இலவசங்கள் தமிழகத்தை ஏழ்மை நிலைக்கு தள்ளிவிடவில்லை: உச்ச நீதிமன்றத்தில் திமுக வாதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இலவசங்கள் என்று பொதுமைப்படுத்தி அழைக்கப்படும் நலத்திட்டங்களால் தமிழக அரசு ஏழ்மைக்கு தள்ளப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் சார்பில் எழுத்துபூர்வமாக வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்களால் மக்கள் மத்தியில் வருமான இடைவெளி குறைந்துள்ளது. மாநில வளர்ச்சிக்கு அது வித்திட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற திட்டங்கள் தான் தமிழகத்தை ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி குறியீட்டின் அடிப்படையில் தேசத்தில் முதல் மூன்று மாநிலங்கள் பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளது. மாநில தொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 100 தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் 18 தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.

மாநிலத்தின் வளம் காரணமாக பிற மாநிலங்களில் இருந்து வேலைக்காக தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து வருவோரின் சதவீதம் 8.3 ஆக உள்ளது. தமிழக அரசின் இலவச மருத்துவ வசதிகள் ஈடு இணையற்றவை.

தமிழகம் இலவசங்களால் பின்னோக்கிச் செல்வதாக குறிப்பிட்டு மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயாவை நாங்கள் சில ஆண்டுகள் தமிழகத்தில் வசித்துப் பார்க்குமாறு அழைப்பு விடுக்கிறோம். அப்படித் தங்கிப் பார்த்தால்தான் சமூக நலத் திட்டங்கள் ஒரு சமூகத்தை ஒட்டுமொத்தமாக எப்படி மேம்படுத்துகிறது. அவை மக்களின் மகிழ்ச்சிக்கு எப்படி வித்திடுகிறது என்பதை உணர்ந்து அறிந்துகொள்ள முடியும்.

மேலும் இலவசங்கள் என்ற வார்த்தையே மிகவும் கடுமையான சொல்லாடல். இது நலத்திட்டங்கள் மீது எதிர்மறை சாயம் பூசுகிறது. உண்மையில் இவை சமூக ரீதியாக பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள். உயர் சாதியினர் ஆண்டாண்டு காலமாக கட்டவிழ்த்த அடக்குமுறையால் நலிவடைந்து கிடந்த சமூகத்தினருக்கு நலத்திட்டங்கள் அவசியமானவை.

இன்று சில முன்னேறிய சமூகங்கள், தலைமுறை தலைமுறையாக வசதியாக வாழும் சமூகங்கள் ஏன் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு கல்வி, புத்தகங்கள், பயணம், மருத்துவம், உணவு என எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பலாம். அதற்கு ஒரே பதில்தான் இருக்கிறது. அவர்களுக்கு சமூகத்தின் மேல்மட்டத்தினருக்குக் கிடைத்த அதே வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. மறுக்கப்பட்ட வாய்ப்புகளை நாங்கள் வழங்குகிறோம்.

ஆகையால் எங்களின் திட்டங்கள் இலவசங்கள் அல்ல. மாறாக அவை சமூக, பொருளாதார சமத்துவத்தைக் கொண்டு வருவதற்கான கருவி. தமிழக அரசு சமூக நீதியை நிலைநாட்டுவதில், சமூக நலத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக இருக்கிறது.

தமிழக அரசு மகளிர்க்காக விலையில்லா பேருந்து பயணத்தை அமல்படுத்தியுள்ளது. இதனால் பெண்களின் வருமானத்தில் 12% சேமிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது அவர்கள் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்த சேமிப்பை அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பயன்படுத்துவார்கள். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் பணத்தை கணக்குப் போட்டு துல்லியமாக செலவு செய்ய முடியாது. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. ஒரு மாநிலம் தன் மக்கள் நலனுக்காக பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பது நிச்சயமாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இவ்வாறு அந்த எழுத்துபூர்வ பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ந்து பார்க்காமல் அறிவிக்கப்படும் இலவசங்களால் மாநில அரசுகள் கடன் சுமைக்கு ஆளாவதாக அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது. இந்த மனுவுக்கு தாக்கல் செய்யப்பட்ட திமுகவின் பதில் மனுவில் தான் மேற்கூறிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

ரிசர்வ் வங்கி உறுப்பினரின் கருத்து: முன்னதாக நேற்று ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு உறுப்பினர் அசிமா கோயல் அளித்த பேட்டியில், "இலவசங்கள் எல்லாம் எப்போதும் இலவசமாக வழங்கப்படவில்லை. அரசியல் கட்சிகள் இலவசங்கள் பற்றி வாக்குறுதி கொடுத்தால் அவர்கள் தான் அதற்கான நிதி ஆதாரம் பற்றி வாக்காளர்களுக்கு விளக்கிக் கூற வேண்டும். மாறி மாறி அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்கும் போட்டி வெகுஜன ஈர்ப்பு வாக்குறுதிகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இலவசங்கள் உண்மையில் உங்களுக்கு இலவசமாகக் கிடைப்பதில்லை.

மானியங்களாக வழங்கப்படும் இலவசங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் அத்தகைய மானியங்கள் உற்பத்தியை பாதித்து மறைமுக செலவை அதிகரிக்கிறது. பஞ்சாபில் இலவசம் மின்சாரம் கொடுத்ததால் அங்கே நிலத்தடி நீர் அளவு குறைந்ததுதான் மிச்சம். இலவசங்களுக்கு செலவிடுவதால் மக்களுக்கு தரமான கல்வி, சுகாதாரம், காற்று, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காமல் போய்விடும்.

அதனால் கட்சிகள் இலவசங்களை அறிவிக்கும்போது அதற்கான நிதி எங்கிருந்து வரும் என்பதையும் வாக்காளர்களுக்கு விவரிக்க வேண்டும். இதனால் மக்கள் போட்டி வெகுஜன ஈர்ப்பு வாக்குறுதிகளால் ஈர்க்கப்படுவது குறையும்" என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

பிரதமரும் கண்டனம்: அண்மையில் பானிப்பட்டில் 2ஜி எத்தனால் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்து பேசிய பிரதமர் மோடி, "அரசியலில் சுயநலம் இருந்தால், இலவச பெட்ரோல் மற்றும் டீசல் வழங்குவதாக யார் வேண்டுமானாலும் அறிவிக்கலாம். இலவசங்களால் நமது குழந்தைகளின் உரிமைகளைப் பறிக்கப்படுவதோடு, நாடு தற்சார்பு அடைவதும் தடைபடும். இதுபோன்ற சுயநல கொள்கைகளால், நேர்மையாக வரி செலுத்துவோரின் சுமையும் அதிகரிக்கும். நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தெளிவான நோக்கம் மற்றும் உறுதிப்பாடு தேவை. இதற்கு கடின உழைப்புடன் சரியான கொள்கை மற்றும் பெருமளவிலான முதலீடுகளும் தேவை," என்று பேசியிருந்தார்.

சமீபகாலமாக இலவசங்கள் தொடர்பான வாத விவாதஙகள் எழுந்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்