிக்க வேண்டும். இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், இக்குழுவின் அலுவல் சாரா 5-வது உறுப்பினராக செயல்படுவார்.

மேலும், இந்து சமய அறநிலையத் துறை பணியாளர் நியமனம் தொடர்பான புதிய விதிகள் 2(சி), 2(ஜி), 7, 9, 11 முதல் 15 வரையிலானவை அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பணி நியமனத்துக்கு மட்டுமானவை அல்ல. அனைத்து ஊழியர்களின் பணிநியமனம் தொடர்பானவை என்பதால் அவற்றை ரத்து செய்ய முடியாது. அந்த விதிகளை ரத்து செய்தால் நிர்வாக சீர்குலைவுக்கு வழிவகுத்துவிடும். அதேநேரம் ஆகம விதிகளை பின்பற்றி கட்டப்பட்டுள்ள கோயில்களில் ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும். அதேநேரத்தில் ஆகம விதிகளைப் பின்பற்றி கட்டப்படாத கோயில்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்