சென்னை: சாலையோரம் சுற்றி திரிபவர்கள், ஆதரவற்றோர், மனநிலை பாதிக்கப்பட்டவர்களை மீட்டு காவல்துறை அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து வருகிறது. மேலும், உரிமை கோரப்படாத உடல்களை போலீஸார் தன்னார்வலர்கள் உதவியுடன் நல்லடக்கம் செய்கின்றனர்.
குற்றச் செயல்களை தடுத்தல் உட்பட பல்வேறு பணிகளை காவல்துறை மேற்கொள்கிறது. இதனுடன் சேர்த்து சில மனித நேய பணிகளையும் சென்னை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, ‘மனிதம் போற்றுவோம்’, ‘மனித நேயம் காப்போம்’ என்பதை அடிப்படையாக வைத்து ‘காவல் கரங்கள்’ என்ற திட்டம் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இதை 2021 ஏப்ரல் 21-ல் தொடங்கி வைத்தார்.
கைவிடப்பட்ட நபர்கள், ஆதரவற்ற முதியோர், பெண்கள், குழந்தைகள், மன நலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் சுற்றித் திரிபவர்களை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்தல், குணமடைந்தவர்களை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தல், ஆதரவற்றவர்களை தேவைக்கு தகுந்தாற்போல் பாதுகாப்பான காப்பகங்களில் தங்க வைத்து பராமரித்தல் ஆகிய பணிகளை காவல் துறையின் ‘காவல் கரங்கள்’ மேற்கொள்கிறது.
» வடமாநிலங்களில் தொடர் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு
இந்த உதவி மையத்துடன் 40 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், 120 தன்னார்வலர்கள், 55 மாநகராட்சி இல்லம், 148 தனியார் இல்லம், சமூக நலத்துறை, 108 ஆம்புலன்ஸ் ஆகியவை இணைந்து ஆதரவற்றவர்களை மீட்டு அவர்களுக்கு உதவி செய்து வருகிறது. மேலும், தன்னார்வலர்களின் உதவியுடன் உரிமை கோரப்படாத ஆதரவற்றோரின் உடல்களை அடக்கம் செய்கின்றனர்.
அதன்படி, காவல் கரங்கள் உதவி மையம் மூலம் இதுவரை 2,658 வீடற்ற, ஆதரவற்ற நிலையில் உள்ளோர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2,111 பேர் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 269 பேர் அவர்களின் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். 258 பேர் மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 20 நபர்கள் மருத்துவமனையில் சேர்த்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டும் அல்லாமல் நன்கொடையாளர்களிடமிருந்து உணவு சேகரிக்கப்பட்டு காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்படுவோருக்கு தினமும் இலவச உணவு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறும்போது, “சென்னையில் மன நலம் சரியில்லாமல் ஆதரவின்றி சுற்றித் திரிந்த ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை மீட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் சேர்த்துள்ளோம்.
இதேபோல், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்த தென் மாநிலங்களான தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, ஆந்திராவைச் சேர்ந்த 90-க்கும் மேற்பட்டோரை மீட்டு சென்னை அழைத்து வந்து உரிய சிகிச்சை அளித்து அவர்களை அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்துள்ளோம். சிலருக்கு மனிதாபிமான அடிப்படையில் வேலையும் வாங்கிக் கொடுத்துள்ளோம். காவல் கரங்கள் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தினத்தன்று எனக்கு ‘நல் ஆளுமை’ விருது வழங்கினார்.
இளம் தலைமுறையினர் சமுதாயத்துக்கு தொண்டு செய்யும் வகையில் காவல் கரங்கள் உதவி மையத்தில் மாணவர்களை இணைத்துள்ளோம். சாலையோரம் சுற்றி திரிபவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவின்றி இருப்பவர்கள் குறித்து 9444717100 என்ற தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.
ரயில்களில் தீவிர கண்காணிப்பு
மன நலம் பாதிக்கப்பட்ட சிலரை வட மாநில போலீஸார் ரயில் மூலம் தமிழகத்துக்கு அனுப்பி வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, “ரயில்வே காவலர்களுடன் இணைந்து வடமாநிலங்களில் இருந்து சென்னை வரும் ரயில்களை உன்னிப்பாக கண்காணிக்கிறோம்.
மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் ரயிலில் வந்தாலும் அவர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி உட்பட அனைத்து வகையான உதவிகளையும் செய்து வருகிறோம். இதற்காக இந்தி உட்பட பிற மொழி தெரிந்த போலீஸார் எங்களிடம் உள்ளனர். இதேபோல் சென்னையில் இருந்து மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் பிற மாநில ரயில்களில் ஏற்றி அனுப்பப்படுகிறார்களா என்பதையும் கண்காணிக்கிறோம்” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago