6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தவுள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் 

By ந. சரவணன்

வேலூர்: தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரி தொடங்க மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள், கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது குறித்து இந்த வாரம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பேச இருப்பதாகவும், காலியாக உள்ள 4,308 பணியிடங்கள் எம்ஆர்பி மூலம் வரும் அக்டோபர் இறுதிக்குள் நிரப்பப்படும் எனவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

தமிழகத்தில் கரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாநிலம் முழுவதும் 34வது மெகா கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று நடைபெற்றது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலும் கரோனா தடுப்பூசி முகாம் இன்று பல்வேறு இடங்களில் நடைபெற்றது. வேலூர் சத்துவாச்சாரி நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தும் முகாமை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். வேலூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியதாவது, ''கரோனா தடுப்பூசி செலுத்துவதில் வேலூர் மாவட்டம் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக உள்ளது. மாநிலம் முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவு படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்த வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை 96.99%, 2-வது தவணை 89.5% செலுத்தப்பட்டுள்ளது. 3.50 கோடி நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது.

இன்று (நேற்று) 952 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தற்போதைக்கு 27 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்தில் கையிருப்பில் உள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தடுப்பூசி செலுத்தும் பணியில் சுணக்கம் காணப்பட்டது. அதன்பிறகு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதிகரித்து தற்போது தன்னிறைவு பெற்றுள்ளது.

இந்த வாரம் நானும், துறை செயலாளரும் டெல்லி சென்று மத்திய சுகாதார துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம். அப்போது மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள், கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைப்பது குறித்து பேச உள்ளோம். அதேபோல, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, தென்காசி, பெரம்பலூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டத்துக்கு புதிய மருத்துவக்கல்லூரி அமைக்கவும், கூடுதல் தடுப்பூசி தமிழகத்துக்கு கேட்க உள்ளோம்.

தமிழக மருத்துவத்துறையில் காலியாக உள்ள 4,308 பணியிடங்கள் வரும் அக்டோபர் மாதம் இறுதிக்குள் எம்ஆர்பி மூலம் நிரப்படும். வேலூர் பழைய அரசு மருத்துவமனை (பென்லேன்ட்) தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேட்டுக்கொண்டதற்கு இனங்க காட்பாடியில் மல்டிஸ்பெசாலிட்டி மருத்துவமனை கட்ட 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான இடம் தேர்வு பணிகள் முடிந்த பிறகு அடுத்தக்கட்ட பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் குரங்கம்மை, தக்காளி காய்ச்சல் குறித்து தொடர் கண்காணிப்பு செய்து வருகிறோம். இதுவரை தமிழகத்தில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. வெளிநாடுகளில் இருந்து வருவோர்களை 24 மணி நேரம் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

கேரளாவையொட்டி 13 இடங்களில் தொடர் கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெறும் பன்னாட்டு மருத்துவ மாநாட்டில் மத்திய அமைச்சரோடு தமிழக அமைச்சருமான நானும் கலந்து கொள்கிறேன். அதில் உலத்துக்கே முன்மாதியாக உள்ள வீடு தேடி மருத்துவ திட்டம் குறித்து ஆவணப்படுத்த உள்ளோம்.

இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் 85 லட்சத்து 36 ஆயிரத்து 501 பேர் இதுவரை பயன் பெற்றுள்ளனர். இந்த திட்டம் உலத்துக்கே முன்மாதிரியான உள்ளது. துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு மருத்துவர்கள் பணியமர்த்த பாலிகிளினிக் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சத்துவாச்சாரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை ஒவ்வொரு சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளன. இது தொடர்பான தகவல் அறிவிப்பு பலகையில் இடம் பெறும். அதை பார்த்து பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளன. இருந்தாலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்படும் திடீர் சோதனைகள் நடந்து வருகிறது. இதன் மூலம் தவறு கண்டறியும் போது தவறு செய்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை என நோயாளிகள் அலைக்கழிக்கப்பட்டாலோ அல்லது புகார் எழுந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தாய்-சேய் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. காப்பீடு திட்டம் அரசு மருத்துவமனைகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.'' இவ்வாறு அவர் கூறினார்.

இதைதொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற மெகா தடுப்பூசியை முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேவராஜி (ஜோலார்பேட்டை), அ.செ.வில்வநாதன் (ஆம்பூர்), நல்லதம்பி (திருப்பத்தூர்), வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்